மும்பை சிறையில் விடியோ கான்பரன்ஸிங் மூலம் நீதிமன்ற விசாரணையில் பங்கேற்க மும்பை தாக்குதல் வழக்கில் மரணதண்டனை பெற்ற தீவிரவாதி அஜ்மல் கசாப் மறுப்பு தெரிவித்தான்.
கடந்த 2008-ம் ஆண்டு நடந்த மும்பை தாக்குதல் வழக்கில் பிடிபட்ட தீவிரவாதி அஜ்மல் கசாப் மீதான குற்றச்சாட்டுகளில் மும்பை சிறப்பு நீதிமன்றம் விசாரித்து அவனுக்கு மரண தண்டனையை வழங்கியுள்ளது. இதை தொடர்ந்து மரண தண்டனையை உறுதி செய்வதற்கான இறுதி விவாதம் மும்பை உயர் நீதிமன்றத்தில் தற்போது நடந்து வருகிறது.
அஜ்மல் கசாபை பாதுகாப்புக் காரணங்களுக்காக நேரடியாக நீதிமன்றத்தில் சிறை அதிகாரிகள் கொண்டு செல்வதில்லை. இதனால் விடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் விசாரணையில் கசாப் பங்கேற்று வருகிறான். இந்நிலையில் நீதிமன்றத்தில், கசாப் வழக்கு விசாரணை புதன்கிழமை நடைபெற்றது. காலை 11 மணிக்கு நீதிமன்றம் கூடியதும் நீதிபதிகள் ரஞ்சனா தேசாய், ஆர்.வி. மோரே ஆகியோர் வந்து அமர்ந்தனர்.
அப்போது விடியோ கான்ஃபரன்ஸ் வசதி முன்பு நீதிமன்றத்தில் ஆஜராக கசாப் மறுப்பு தெரிவிப்பதாக நீதிபதிகளிடம் சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அரசு வழக்கறிஞர் உஜ்வல் நிகாம் கசாபுக்கு மரண தண்டனையை உறுதி செய்யவேண்டும் என கடந்த 3 நாள்களாக வாதாடி வருகிறார். வாதத்தின்போது வழக்கறிஞர் உஜ்வல் கூறியதாவது:
கசாபும், அவரது கூட்டாளி அபு இஸ்மாயிலும் மும்பையில் கண்மூடித்தனமாக சுட்டனர். அதற்கான ஆதாரங்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும் போலீஸ் அதிகாரிகளின் சாட்சியங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த 2 தீவிரவாதிகளுடன் துப்பாக்கி சண்டையிட்ட கூடுதல் போலீஸ் கமிஷனர் சதான் மற்றும் போலீஸ் அதிகாரி டேட் ஆகியோரின் சாட்சியங்களும் நீதிமன்றத்தில் தரப்பட்டுள்ளன. இந்த 2 தீவிரவாதிகளும் மும்பை காமா மருத்துவமனையில் நுழையாதவாறு அங்கிருந்த செவிலியர்கள் கதவுகளை மூடிவிட்டனர். இதனால் தீவிரவாதிகளால் அங்கு நுழைய முடியவில்லை. இதன்மூலம் ஏராளமான பேர் காப்பாற்றப்பட்டனர் என்றார் அவர்.
இதைத் தொடர்ந்து கசாபின் வழக்கறிஞர் அமின் சோல்கர் கூறியதாவது: என்னுடைய கட்சிக்காரரை (கசாப்) சந்திக்க அனுமதி அளிக்கப்படவில்லை. சிறையில் அனுமதிக்கப்படும் நேரத்தைக் கடந்து நான் அவரைச் சந்திக்க வந்ததால் அனுமதி தரமுடியாது என சிறை அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர். அவரை சந்திக்க எனக்கு அனுமதி பெற்றுத் தரவேண்டும் என்றார் அவர். இதையடுத்து எந்த நேரத்திலும் கசாபைச் சந்திக்க அமின் சோல்கருக்கு அனுமதி வழங்கவேண்டும் என்று சிறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிடும் என நீதிபதிகள் அப்போது அறிவித்தனர்.
மரண தண்டனையை உறுதி செய்யும் விஷயத்தில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிமன்றம் கசாபின் மனுவை விசாரிக்கும் என்று தெரிகிறது. விடியோ கான்பரன்ஸ் வசதி மூலம் கசாப் செவ்வாய்க்கிழமையும் ஆஜராவில்லை. மேலும் காமிரா மீது அவர் காறி துப்பி ரகளை செய்தார். தன்னை நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த அனுமதிக்கவேண்டும் என்று கூறிய கசாப், காமிரா மீது துப்பிவிட்டு எழுந்து சென்றுவிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக