வெள்ளி, 29 அக்டோபர், 2010

சென்னை விமானத்தில் 2 கோடி ம்திப்புள்ள நவரத்தின கற்களை வயிற்றில் கடத்தியவர் கைது!

சென்னை மீனம்பாக்கம்  விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் கொழும்பில் இருந்து வந்த விமானத்தில் ஒரு வாலிபர்  நவரத்தின கற்களை கடத்தி வருவதாக புறநகர் போலீஸ் ஆணையர் ஜாங்கிட்டுக்கு ரகசிய தகவல் கிடைத்தன் அடிப்படையில் காவல்துறை அவ்விமானத்தில் வந்தவர்களை கண்காணித்தனர். அப்போது கார் பார்க்கிங் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

சென்னைக்கு சுற்றுலா விசாவில் வந்த இலங்கை காலே பகுதியை சேர்ந்த முகமது சபீக் (வயது 43) என்பவர் மீது சந்தேகப்பட்டு  போலீசார் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பேசினார். ஆனால் அவரிடம் எப்பொருளும் கிடைக்கவில்லை என்பதால் போலீசார் கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று எக்ஸ்ரே எடுத்தனர். அவரது வயிற்றில் பூக்கள் போல் சில கவர்கள் இருப்பது தெரிந்தது. உடனே முகமது சபீக்கிடம் விசாரித்தபோது வயிற்றில் நவரத்தின கற்களை கடத்தி வந்ததை ஒப்புக் கொண்டார்.

பின்னர் அவருக்கு வாழைப்பழம் மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டு  சுமார் 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அவரது வயிற்றில் இருந்து  வெளியே வந்த 42 ஆணுறையில் விலை உயர்ந்த நவரத்தின கற்கள் இருந்தன. சுமார் 1 கிலோ எடை கொண்ட 2,065 கற்களின்  மதிப்பு ரூ.2 கோடியாகும்.

இது பற்றி போலீசாரிடம் கூறிய முகமது சபீக் தான் வேலையின்றி இருந்ததால் ஒரு கடத்தல் கும்பலுக்காக குருவி போல் வேலை பார்த்ததாகவும் கொழும்பில் இருந்து சென்னைக்கு இதுபோன்ற பொருட்களை எடுத்து வந்து சென்னை மண்ணடியில் உள்ள லாட்ஜில் தங்கியிருப்பேன் என்று கூறினார்.  மேலும் இவ்வேலைக்காக  கொழும்பில் இருந்து சென்னைக்கு விமான டிக்கெட் மற்றும் ரூ.10 ஆயிரம் பணம் தருவார்கள் என்றும் கூறினார்.  இம்முறை அதிகாலை 4 மணிக்கு ஆணுறையில் இருந்த கற்களை மாத்திரை சாப்பிடுவதுபோல சாப்பிட்டு தண்ணீர் குடித்து 1 மணி நேரத்தில் 42 பொட்டலங்களையும் விழுங்கி வந்து சோதனைகளை முடித்துக் கொண்டு கார் பார்க்கிங் பகுதிக்கு வந்தபோது போலீசாரிடம் சிக்கி விட்டதாக கூறினார்.

கருத்துகள் இல்லை: