திங்கள், 25 அக்டோபர், 2010

ராஜீவ் சிலை அவமதிப்பில் என் மீது அபாண்டம்: கூட்டணி உறவு பாதிக்காது; திருமாவளவன் பேட்டி

திட்டக்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
 
கடந்த 21-ந்தேதி காலை 10.30 மணிக்குதான் எனக்கு ராஜீவ்காந்தி சிலை அவமதிக்கப்பட்ட சம்பவம் தெரியும். இத்தகைய கீழ்த்தரமான செயல்பாடுகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருபோதும் ஈடுபடாது. இது ஒரு அபாண்டமான அவதூறு.

இது குறித்து சோனியாகாந்திக்கு விளக்கமாக கடிதம் எழுதியுள்ளேன். உண்மையான காங்கிரஸ்காரர்கள் இந்த அவதூறை நம்பவேண்டாம். அத்துடன் அரசியல் ஆதாயம் தேடுவதற்காகவும், என்மீது அபாண்ட பழியை சுமத்தவும், ராஜீவ்காந்தி சிலையை அவமதிக்கும் கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபட்டோரை வன்மையாக கண்டிக்கிறோம்.
 
இத்தகைய சமூக விரோதிகளை அடையாளம் கண்டு அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசிடம் கேட்டுக்கொள்கிறோம். காங்கிரஸ்கட்சியில் உள்ள எந்த தனிமனிதர்களையும் நான் விமர்சிக்கவில்லை.

அவர்கள் மீது குற்றம்சாட்டி பேசியதும் இல்லை. லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்ஷேவை காமன்வெல்த் நிறைவு விழாவிற்கு அழைத்தது தமிழர்களை கொச்சைப்படுத்தியதாக எழுந்த மனவேதனையில்தான் எனது உணர்வுகளைக் கொட்டினேன். மற்றப்படி காங்கிரஸ் கட்சி தலைவர்களை நான் என்றுமே மதிக்கத்தவறியதில்லை.
 
நான் என்றுமே தனிமனித உணர்வுகளை மதிப்பவன். தமிழக முதல்-அமைச்சர் என்னைத் தூண்டிவிட்டு பேச சொல்லுகிறார் என்பதெல்லாம் அ.தி.மு.க. வினரும், அ.தி.மு.க. அணிக்கு மாறவேண்டும் என விரும்பும் சிலரும் பரப்பிவிடும் அபாண்டமான அவதூறு. கலைஞர் என்றுமே எனது கருத்துகளில் உடன்பாடு அல்லது முரண்பாடு எதுவாக இருந்தாலும் அதில் தலையிட்டதில்லை, இதை பேசு, அதைபேசு என்று கூறியதில்லை.
 
முதலமைச்சர் மீதே இவ்வாறு அவதூறு பரப்புவதில் இருந்தே இதன் உள்நோக்கம் என்ன என்பதை புரிந்து கொள்ளலாம். காங்கிரஸ் கட்சி தயவில்தான் விடுதலை சிறுத்தைகட்சி வெற்றி பெற்றது. எனவே திருமாவளவன் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை பார்க்கும்போது எனக்கும் ஒரு தார்மீக உரிமையுள்ளது.
 
விடுதலைசிறுத்தை கட்சி தயவில் வெற்றி பெற்ற 9 காங்கிரஸ் கட்சி எம்.பி.க்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை கூட்டணி தர்மத்திற்கு மாறாக நான் முன்வைக்கமாட்டேன். திருமாவளவனை கைது செய்யும்வரை போராடுவோம் என காங்கிரஸ் கட்சியில் சிலர் கூறுகின்றனர். கைது, சிறை போன்றவற்றுக்கு அஞ்சக்கூடிய கட்சி அல்ல விடுதலைச்சிறுத்தை கட்சி.

ஆனால் குற்றம் செய்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலரே இவ்வாறு பேசுகின்றனர். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் தங்கபாலுதான். நான் அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெளிவாக பேசியுள்ளேன்.
 
இன்னும் சில காங்கிரஸ் முன்னணி தலைவரிடமும் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளேன். எனவே எந்த வகையிலும் கூட்டணி உறவு பாதிக்காது. யார் தூண்டினாலும், சீண்டினாலும் விடுதலை சிறுத்தை கட்சியினர் அமைதி காக்க வேண்டுகிறேன். ஈழத்தமிழர் விவகாரத்தில் இந்திய அரசு உடனடியாக தலையிட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தமிழர் பகுதியில் சிங்களர் குடியேற்றம் தீவிரமாக நடந்து வருகிறது.
 
ஈழத்தமிழர்களுக்கான நிவாரணபணி மறுவாழ்வு, மறு கட்டுமானபணிகள் முறையாக நடைபெறவில்லை. மத்திய அரசு அளித்த உதவித்தொகை தமிழர்களை சென்றடையவில்லை. இன்னும் 1 1/2 லட்சத்திற்கும் மேலான ஈழத்தமிழர்கள் சிறையில் அடைபட்டுக் கிடக்கின்றனர்.

போராளி என்ற பெயரில் 11 ஆயிரம் பேர் இருட்டுக் கொட்டகையில் சிறை வைக்கப்பட்டு வதை செய்யப்படுகின்றனர். இளம் பெண்களும், இளைஞர் களும் கடத்தப்படுவதும், கொலைசெய்யப்படுவதும் தொடர்கிறது.
 
இளம் பெண்கள் கட்டாயப்படுத்தப்பட்டு விபசாரம் செய்வதில் ஈடுபடுத்தப்படுகின்றனர். போதைப்பொருட்கள் வெளிப்படையாக புழக்கத்தில் விடப்படுகிறது. சிங்களர்கள் திட்டமிட்டு தமிழர்களை சீர்குலைத்து வருகின்றனர். இந்திய அரசு தலையிட்டு பாதுகாக்க வேண்டிய தார்மீக கடமை அரசுக்கு உள்ளது.
 
இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

கருத்துகள் இல்லை: