புது டில்லி : 1992 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டதை, "உச்சநீதிமன்றம் தடுக்க வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டிருந்தால் தடுத்திருக்க முடியும்" என்று உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி அஹ்மதி கருத்து தெரிவித்துள்ளார்.
அயோத்தி தீர்ப்பு குறித்த மக்கள் சமூகத்தின் நிலைப்பாடு எனும் தலைப்பில் இன்ஸ்டியூடூட் ஆப் ஆஃப்ஜக்டிவ் ஸ்டடிஸ் ஏற்பாடு செய்த கருத்தரங்கில் பேசிய அஹ்மதி, பாபர் மசூதி இடிப்புக்கு முன் உச்சநீதிமன்றத்தில் அப்போதைய அட்டர்னி ஜெனரல் மிலன் பானர்ஜி மசூதி இடிக்கப்படுவதற்கு ஏராளமான சாத்தியக்கூறுகள் உண்டு என்றும் அந்நிலத்தை உடன் மத்திய அரசிடம் ஒப்படைத்து மசூதி இடிக்கப்படுவதை தடுத்து நிறுத்தும்படி உச்சநீதிமன்றத்தில் அப்போது இவ்வழக்கை விசாரித்து வந்த நீதிபதிகள் வெங்கடாச்சலையா மற்றும் ரேயிடம் வலியுறுத்தியதை நினைவூட்டினார்.
அட்டர்னி ஜெனரலின் கோரிக்கையை ஏற்று அந்நிலத்தை மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் ஒப்படைத்திருந்தால் பாபர் மசூதி இன்றும் அதே இடத்தில் இருந்திருக்கும் என்று கூறிய அஹ்மதி, அதற்குப் பதிலாக அடையாள கரசேவை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது தவறானது என்றும் பாபர் மசூதி இடிப்புக்காக கல்யாண் சிங்குக்கு வழங்கப்பட்ட ஒரு நாள் தண்டனை நகைப்புக்கிடமானது என்றும் கூறினார்.
மேலும் அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பை ஒரு நீதிமன்றத்தின் தீர்ப்பாகவே கருத முடியவில்லை என்றும் இந்திய அரசியல் சாசனம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது என்றும் அஹ்மதி கூறினார். மேலும் இவ்விழாவில் பேசிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சையது சஹாபுதீன் உள்ளிட்ட பலர் இது முஸ்லீம் மற்றும் இந்து நம்பிக்கைக்கும் இடையிலான மோதல் அல்ல என்றும் அரசியல் சாசனம் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில் தீர்ப்பு கொடுக்கபட வேண்டுமே தவிர குரான் மற்றும் கீதையின் அடிப்படையில் அல்ல என்றும் கூறினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக