வெள்ளி, 22 அக்டோபர், 2010

நாடாளுமன்ற கட்டிட வாயில் மூடப்பட்டதால் திருப்பி அனுப்பப்பட்ட மன்மோகன் சிங்!

டில்லி காவல்துறைக்கும் நாடாளுமன்ற பாதுகாவல் அலுவலர்களுக்கும் உள்ள ஈகோ மோதல் காரணமாக கடந்த ஆகஸ்டு மாதம் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நாடாளுமன்ற வாயில் மூடப்பட்டதால் வேறு பாதை வழியே திரும்பி செல்ல நேரிட்டது தெரிய வந்துள்ளது.

கடந்த ஆகஸ்டு 18 அன்று பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர் ஷா நவாஸ் வீட்டில் நடந்த இப்தார் விருந்துக்கு பிரதமர் மன்மோகன் சிங் அழைக்கப்பட்டிருந்தார். ஷா நவாஸின் வீட்டிற்கு பிரதமரின் இல்லத்திலிருந்து நாடாளுமன்ற கட்டிடம் வழியாக விரைவாக செல்லலாம். இல்லையென்றால் மிக நீண்ட பாதையில் சுற்றிப் போக வேண்டும் என்பதாலும் பொதுமக்களுக்கு அசெளகரியம் ஏற்பட கூடாது என்றும் பிரதமர் நேரடியாகவே இப்தார் விருந்துக்கு நாடாளுமன்ற கதவு வழியே சென்றுள்ளார்.

இப்தார் விருந்து முடித்து பிரதமரின் வாகனம் திரும்பி வந்த போது வழமையாக திறந்திருக்கும் அக்கதவு மூடப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்த பிரதமரின் பாதுகாப்பு காவலர்கள் உடனடியாக நாடாளுமன்ற பாதுகாவல் அலுவலர்களை தொடர்பு கொண்டு கேட்டை திறக்க சொன்ன போது முன் கூட்டியே பிரதமரின் வருகை தெரிவிக்கப்படாததால் விதிமுறைகளின் படி தங்களால் கேட்டை திறக்க முடியாது என்றும் இரவு 8 மணிக்கு வழமையாக தாங்கள் அக்கேட்டை மூடிவிடுவது வழக்கம் என்றும் கறாராக பதிலளித்தனர்.

இப்பதிலால் வேறு வழியின்றி எவ்வித பாதுகாப்பு முன்னேற்பாடுமின்றி பிரதமரின் வாகனம் பொதுமக்கள் உபயோகப்படுத்தும் பாதை வழியாக திருப்பி அனுப்பப்பட்டது. இது குறித்து உள்துறை அமைச்சகத்திடம் புகார் செய்துள்ள தில்லி காவல்துறை பிரதமரின் கார் எவ்வித முன்னேற்பாடும் இல்லாமல் திருப்பி அனுப்பப்பட்டது மிகப் பெரிய பாதுகாப்பு குளறுபடி என்று தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: