அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குள்ளான நிலத்தில் மூன்றில் இரண்டு பகுதியை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. சர்ச்சைக்குரிய இடமாக ஆக்கப்பட்ட பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்துத்துவா அமைப்பான வி.ஹெச்.பி. இந்தியா முழுவதும் கையெழுத்து இயக்கம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், கமிட்டி நிர்வாகிகள் கன்னியாகுமரி தி.மு.க.வை சேர்ந்த எம்.பி. ஹெலன் டேவிட்சனை அணுகி ராமர் கோவில் கட்டுவது தொடர்பான விவரங்களை எடுத்துக்கூறி கையெழுத்து இயக்கத்தின் மனுவில் கையெழுத்து போடுமாறு கேட்டுக்கொண்டதாகவும், அவரும் உடனடியாக கையெழுத்து போட்டுக் கொடுத்ததாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. இது குறித்து எம்.பி. ஹெலன் டேவிட்சனுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தி.மு.க. தலைமைக் கழகம் தெரிவித்திருந்த்தது.
இந்த சர்ச்சை குறித்து எம்.பி. ஹெலன் டேவிட்சன் விளக்கமளித்துள்ளார். மக்களவை உறுப்பினர் அலுவலகத்தில் பலர் வந்து என்னிடம் மனு அளிக்கிறார்கள். அதுபோலவே ஸ்ரீஅனுமன் சக்தி ஜாகரன் சமிதி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. வேலாயுதன் தலைமையில் ஒரு குழுவினர் வந்து மனு அளித்தனர். அந்த மனுவை பெற்றுக்கொண்டதை உறுதி செய்யும் வகையில்தான் கையெழுத்திட்டிருந்தேன். ஆனால், அதை சிலர் திரித்துச் செய்தி வெளியிட்டுள்ளனர். ராமர் கோயில் கட்டுவதற்கு ஆதரவு தெரிவித்து நான் கையெழுத்திடவில்லை. திமுக தலைமைக் கழகம் அனுப்பியுள்ள நோட்டீஸ் கிடைக்கப் பெற்றேன். இது குறித்து அக்டோபர் 27ம் தேதி புதன்கிழமையன்று திமுக தலைமைக் கழகத்திற்கு விரிவான விளக்கம் அனுப்பவுள்ளேன் என்று ஹெலன் டேவிட்சன் கூறினார்.
எம்.பி. ஹெலன் டேவிட்சன் கூறியுள்ள விளக்கத்தின் மூலம் இந்த சர்ச்சை முடிவுக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக