ஞாயிறு, 24 அக்டோபர், 2010

அலகாபாத் தீர்ப்பு அறிவார்ந்த ஒன்றல்ல; பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகள்மீதான தண்டனையை உறுதிபடுத்துக!- திராவிடர் கழகப் பொதுக்குழுவின் தீர்மானங்கள்!

திருப்பத்தூர், அக். 23- வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில், மாநில அரசில் தனி அமைச்சகம் தேவை என்ற தீர் மானம் உள்பட பல முக்கிய தீர்மானங்கள் திருப்பத் தூரில் இன்று நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

அயோத்திப்பிரச்சினையும்-அலகாபாத் தீர்ப்பும்
450 ஆண்டுகளுக்குமுன்பு அயோத்தியில் பாபரால் கட்டப்பட்ட பாபர் மசூதி - 1992 டிசம்பர் 6 ஆம் தேதி - பா.ஜ.க. - மற்றும் சங் பரிவார்க் கும்பலால் இடித்து நொறுக்கப்பட்டது.

18 ஆண்டுகள் உருண்டோடிய பிறகும், பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள்மீதான தண்டனை இதுவரை வழங்கப்படாத நிலையில்,
அயோத்தி - பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகள் தரம்வீர் சர்மா, சுதிர் அகர்வால், சி.யு. கான் ஆகிய மூவரும் சட்டத்தின் அடிப்படையில், ஆவ ணங்களின் அடிப்படையில் இல்லாமல் வெறும் நம்பிக்கை என்பதை முக்கியமாக மய்யப்படுத்தி வழங்கியுள்ள தீர்ப்பு சட்டம், நீதி, மதச் சார்பின்மை, சிறு பான்மை மக்களுக்குப் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்துப் பொதுத் தன்மைகளையும் அடித்து நொறுக்கக் கூடிய தாகும்.

சட்டங்களையும், சாட்சியங்களையும் புறந்தள்ளி, சட்டப்படியான என்பதற்குப் பதிலாக நம்பிக்கை மன்றம் என்ற நிலை ஏற்படக்கூடிய அபாயம் இதன்மூலம் ஏற்படுத்தப்பட்டு விட்டது.

சிந்தனைக்கு இடம் கொடுக்காத நம்பிக்கை என்பது மூட நம்பிக்கையாளர்கள் பொதுவாகப் பயன் படுத்தும் மலிவான ஒரு சொல்லாகும். அதனை ஒரு உயர்நீதிமன்றம் பயன்படுத்தி இருப்பது ஏற்கத்தக்கதல்ல!

யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் கட்டப் பஞ் சாயத்து முறையில் பாகப் பிரிவினை வழக்காக இதனை அலகாபாத் உயர்நீதிமன்றம் மாற்றிவிட்டது.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட காலகட்டத்தில், அயோத்திப் பிரச்சினையில் இடம் யாருக்குச் சொந்தம் என்பதில் கருத்துக் கூறத் தயாராக இல்லை என்று உச்சநீதிமன்றம் கைவிரித்துவிட்ட நிலையில், மீண்டும் அலகாபாத் தீர்ப்பினை மேல்முறையீடாக உச்சநீதிமன்றம் விசாரிக்கும் ஒரு நிலை ஏற்பட்டு இருப்பது விசித்திரமான நிலையாகும்.

1947 ஆகஸ்ட் 15 இல் இருந்த நிலை எதுவோ அதுவேதான் தொடரப்படவேண்டும் என்று 1991 ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலங்கள் பற்றிய சிறப்புச் சட்டம் கூறும் நிலையினை உறுதிப்படுத்தவேண்டும் என்று மத்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.


பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை தேவை

450 ஆண்டு வரலாறு படைத்த முஸ்லிம் வழிபாட்டுத் தலமான பாபர் மசூதியை அயோத்தியில் இடித்து நொறுக்கிய குற்றவாளிகள் கடந்த 18 ஆண்டுகாலமாக எவ்விதத் தண்டனைக்கும் உட்படுத்தப்படாமல் சுதந்திர மாகத் திரிந்து வருகிறார்கள். இவர்களில் பலரும் மத்திய - மாநில அமைச்சர்களாகவும் இருந்து வந்துள்ளனர்.

தாமதிக்கப்பட்ட நீதி - மறுக்கப்பட்ட நீதி என்று சொல்லப்படும் நிலையில், இதில் மேலும் காலம் கடத்தாமல் உண்மைக் குற்றவாளிகள் சட்டத்தின்முன் நிறுத்தப்பட்டு, உரிய தண்டனைக்கு உட்படுத்த விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று மத்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்து கிறது.

உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த வழக்கின் தீர்ப்பு மேலும் தாமதிக்கப்படுவதன்மூலம் நீதி, நிருவாகம் இவற்றின்மீது மக்களுக்கு இருந்துவரும் நம்பிக்கையை இழக்கும் ஒரு நிலையை ஏற்படுத்தும் என்றும், வன்முறைக்கு ஊக்கம் தருவதற்கு இந்தக் காலதாமதம் பெரிதும் உதவிடும் அபாயத்தையும் இப்பொதுக்குழு சுட்டிக்காட்டுகிறது.

தமிழர்கள் வாழும் வெளிநாடுகளில் - தூதர்களாக தமிழர்கள் நியமனம் - தனி அமைச்சகம் உருவாக்க வேண்டுகோள்

அதிகமான எண்ணிக்கையில் தமிழர்கள் வாழும் நாடுகளில் குறிப்பாக இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் நாடு களுக்குத் தமிழர்களையே தூதர்களாக நியமிக்கவேண் டும் என்று மத்திய அரசையும், வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில் மாநில அமைச்சரவையில் தனி அமைச்சகம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று மாநில அரசையும் இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

பல வெளிநாட்டுத் தூதரகங்களுடன் தொடர்பு பலமாகி, தமிழர்களுக்கு அவ்வப்போது ஏற்படும் பிரச் சினைகளுக்குத் தீர்வு காண முயல்வது அதன் பணியாக அமைதல் சிறப்பாகும். பஞ்சாப், கேரளா போன்ற மாநிலங் களில் இப்படி ஒரு தனி அமைப்பு உள்ளது என்பதையும் இப்பொதுக்குழு சுட்டிக்காட்டுகிறது.

கருத்துகள் இல்லை: