முன்னர் அலசப்பட்டவற்றில் இரண்டு செய்திகளை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வோம்:
1. எதிர்வரும் தேர்தலில் தி மு க வென்று, எதிர்பார்த்துள்ளபடி கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டால் மு.க. ஸ்டாலின் முதல்வராகும் வாய்ப்பு. (http://inneram.com/2010092510823/karunanithis-retirement-and-tamilnadu-politics)
2. அனுதாப அலை ஏதும் வீசாவிட்டால் இப்போதுள்ள கூட்டணியால் ஜெயலலிதா ஆட்சியைப் பிடிக்க முடியாது. (http://inneram.com/2010101611222/admk-next-ruling-party-last-part)
சென்ற வாரம் மதுரையில் திரட்டப்பட்ட மாபெரும் மக்கள் வெள்ளம், கடந்த அலசலில் சொல்லியிருந்ததைப்போல ஜெயலலிதாவுக்கு மயக்கத்தைத் தந்து விட்டது என்பது, “ஐம்பது லட்சம்” என்ற அவரது பேச்சில் தெளிவாகிறது. அதுவும் எதிர்க்கட்சிகளின் சதியால் 75% மக்கள் வராமலேயே ஐம்பது லட்சம் மக்கள் அவருக்காகக் கூடினராம்..
"மதுரைக்கு வந்துபார்; கொலை செய்வோம்" என்று மிரட்டல் கடிதங்கள் வந்ததால் தென் மாவட்டத் தொண்டர்கள் திரண்டும் மக்கள் திரட்டப்பட்டும் மதுரையில் கூடினர். "ஜெயலலிதா தம் உரையைப் படித்துக்கொண்டிருக்கும் போதே மக்கள் அவரவர் ஊருக்குப் புறப்பட்டுவிட்டனர்" என்றும் "டாஸ்மாக் மதுக்கடையை உடைத்து மது பாட்டில்களைக் கொள்ளையடித்துக் குடித்தனர்" என்றும் ஊடகங்களில் வந்த செய்திகளின் அடிப்படையில் பார்த்தால், மதுரையில் கூடியதில் பாதி, கட்சிக்காரர்கள் அல்லர்; திரட்டப்பட்ட கூட்டம் என்பதில் ஐயமில்லை. தொண்டர்களை உசுப்பேற்றிக் கூட்டத்தைத் திரட்டுவதற்காகக்கூட மிரட்டல் கடிதங்கள் தயாரிக்கப்பட்டு, வெளியிடப்பட்டிருக்கலாம் என்று ஆளுங்கட்சிக்காரர்கள் கூறும் கருத்து தள்ளிவிடத் தக்கதன்று. தாக்கும் எண்ணம் உள்ளவர்கள் பல முறை மிரட்டல் கடிதங்களை அனுப்பிக் கொண்டிருக்க மாட்டார்கள் என்பது சாதாரண அறிவுடையோருக்கும் புரியும்.
மாபெரும் கூட்டத்தைக் கூட்டித் தம் செல்வாக்கைக் காட்டி, அதன் மூலம் புதிய கூட்டணியை உருவாக்குவதுதான் திட்டம் என்றால் ஜெயலலிதா அத்திட்டத்தின் முதல் கட்டத்தில் ஜெயித்து விட்டார் என்று ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
ஏனெனில் நாள்தோறும் மாறும் வானிலைபோல் அரசியல் சூழ்நிலையும் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கிறது. நேறறுப்போல் இன்றில்லை. தமிழகத்தை ஆளும் தி மு க தன் வலிமையில் வைத்திருக்கும் நம்பிக்கை பொய்த்துப் போகாமல் இருக்க வேண்டுமானால் ஆட்சியிலும் கட்சியிலும் கருணாநிதி கூடுதல் கவனத்தைச் செலுத்த வேண்டும்.
தம்மால் அறிமுகப்படுத்தப்பட்டுச் செயல்பட்டு வரும் மக்கள் நலத் திட்டங்களும் இலவசங்களும் மட்டுமே வாக்குகளைச் சேகரித்துத் தந்து விடும் என நம்பும் அளவுக்குக் கருணாநிதி அரசியல் அறியாதவரல்லர். அவர் அறிவித்த திட்டங்களையும் இலவசங்களையும் மக்களிடத்தில் சேர்க்கும் பணியைச் செய்யும் வருவாய்த்துறை போன்ற பல துறை அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் எதிர்பார்த்த அளவு ஊதிய உயர்வு கிடைக்காமல் ஏமாற்றத்தில் உள்ளனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கும் இவர்களுக்கும் இடையே ஊதியத்தில் உள்ள வேறுபாடும் தமிழக அரசின் பிற துறைகளின் ஊழியர்களுக்கும் இவர்களுக்கும் இடையே ஊதியத்தில் உள்ள ஏற்றத்தாழ்வும் இவர்களை விரக்தியில் வைத்துள்ளன.
அடுத்து, தமிழகத்தில் திடீரென உயர்ந்துள்ள கட்டுமானப் பொருட்களான சிமெண்ட், இரும்புக் கம்பி, செங்கல், மணல் போன்றவற்றின் கற்பனைக் கெட்டா விலை உயர்வு, சொந்தவீடு எனும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் நடுத்தர மக்களுக்குக் கடும் ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் கொடுத்துள்ளது.
கருணாநிதி, எவ்வளவுதான் இலவசங்களை அள்ளி வழங்கினாலும் தேர்தலில் வாக்களிக்கச் செல்வதில் அக்கறைகாட்டும் நடுத்தர மற்றும் உயர் நடுத்தர மக்களின் அன்றாட வாழ்க்கைத் தேவையை நிறைவு செய்ய முடியா வண்ணம் அரிசி மற்றும் மளிகைப் பொருட்களின் விலையும் காய்கறிகளின் விலையும் தாறுமாறாக ஏறி வரும் நிலையை அவசர நடவடிக்கை மூலம் கட்டுப்படுத்தாவிட்டால் அவர்களின் எதிர்ப்பை எதிர்கொள்ளவேண்டிவரும். ஏழை முதல் கோடீஸ்வரன்வரை அன்றாடம் பயன்படுத்தும் வெங்காயத்தின் விலை உயர்வும்கூட இந்தியாவை ஆண்ட ஜனதாக் கட்சி ஆட்சியை இழக்க நேர்ந்த காரணங்களுள் ஒன்றாக அப்போது கூறப்பட்டதைக் கருணாநிதிக்கு நாம் நினைவூட்டத் தேவையில்லை.
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இல்லாவிட்டாலும் அடிக்கடி உயரும் எரிபொருள் விலைகளால் தனியார்ப் பேருந்துகள் தம் விருப்பத்திற்கேற்பக் கட்டணங்களை உயர்த்துவதையும் தனியார்ப் பள்ளிகளின் கல்விக் கட்டண உயர்வுக் குழப்பங்களும் மின்கட்டண உயர்வும் மக்களின் அதிருப்தியைக் கூட்டுகின்றன.
இந்த அதிருப்திகள் தேர்தலில் எதிரொலிக்கும் வாய்ய்பைத் தள்ளிவிட முடியாது. ‘அடுத்த ஆட்சியும் தமதே’ எனும் தி.மு.க.வினரின் கனவு பலிப்பதற்குத் தடையாக உள்ள இவற்றை ஜெயலலிதா முறையாகப் பயன்படுத்திக் கொண்டு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை வழங்கி, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மற்றும் உள்ள பொதுவான வாக்காளர்களை வளைக்கலாம். கூடவே காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி முயற்சியை விடாமல் தொடரலாம். அது தி.மு.க.வுக்குக் கடும் சவாலாகவே இருக்கும்.
அதுபோல,
. . . . அழகிரி கொடுத்து வரும் தலைவலிகள் வரும் தேர்தலில் கட்சிக்குப் பின்னடைவை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது.
. . . . உட்கட்சிப் பூசலால் தி.மு.க. நொண்டியடித்தால், காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியில் தொடர விரும்பாது. வேகமாக ஓடும் குதிரையில்தான் சவாரி செய்ய எவருமே விரும்புவர்.
. . . . அடுத்து வர இருக்கும் மத்திய அமைச்சரவை மாற்றத்தில் டெலிகாம் அமைச்சர் ராசாவின் இலாகா மாறலாம்; அல்லது பதவியே பறிக்கப்படலாம். அப்படி ஒரு நிலை வரும்போது காங்கிரஸ் தி.மு.க. உறவு ஊசலாடலாம்.
. . . . வாய்ப்புக்காககவே காத்திருக்கும் ஜெயலலிதா மாபெரும் கூட்டத்தைக் கூட்டிக் காட்டுகிறார். முன்னர் ஜெயலலிதா சோனியாவைக் கீழ்த்தரமாகத் தனிப்பட்ட முறையில் விமர்சித்ததை சோனியா மறந்து விட்டால் அ.இ.அ.தி.மு.க. கூட்டணிப் பேச்சுக்குக் கதவு திறக்கலாம். காங்கிரஸ் கட்சியில் உள்ள இளங்கோவன் போன்ற தி.மு.க. எதிர்ப்பாளார்கள் ராகுல்காந்தியின் மூலம் இதற்கு முயலலாம்.
கருணாநிதி உடனடியாகக் களமிறங்கிக் கட்சியிலும் ஆட்சியிலும் தம் பிடியை இறுக்கி, விலைவாசிகளைக் கட்டுக்குள் கொண்டு வந்து, உட்கட்சிப் பூசலையும் வெற்றிக்குத் தடையாய் உள்ளவற்றையும் களைந்து விட்டுக் காங்கிரஸ் கட்சியுடன் சிலவற்றில் விட்டுக்கொடுத்து நடந்து கொண்டால் இப்போதிருக்கும் கூட்டணி நிலைக்கும். ராமதாஸின் பா.ம.க.வும் இக்கூட்டனியில் இணைந்து விட்டால், மீண்டும் தி.மு.க. ஆட்சி எனும் தி.மு.க.வின் கனவு பலிக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக