செவ்வாய், 26 அக்டோபர், 2010

ஊட்டியில் போலீஸ் தடையை மீறி அணிவகுப்பு நடத்த முயன்ற ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் கைது!

ஊட்டி,அக்,26:தடையை மீறி அணிவகுப்பு நடத்த முயன்ற ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் 186 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு, 1925ம் ஆண்டு விஜயதசமி அன்று உருவாக்கப்பட்டதால் அதன் நினைவாக, ஆண்டுதோறும் விஜயதசமி காலத்தில் அணிவகுப்பு நடத்தப்படும். இந்த அணிவகுப்பு ஊட்டியில் நேற்று நடப்பதாக இருந்தது; ஆனால், போலீசார் அனுமதி வழங்கவில்லை.

எனினும், தடையை மீறி அணிவகுப்பு நடத்தப்படும் என ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் அறிவித்தனர். இதனால், ஊட்டி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நேற்று மதியம் 1 மணியளவில் ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் சீருடையுடன், ஊட்டி பஸ் ஸ்டாண்டில் குவியத் துவங்கினர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பதட்டம் காணப்பட்டது.

வழக்கமான கொடியேற்றம், சத்ய பிரமாணம் ஆகியவற்றை நிறைவேற்றி ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் அணிவகுப்பு நடத்த முற்பட்டனர். தடையை மீறி அணிவகுப்பு நடத்த முயன்றதாக 186 தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். கல்லாறு ஆசிரமத்தைச் சேர்ந்த வேதாந்த மஹானந்தா மற்றும் சுதேசி ஜாக்ரன் மஞ்ச் மாநில ஒருங்கிணைப்பாளர் நம்பி நாராயணன் ஆகியோர், அணிவகுப்பு முடிந்து பொதுக்கூட்டத்தில் பேசவிருந்தனர். எனினும் இவர்கள், தொண்டர்கள் கைது செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த அரங்கில் உரையாற்றினர்

கருத்துகள் இல்லை: