செவ்வாய், 26 அக்டோபர், 2010

கீழே விழுந்தாலும் பரவாயில்லை மீசையில் மண் ஒட்டிவிடக் கூடாது - சங்க்பரிவாரின் சாகசம்.....

அஜ்மீர் குண்டுவெடிப்பில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்களின் பங்கு ராஜஸ்தான் மாநில தீவிரவாத எதிர்ப்புப்படை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த குற்றப்பத்திரிகையில் வெளிப்படுத்தப்பட்டதன் மூலம் ஹிந்துத்துவா அமைப்புகள் அனைத்தும் அங்கலாய்ப்பில் ஆழ்ந்துவிட்டன.


மத்திய உள்துறை அமைச்சர் காவி பயங்கரவாதத்தைக் குறித்து பேசியபொழுது, ஒரு ஹிந்துவினால் பயங்கரவாதியாக மாற முடியாது எனக் கூறி, ப.சிதம்பரம் அந்த வார்த்தை பிரயோகத்தை வாபஸ் பெறவேண்டும் என துள்ளிக் குதித்தவர்கள் தற்பொழுது ராஜஸ்தான் ஏ.டி.எஸ்ஸின் குற்றப்பத்திரிகையில் வெளியான விமர்சனங்களை கண்ட பிறகு கீழே விழுந்தாலும் பரவாயில்லை மீசையில் மண் ஒட்டிவிடக் கூடாது என்பதற்காக நடத்தும் முயற்சிகள் சுவராஸ்யமாக உள்ளன.


கடந்த 2007 ஆம் ஆண்டு புனித ரமலான் மாதத்தில் அஜ்மீரில் நடந்த குண்டுவெடிப்பு உள்பட இந்த தேசத்தின் பல்வேறு பகுதிகளில் வெடிக்குண்டு தாக்குதல் நடத்துவதற்கு ரகசிய ஆலோசனைக் கூட்டம் நடத்தியது இந்திரேஷ்குமார் என்ற ஆர்.எஸ்.எஸ்ஸின் முக்கிய தலைவரின் உத்தரவின் படியாகும் என ராஜஸ்தான் ஏ.டி.எஸ் கண்டறிந்துள்ளது.


2005 அக்டோபரில் ஜெய்ப்பூர் குஜராத் சமாஜம் விருந்தினர் மாளிகையில் கூடிய ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்களின் கூட்டத்தில் இந்திரேஷ்குமார் பங்கேற்று வெடிக்குண்டு நிர்மாணிப்பதற்குரிய கட்டளைகளை பிறப்பித்தார் என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் ராஜஸ்தான் ஏ.டி.எஸ் வசம் உள்ளன.


அமர்நாத் கோயில் நிலம் தொடர்பாக பிரச்சனை கொளுந்துவிட்டு எரிவதற்கு முக்கியக் காரணம் இந்திரேஷ்குமார் ஆவார். அபினவ் பாரத் என்ற கொடும் பயங்கரவாத இயக்கத்துடன் நெருங்கியத் தொடர்புடைய இந்திரேஷ்குமாருக்கு மலேகான் குண்டுவெடிப்புத் தொடர்பாக கைதுச் செய்யப்பட்டுள்ள பிரக்யாசிங் தாக்கூருடனும் தொடர்புண்டு என புலனாய்வுக் குழு கண்டறிந்துள்ளது.


ஆனால், ஆச்சரியம் என்னவெனில், இந்திரேஷ்குமாருக்கு அஜ்மீர் குண்டுவெடிப்பில் பங்கு உறுதியான பிறகும்கூட, ராஜஸ்தான் ஏ.டி.எஸ் சமர்ப்பித்த குற்றப்பத்திரிகையில் குற்றவாளிகள் பட்டியலில் அவருடைய பெயர் இடம்பெறாதது தான். இது ராஜஸ்தான் மாநில மனித உரிமை ஆர்வலர்களை ஆத்திரமடைய வைத்துள்ளது இயல்பானதே.


குற்றவாளிகள் பட்டியலில் சேர்ப்பதற்குரிய உறுதியான ஆதாரங்கள் இருந்த பொழுதிலும் இந்திரேஷ்குமாரின் பெயரை குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்காதது அவரை தப்பிக்க வைப்பதற்கான முயற்சி என ராஜஸ்தான் மாநில மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.


அதேவேளையில், ஒரு கூட்டத்தில் பங்கேற்று உபதேசங்கள் வழங்கியதற்காக எவரும் பயங்கரவாதிகளாக மாறமுடியாது என நியாயம் கற்பிக்கிறது ஆர்.எஸ்.எஸ். சிறுபான்மை வாக்கு வங்கிகளை கவர்வதற்காக தேசத்தை நேசிப்பவர்களான சங்க்பரிவார தொண்டர்களை மத்திய அரசு புலனாய்வு ஏஜன்சிகளை ஏவிவிட்டு வேட்டையாடி சங்க்பரிவாரத்தை தகர்க்க முயல்வது காங்கிரஸின் லட்சியம் என ஆர்.எஸ்.எஸ்ஸின் மையங்கள் குற்றஞ்சாட்டுகின்றன.


நியாயம் பழைய பல்லவிதான். எல்லா ஹிந்துக்களும் தேசத்தை நேசிப்பவர்கள்தான். வெடிக்குண்டுகளை தயாரிப்பதும், மனிதர்கள் திரளாக வாழும் நகரங்களிலும், தெருக்களிலும், அவர்கள் பயணம் செய்யும் ரெயில்களிலும், வழிப்பாட்டுத் தலங்களிலும் குண்டு வைப்பதும் அது தெளிவான பிறகும் கூட அவையெல்லாம் பயங்கரவாதமல்ல. காரணம், ஹிந்துக்களால் தேசத்தின் துரோகிகளாக மாறமுடியாதே. அவர்களால் இந்தியாவை விட்டு வேறு தேசங்களுக்கு செல்ல முடியாதே, ஆனால் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் இந்தியாவிலிருந்து தப்பிச் செல்வதற்கு ஏராளமான நாடுகள் உள்ளனவே. ஆகவே அவர்கள் வேலை நிமித்தமாக அரபு நாடுகளுக்கு சென்றாலும் அது தேசத் துரோகம்தான். இதுதான் சங்க்பரிவார்களின் நியாயம்.


ஆக மொத்தத்தில் கூட்டிக் கழித்துப் பார்த்தால் சங்க்பரிவார்களின் பார்வையில் ஒரு ஹிந்து குண்டு வைத்தாலோ, கொலை, கொள்ளை, கற்பழிப்பில் ஈடுபட்டாலோ அவையெல்லாம் தேசத்தின் மீது கொண்ட தீராக் காதலால் மேற்கொண்ட நற்பணிகளாகும்.


ஆனால், தனது உரிமைகளுக்காக வீதியில் இறங்கி முஸ்லிம் போராடினால் அதுதான் தேச விரோதமாகும். ஆம்,சங்க்பரிவார்கள் மல்லாந்துக் கிடந்துக் கொண்டு வானை நோக்கி காறி உமிழ்கிறார்கள்.

கருத்துகள் இல்லை: