தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதங்களே உள்ள நிலையில், கூட்டணியை பலப்படுத்தவும், கூடுதல் கட்சிகளை இழுக்கவும் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் ஆயத்தமாகிவிட்டன. குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாமா? என ஏங்கிக் கொண்டிருந்த பா.ம.க.,வுக்கு தி.மு.க.,வின் கதவு தற்போது திறக்கப்பட்டுள்ளது.
கடந்த 2006ம் ஆண்டு சட்டசபை பொதுத்தேர்தலில் தி.மு.க., - காங்கிரஸ் - பா.ம.க., இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்- புரட்சி பாரதம் என்ற, "வானவில்' கூட்டணி களத்தில் குதித்தது. அ.தி.மு.க.,- ம.தி.மு.க., - விடுதலைச் சிறுத்தைகள் - தேசிய லீக் ஆகிய கட்சிகள் ஒரு அணியாகவும், தே.மு.தி.க., தனித்தும் போட்டியிட்டதால் மும்முனை போட்டி நிலவியது.தி.மு.க., வெற்றி பெற்று, கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்தது. அ.தி.மு.க., தனது கட்சியின் தனித்துவத்தை இழக்காமல் 69 தொகுதிகளை கைப்பற்றியது. 13 லட்சம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில், ஆளுங்கட்சி கூட்டணியிடம் அ.தி.மு.க., கூட்டணி வெற்றி வாய்ப்பு இழந்தது.
சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றிருந்த பா.ம.க., இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் 2009ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது, தி.மு.க., கூட்டணியை விட்டு வெளியேறியது. அதேபோல், விடுதலைச் சிறுத்தைகளும் அ.தி.மு.க., கூட்டணியை விட்டு வெளியேறி தி.மு.க., கூட்டணியில் இணைந்து லோக்சபா தேர்தலை சந்தித்தது.அ.தி.மு.க., கூட்டணியில் ம.தி.மு.க., - பா.ம.க., இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிட்டு 12 லோக்சபா தொகுதிகளை கைப்பற்றி, கூட்டணி செல்வாக்கை தக்க வைத்துக் கொண்டது. லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியைத் தழுவிய பா.ம.க., "தொண்டர்கள் விருப்பம்' காரணமாக அக்கூட்டணியில் இருந்து வெளியேறியது.
தற்போது, அ.தி.மு.க., கூட்டணியில் ம.தி.மு.க., - இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், புதிய தமிழகம் - மனித நேய மக்கள் கட்சி -அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம்- இந்திய தேசிய லீக் -தேசியவாத காங்கிரஸ்- இந்திய குடியரசு கட்சி- வன்னியர் கூட்டமைப்பு - அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி, இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி - அம்பேத்கர் மக்கள் கட்சி - மதச்சார்பற்ற ஜனதா தளம்- இந்திய தேசிய குடியரசு கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன.
மேலும், கிறிஸ்தவ முன்னேற்றக் கழகம்- கிறிஸ்தவ மக்கள் கட்சி - தலித் மக்கள் முன்னணி - மறுமலர்ச்சி மக்கள் தமிழகம்- இந்திய குடியரசு கட்சி (தமிழ்நாடு)- ராஜிவ் மக்கள் காங்கிரஸ் - முஸ்லிம் உரிமை பாதுகாப்புக் கழகம், வன்னிய குல ஷத்ரிய நல அமைப்புகளின் மத்திய மையம் ஆகிய கட்சிகளும் இடம் பெற்றுள்ளன. போதாதகுறைக்கு காங்கிரஸ், பா.ம.க., - தே.மு.தி.க, ஆகிய கட்சிகளையும் கூட்டணியில் இடம் பெறவைத்து, "மெகா' கூட்டணியை உருவாக்கி, தி.மு.க.,வை பொது எதிரியாக காட்டவும் அ.தி.மு.க., தலைமை திட்டமிட்டுள்ளது.
தற்போது தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் - புரட்சி பாரதம் - இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் - தேசிய லீக் - உழவர் உழைப்பாளர் கட்சி - விவசாய தொழிலாளர்கள் கட்சி - தமிழ் மாநில முஸ்லிம் லீக் - மூவேந்தர் முன்னேற்றக் கழகம் - அருந்ததியர் மக்கள் கட்சி - எம்.ஜி.ஆர்., கழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. கடந்த சட்டசபை தேர்தலில் இடம் பெற்ற கூட்டணிக் கட்சிகளான பா.ம.க., - இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்த முறை கூட்டணியில் இல்லை என்பதால், அணியை பலப்படுத்த மீண்டும் பா.ம.க., - ம.தி.மு.க., - இரு கம்யூனிஸ்ட் கட்சிகளை இழுக்கவும் தி.மு.க., திட்டமிட்டுள்ளது.பா.ம.க.,வை பொருத்தவரை தி.மு.க., கூட்டணியில் இடம் பெறவே ஆசைப்படுகிறது. அதேபோல் காங்கிரஸ் கட்சியை பொருத்தவரை, எந்த அணியில் அதிக சீட்டுகளும், ஆட்சியில் பங்கும் தருகிற கட்சிகளோடு கூட்டணி வைக்கவும் தயாரான மனநிலையில் உள்ளது.
கட்சி ஆரம்பித்த நிலையில் இருந்து தனித்து தான் போட்டி என்ற லட்சியத்துடன் களமிறங்கிய தே.மு.தி.க.., கணிசமான ஓட்டுகளை வைத்துள்ளது. வரும் தேர்தலில் பா.ம.க., இல்லாத அணியில் இடம் பெற விரும்புகிறது.அதேசமயம், காங்கிரசுடன் கூட்டணி அமைத்து மூன்றாவது அணி அமைக்கவும் விரும்புகிறது. தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணியில் முறிவு இல்லை என்றால் அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெறவும் தே.மு.தி.க., திட்டமிட்டுள்ளது.
கோட்டையில் முதல்வர் கருணாநிதியை, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் சந்தித்து பேசியது, அரசியல் களத்தில் கூட்டணி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியாவின் அதிரடி பேச்சு, காங்கிரஸ் தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.கூட்டணி ஆட்சி அமைக்கும் பேரத்தை சட்டசபை தேர்தலில் முன்னிலைப்படுத்த காங்கிரஸ் தலைமை முன்வந்துள்ளதும் அக்கட்சி தொண்டர்களுக்கு உத்வேகத்தை அளித்துள்ளது. தி.மு.க., கூட்டணியில் ஆட்சியில் பங்கு, கூடுதல் தொகுதிகள் கேட்கவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதால், தேர்தல் பரபரப்பு இப்போதே துவங்கிவிட்டது.
தென் மாவட்டங்களில் அ.தி.மு.க., அணி பலம் அதிகரிக்குமா...?கடந்த சட்டசபை தேர்தலில் தென்மாவட்டத்தில் உள்ள 26 சட்டசபை தொகுதிகளில் 50 ஓட்டுக்கள் முதல் 1,000 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் அ.தி.மு.க., தோல்வியை தழுவியது. தற்போது, அ.தி.மு.க., கூட்டணியில் இரு கம்யூனிஸ்டுகள், புதிய தமிழகம், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம், மனித நேய மக்கள் கட்சிகள் இணைந்துள்ளதால், தோல்விக்கு காரணமாக இருந்த குறைந்த ஓட்டு வித்தியாசங்களை சரிசெய்ய முடியும் என அ.தி.மு.க., கருதுகிறது. அதாவது, கடந்த சட்டசபை தேர்தலில் மேற்கண்ட கட்சிகள் அ.தி.மு.க., கூட்டணியில் இல்லை. தற்போது அக்கட்சிகள் கூட்டணியில் இடம் பெற்றுள்ளன. மூவேந்தர் முன்னணி கழகத்தின் சார்பில், "மகாசேமம்' என்ற சுயஉதவிக்குழுவை நடத்தி வருகிறது.
இதில் ஐந்து லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். 68 சட்டசபை தொகுதிகளில் உள்ள 145 ஒன்றியங்களில், ஒன்றரை லட்சம் பெண்களுக்கு வெளிநாட்டு வங்கி உதவியுடன் 750 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.இந்த சுயஉதவிக்குழுவில் இடம் பெற்ற பெண்கள் ஓட்டு மட்டுமே ஒரு தொகுதிக்கு 5,000 ஓட்டுக்கள் அ.தி.மு.க., கூட்டணிக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. அதேபோல், புதிய தமிழகத்திற்கு மட்டும் தென்மாவட்டத்தில் குறைந்த பட்சம் தொகுதிக்கு 10 ஆயிரம் ஓட்டுக்கள் உள்ளது.இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் சேர்த்து தொகுதிக்கு 5,000 ஓட்டுக்களும், மனித நேய மக்கள் கட்சிக்கு தொகுதிக்கு 5,000 ஓட்டுக்களும் கணக்கிடப்பட்டுள்ளது. அ.தி.மு.க., கூட்டணியில் தற்போது தென்மாவட்டங்களில் மட்டும் மேற்கண்ட கட்சிகளால் தொகுதிக்கு கூடுதலாக 25 ஆயிரம் ஓட்டுக்கள் கிடைக்கவுள்ளது.
கடந்த தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றிருந்தது. அக்கட்சி தற்போது தி.மு.க., கூட்டணியில் சேர்ந்துள்ளது. எனவே, அக்கட்சி சார்பில் கடந்த தேர்தலில் அ.தி.மு.க., பெற்றிருந்த ஓட்டுகளிலிருந்து 10 ஆயிரம் ஓட்டுக்களை கழித்து பார்த்தாலும் 15 ஆயிரம் ஓட்டுக்கள் கூடுதலாக அ.தி.மு.க.,வுக்கு கிடைக்கும் என்று கருதப்படுகிறது.இதன் மூலம், கடந்த தேர்தலில் மயிரிழையில் தோல்வி அடைந்த தொகுதிகளில், அ.தி.மு.க., வெற்றி பெறும் என்ற கணக்கையும் அ.தி.மு.க., வகுத்துள்ளது. எனவே, தென்மாவட்டத்தில் உள்ள 60 தொகுதிகளில் தே.மு.தி.க., காங்கிரஸ் போன்ற கட்சிகளின் கூட்டணி இல்லாமல், அ.தி.மு.க., கணிசமான தொகுதிகளில் வெற்றி பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேற்கு மாவட்டங்களில் மட்டும் ஏறக்குறைய 60 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் அ.தி.மு.க., - ம.தி.மு.க., - இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் பலமான ஓட்டு வங்கிகளை வைத்துள்ள தொகுதிகளாகும். அதனால் தான், திருப்பூர், சேலம், ஈரோடு, பொள்ளாச்சி, கோவை போன்ற லோக்சபா தொகுதிகளில் அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்றது.கொங்குநாடு முன்னேற்றக் கழகத்தின் ஓட்டுக்கள் மட்டும் அ.தி.மு.க.,வுக்கு கிடைக்குமானால், மேற்கு மாவட்டங்களிலும் கணிசமான தொகுதிகளை அ.தி.மு.க., அள்ளும் என்ற கணக்கும் போடப்பட்டுள்ளது.
கொங்கு பேரவையை அ.தி.மு.க.,வில் இழுப்பதற்குரிய பேச்சு வார்த்தையை கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர் நடத்தி வருகிறார். அதே சமயம், தி.மு.க., கூட்டணியில் அக்கட்சியை இழுக்கவும் தி.மு.க., அமைச்சர் ஒருவர் முயற்சித்து வருகிறார்.வட மாவட்டங்களில் உள்ள 70 தொகுதிகளில் அ.தி.மு.க., சில தொகுதிகளில் தான் வலுவாக இருக்கிறதே தவிர அக்கட்சிக்கு பலவீனமாக இருப்பது தான் உண்மை. கடந்த சட்டசபை தேர்தலின் போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்ததால் சில தொகுதிகளை அ.தி.மு.க., கைப்பற்றியது.
தி.மு.க., கூட்டணியில் பா.ம.க.,வும், விடுதலைச் சிறுத்தைகளும் இடம் பெற்றால், முதலியார் உள்ளிட்ட மற்ற சமுதாயத்தினரின் ஓட்டுக்கள் அ.தி.மு.க., கூட்டணிக்கு விழும் வாய்ப்பு உள்ளது. அ.தி.மு.க., அணியில் தே.மு.தி.க., இடம் பெற்றால் அ.தி.மு.க., கூட்டணிக்கு ஓரளவு சாதகமாக இருக்கும்.இல்லையென்றால் வடமாவட்டங்களை பொருத்தவரையில் தி.மு.க., - காங்கிரஸ், பா.ம.க., கூட்டணிக்கு சாதகமாக அமையும் என்ற நிலை உருவாகியுள்ளது. ஓட்டு வங்கிகளுக்காகவும், தேர்தல் கூட்டணிக்காகவும் கட்சிகள் அணி மாறுமா? என்ற கேள்வியுடன் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக