ஆறு ஆண்டுகள் குவாண்டனாமோ சிறையில் அவதிப்பட்ட ஆஸ்திரேலிய குடிமகனான டேவிட் ஹிக்ஸ் இறுதியாக தனது மெளனத்தை கலைத்துள்ளார்.
ஆறுவருடங்கள் தான் அனுபவித்ததும், கண்ணால் கண்டதுமான கொடூரங்களை விவரிக்கும் ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளார் ஹிக்ஸ்.
அப்புத்தகத்தில் அவர் கூறும் சில விபரங்கள்:
"குவாண்டனாமோ சிறை ஒரு நரகமாகும். நான் ஜப்பானில் குதிரைப் பந்தயத்திற்காக பயிற்சி அளித்துக் கொண்டிருக்கும் வேளையில் இஸ்ரேலிய குடிமகன் ஒருவர் எனக்கு அறிமுகமானார். அவர்தான் எனக்கு உலகத்தை சுற்றிப்பார்க்கும் மோகத்தை ஏற்படுத்தினார். அந்தப் பயணம்தான் என்னை ஆப்கானிஸ்தானிற்கு கொண்டு சென்றது.
கஷ்மீரிகளின் சுதந்திரத்திற்கான போராட்டத்தின் மீது எனக்கு அனுதாபம் பிறந்தது. ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பிற்க்குள்ளான வேளையில், தனது உயிரை பணயம் வைத்து ஒரு ஆப்கானி எனக்கு உதவினார். ஆனால், வழியில் வைத்து ஆக்கிரமிப்பு ராணுவ வீரன் ஒருவரிடம் நான் சிக்கினேன். தப்புவதற்கு நான் முயன்ற பொழுதும், துப்பாக்கியை நீட்டி மிரட்டியதால் நான் அந்த ராணுவவீரனை பின் தொடர்ந்தேன். இதுதான் எனது நரக வாழ்க்கையின் துவக்கமாகும்.
குவாண்டனாமோ சித்திரவதைச் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட முதல் குழுவில் நான் இடம் பெற்றிருந்தேன். திறந்தவெளி சிறையில் நாங்கள் தங்கவைக்கப்பட்டோம். எங்களின் துணைக்கு தேள்களும், பாம்புகளும், ஒன்பது இஞ்ச் நீளங்கொண்ட சிலந்திகளும் இருந்தன.
பின்னர் மூன்று அடி அகலமும், மூன்று அடி நீளமும் கொண்ட ஒரு கூட்டில் என்னை அடைத்தார்கள். அதில் இரண்டு பக்கெட்டுகள் இருந்தன. ஒன்று, குடிநீருக்காகவும், இன்னொன்று, மல,ஜலம் கழித்தவுடன் சுத்தப்படுத்தவும்.
கேம்ப் எக்ஸ்ரே என்றழைக்கப்பட்ட இந்த சிறைக்கூண்டில் முதல் இரண்டு வாரங்கள் உறங்குவதற்கோ, பேசுவதற்கோ, அசைவதற்கோ எங்களை அனுமதிக்கவில்லை. இவ்வேளையில் வெளியுலகிலிருந்து எந்த விபரமும் எங்களுக்கு கிடைக்கவில்லை. கூட்டின் நடுவே மட்டுமே இருப்பதற்கோ, படுப்பதற்கோ அனுமதியளித்தனர். உத்தரவில்லாமல் எழுந்திருக்கக்கூடாது. அதில் மிகப்பெரிய குற்றமாக கருதப்பட்டது கூட்டின் கம்பிவலைகளை தொடுவதாகும். ஏதேனும், உத்தரவுகளை மீறினால் ராணுவ அதிகாரிகள் எங்களை தாக்குவர்.
செயற்கை கால் பொருத்தப்பட்ட ஒரு ஆப்கானியை உதைத்து கீழே தள்ளி ஐந்து பேர் சேர்ந்து தாக்கிவிட்டு, நாயை அவிழ்த்துவிட்டு கடிக்க வைத்ததையும் நான் ஒரு முறை என் கண்ணால் கண்டேன். 'உஸாமா என்னை காப்பாற்றுவார்' என்று தரையில் எழுத உத்தரவிட்டதை மறுத்ததற்காகத்தான் இந்த தண்டனை அவருக்கு வழங்கப்பட்டது." என்று குறிப்பிட்டுள்ளார்.
ஹிக்ஸ் 2007 ஆம் ஆண்டு சிறையிலிருந்து வெளியானார். அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை குவாண்டானாமோ சிறை அனுபவங்கள் குறித்து வெளியிட்ட நூலின் பெயர் குவாண்டானாமோ-எனது பயணம் என்பதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக