வெள்ளி, 29 அக்டோபர், 2010

சட்டசபை தேர்தலில் எத்தனை சக்திகள் ஒன்று திரண்டு வந்தாலும் தி.மு.க.வை வீழ்த்த முடியாது: கருணாநிதி பேச்சு!

சட்டசபை தேர்தலில் எத்தனை சக்திகள் ஒன்று திரண்டு வந்தாலும் தி.மு.க.வை வீழ்த்த முடியாது: கருணாநிதி பேச்சு
தமிழக சட்டமன்ற தேர்தலையட்டி மாவட்ட வாரியாக தி.மு.க. நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்று வருகிறது.

தென்சென்னை மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்திற்கு முதல்- அமைச்சர் கருணாநிதி தலைமை தாங்கினார்.

பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன், துணை முதல்- அமைச்சரும், பொருளாளருமான மு.க. ஸ்டாலின், துணைப் பொதுச்செயலாளர்கள் துரைமுருகன், பரிதி இளம்வழுதி, எஸ்.பி.சற்குண பாண்டியன் மற்றும் அமைப்புச் செயலாளர்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், பெ.வீ. கல்யாணசுந்தரம் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர்.

கூட்டத்தில் மத்திய மந்திரி தயாநிதிமாறன், கவிஞர் கனிமொழி எம்.பி., வசந்தி ஸ்டான்லி எம்.பி., தென்சென்னை மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன், முன்னாள் அமைச் சர் புலவர் இந்திரகுமாரி, பகுதிக்கழக செயலாளர் கே.கே.நகர் தனசேகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் முதல்- அமைச்சர் கருணாநிதி பேசினார். அப் போது அவர் கூறியதாவது:-

இங்கே பேசிய சில செயல் வீரர்கள், நிர்வாகிகள்- இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள், இலவச எரிவாயு அடுப்பு- இதைப்போன்ற திட்டங்களைப் பற்றிப் பேசி, அங்கொன்றும் இங்கொன்றுமாக அதிலே சில குறைகள், அவற்றை எப்படித் தீர்க்க வேண்டும் என்றெல்லாம் சொன்னார்கள்.

எனக்கு ஒரேயரு வருத்தம் - என்றைக்குத் தலைமைக் கழகத்தின் சார்பில் கூட்டம் போடுவார்களோ என்று எண்ணிக் கொண்டு வந்து, அப்படிக் கூட்டம் நடக்கின்ற நேரத்திலேதான், இதைப்பற்றியெல்லாம் 100 பேருக்கு மத்தியிலே சொல்ல வேண்டும் என்று இல்லாமல்; எந்தெந்த வட்டத்தில் எவ்வப்போதெல்லாம் பிரச்சினை ஏற்படுகிறதோ, அந்தப் பிரச்சினையை அப்படியே உடனடியாக மேலிடத்திலே உள்ளவர்களிடம் சொல்லி, கலந்து பேசி, முறைப்படி அதற்கான நிவாரணத்தைக் கண்டிருக்க வேண்டும்.
ரேஷன் கார்டுகள் சில ரத்து செய்யப்பட்டு விட்டன என்றால், உடனடியாக உணவு அமைச்சரிடமோ அல்லது சட்டப் பேரவை உறுப்பினரிடமோ அல்லது உரிய அதிகாரிகளிடமோ எடுத்துச்சொல்லி, அந்தப் பிரச்சினைக்கு முடிவு கண்டிருக்கலாம்.

இந்தக் கூட்டம் எப்படி வாக்குகளைப் பெறுவது என்பதற்கு மாத்திரம் கூட்டப்பட்ட கூட்ட அல்ல; நம்முடைய கட்சியை கடந்த காலத்திலே எப்படி வளர்த்தோம்; இப்போது எப்படி வளர்க்க வேண்டும் என்பதற்காகவும் கூட்டப்பட்ட கூட்டம் என்பதையும் மறந்து விடக்கூடாது. வாக்குகள் மட்டும் முக்கியமல்ல; தேர்தல்களில் வெற்றிகள் மாத்திரம் நம்முடைய குறிக்கோள்கள் அல்ல. இதை நான் பலமுறை பல நிகழ்ச்சிகளில் எடுத்துக் காட்டியிருக்கின்றேன்.

தேர்தலுக்காக மாத்திரம் இங்கே கூடிப் பேசுகிறோம் என்று எண்ணினால்; நம்முடைய கழகத்தின் கொள்கைகளை, லட்சியங்களை நாம் மறந்து விட்டோம் என்றுதான் பொருள். இதற்கிடையிலே நம்முடைய மாவட்டக் கழகச் செயலாளர் தம்பி அன்பழகன் குறிப்பிட்டதைப்போல, இன்றைக்கு ஏற்பட்டிருக்கின்ற எல்லாவிதமான சவால்களையும் சமாளிக்கக்கூடிய திறன் கழகத்திற்கு இருக்கிறது என்று அவர் சொல்வதைப்போல; நானும் சொல்ல விரும்புகின்றேன்.

நிச்சயமாக இந்தத் தேர்தலில் எத்தனை சக்திகள் ஒன்று திரண்டு வந்தாலும், எத்தனை பேர் அணிவகுத்து நின்றாலும், திராவிட முன்னேற்றக் கழகத்தை அவர்களால் வீழ்த்த முடியாது என்பதில் நானும் அசைக்க முடியாத நம்பிக்கையோடுதான் இருக்கின்றேன்.

ஆனால், என்னுடைய இந்த வார்த்தைகளை மீறி, பேராசிரியர் சொல்லியிருக்கின்ற அந்த உறுதியையும் மீறி- உங்களுடைய வாய்மொழி உறுதிமொழிகளையும் மீறி- ஏதோ ஒரு காரணத்தால் அத்தகைய ஒரு சறுக்கல் ஏற்படுமானால்; கடந்த காலத்திலே தமிழ் மக்களுக்காக, திராவிட மக்களுக் காக நாம் ஆற்றிய - ஆற்றிக் கொண்டு வருகின்ற- அவர்களுக்காகப் புரிந்த சாதனைகள் இவைகளெல்லாம் வீண்தானா? என்று நம்மை நாமே கேட்டுக்கொண்டு, அதற்காக வருந்த நேரிடும்.

அப்படிப்பட்ட வருத்தம் கூட, நம்முடைய எதிர்கால சமுதாயத்திற்கு நல்லதல்ல; நாம் இவ்வளவு செய்தும் மக் கள் அவற்றைப் புரிந்து கொள்ளவில்லையே என்று எண்ணினால்; அந்த மக்களுக்குத் தொடர்ந்து நாம் ஆற்ற வேண்டிய காரியங்களை ஆற்றாமல் இருந்து விடுவோமா? என்னுடைய ஆசையெல்லாம் மக்களுக்குத் தொடர்ந்து செயலாற்ற வேண்டும் என்பதுதான்; அவர்களுக்குத் தேவையான காரியங்களை ஆற்ற வேண்டும் என்பதுதான்.

அதற்கிடையிலே என்ன தொய்வு ஏற்பட்டாலும், அந்தத் தொய்வைப் பற்றிக் கவலைப்படாமல் மக்களுக்காக நாம் தொடர்ந்து பாடுபட வேண்டும். அந்த ஒரு லட்சியத்திற் காக தன்னை ஒப்படைத்துக் கொண்டிருக்கின்ற ஒவ்வொரு திராவிட முன்னேற்றக் கழகத் தோழனும், திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய உடன்பிறப்பும் என்னுடைய மதிப்பிற்குரியவர்கள், மரியாதைக்குரியவர்கள் என்பதை நான் இங்கே உறுதிபட தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

அந்த வகையிலே நீங்கள் பணியாற்ற வேண்டும் - எப்படிப் பணியாற்றப் போகிறீர் கள்? எப்படிக் குரல் கொடுத்திருக்கிறீர்கள்? எந்த வகையிலே உங்களுடைய பணி நிறைவடையப் போகிறது? என்பதை அறிந்து கொள்ளவும், அதற்கு யோசனைகளைச் சொல்லவும்தான் இந்தக் கலந்தாய்வுக் கூட்டத்தை நாம் ஏற்பாடு செய்திருக்கிறோம்.

இந்தக் கூட்டத்திற்கு வருவதற்கு முன்பு, நான் சென்னையிலுள்ள சில முக்கியமானவர்களைக் கலந்தாலோசித்து; யார் யார் கட்சிக்கு அப்பாற்பட்டு தகவல்கள் தருகிறார் களோ, அறிவுரை கூறக்கூடியவர்களோ; யார் யார் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய வெற்றியைக் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறார்களோ, அவர்களிடத்திலே கலந்தாலோசித்த போது, எனக்குக் கிடைத்துள்ள சில உண்மைகளை இங்கே சொல்லாமல் இருக்க முடியாது.

என்னதான் நீங்கள் இங்கே உறுதி எடுத்துக் கொண்டாலும், சபதம் மேற்கொண்டாலும்; நாங்கள் வெற்றி பெற்றே தீருவோம்Ó என்று சொன்னாலும்; உங்களிடத்திலே உள்ள ஒற்றுமை கெட்டிப்படவில்லை என்றால், அந்த உறுதிமொழியைக் காப்பாற்ற முடியாது என்பதை நான் இங்கே சொல்லிக் கொள்ள ஆசைப்படுகின்றேன்.

தி.மு.க. வரலாற்றில் எத்தனையோ மேடு பள்ளங்களையெல்லாம் நாம் சந்தித்திருக் கின்றோம் & எத்தனையோ வீழ்ச்சிகள் தி.மு.கழக வரலாற்றில். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட போது; நான் ஒருவன்தான் தேர்தலிலே வெற்றி பெற முடிந்தது. மற்ற அனைத்து இடங்களிலும் பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் நம்முடைய வேட்பாளர்கள், தி.மு.க. தலைமையிலேயிருந்த கூட்டணி வேட்பாளர்கள் தோற்றுப் போன நிலை இருந்தது.

அதை மறந்து விடக்கூடாது. அந்த வீழ்ச்சிக்குப் பிறகு இந்தக் கழகம் உருப்படுமா? இந்தக் கழகம் மீண்டும் எழுமா? எழுந்து மக்கள் பணி ஆற்றுமா? திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயர் நிலைத்திருக்குமா? என்றெல்லாம் உலக அளவிலே கேள்வி எழுந்த நேரத்தில்; இன்றைக்கு உலகமே வியக்கத்தக்க அளவில் நாம் உயர்ந்து நிற்கிறோம் என்றால், அதற்கு ஒருவர் இருவருடைய உழைப்பு அல்ல; இங்கே வீற்றிருக்கின்ற நீங்களும், உங்களைப் போன்ற பல்லாயிரக்கணக்கான உடன்பிறப்புக்களும் தந்த அயராத உழைப்புதான் இதற்கெல்லாம் காரணம் என்பதை நான் மறந்து விடவில்லை. அப்படிப்பட்ட உழைப்பை நீங்கள் வழங்குவதற்குத் தயாராக இருக்கிறீர்கள்.

ஒரு சில இடங்களிலே ஒற்றுமையின்மை இருப்பதற்கு என்ன காரணம் என்பதை நான் விசாரித்த வரையிலே அறிந்திருப்பது; இந்தக் குழு மனப்பான்மைதான். எந்த வட்டத்திலாவது இரண்டு குழுக்கள் இருக்குமானால்; அந்தக் குழுக்கள் எல்லாம் இந்தக் கழகத்தினுடைய முன்னேற்றத்தை அழிக்கின்ற புழுக்கள் என்பதை நீங்கள் உணர்ந்தாக வேண்டும். அந்தக் குழுக்களை- குழு மனப்பான்மையை நீங்கள் அகற்றினால்தான்; இந்தக் கழகத்தினுடைய ஒற்றுமையை நிலை நாட்டினால்தான்;, எதிர் காலத்திலே- தேர்தல்களிலே மாத்திரமல்ல; கழகம் ஒரு கொள்கைக் கூடாரம்; லட்சியக் கூடாரம் என்பதை எடுத்துக் காட்டுவதற்கும் நம்மால் முடியும் என்பதை உங்களுக்கு நான் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

குழுக்கள் என்பதை மறந்துவிட்டு, குழு மனப்பான்மையை ஒதுக்கி வைத்துவிட்டு, எல்லோரும் ஒன்றுதான், எல்லோரும் தி.மு.க&தான், எல்லோரும் அண்ணாவின் தம்பிகள்தான், எல்லோரும் இந்தக் கூடாரத்திலே உள்ளவர்கள்தான் என்ற அந்த உணர்வோடு நீங்கள் அனைவரும் செயல்பட்டால்தான், ஜெயலலிதா அல்ல; ஜெயலலிதாவோடு 100 பேர் அணி திரண்டு வந்தாலும், தி.மு.கழகத்தை யாராலும் வெற்றி பெறமுடியாது; யாராலும் வீழ்த்த முடியாது ஆகவே, அந்தக் குழுக்கள் என்பதைக் கைவிடுங்கள்; அதை மறந்துவிடுங்கள். இந்த இயக் கத்தில் குழுக்களே இல்லை- கோஷ்டிகளே கிடையாது என்ற நிலைதான் உயர்ந்த நிலை என்பதை உணர வேண்டும்.

அநேகமாக கோஷ்டிகள் இல்லாத கட்சிகள் தமிழ்நாட்டில் கிடையாது. நாம் மாத்திரம் ஏன் அப்படி இருக்க வேண்டும் என்று எண்ணாதீர்கள். நாம் கோஷ்டிகள் இல்லாத காரணத்தினால்தான், இன்றைக்குக் கூட்டணியினுடைய பிரதான கட்சியாக இருக்க முடிகிறது; இன்றைக்கு ஆளுங்கட்சியாக விளங்க முடிகிறது. ஆகவே, கோஷ்டிகள் இல்லாத நிலையை தொடர்ந்து நிலைநாட்ட வேண்டுமென்று உங்களையெல்லாம் கேட்டுக் கொள்கிறேன்.

கடந்த காலத்தில் அண்ணாவிற்குப் பிறகு நான் அப்போது முதல்&அமைச்சராக இருந்தேன். அப்போது மாநகராட்சி மன்றத்தைப் பற்றிய புகார்கள் எழுந்து, ஒரு பெரிய ஊழல் புகார்- அதற்காக ஒரு கமிட்டியே போடப்பட்டது. சட்டசபையிலே ஹண்டே பேசுகிறார்; அவர் ஊழல்களை அடுக் கடுக்காகச் சொன்னபோது, முதல்- அமைச்சராக உட்கார்ந்திருந்த நான் எழுந்து & ஐயா! நிறுத்துங்கள்; நீங்கள் சொல்வது எல்லாம் உண்மைதான்; நான் மறுக்கவில்லை; சென்னை மாநகராட்சி மன்றத்தில் இத்தகைய ஊழல் நடைபெற்றதாக அடுக்கத் தேவையில்லை. ஊழல் நடைபெற்றதை நான் ஒத்துக் கொள்கிறேன்.

ஆகவே, இதற்கெல்லாம் யார் காரணம் என்பதை அறிய இப்போதே விசாரணை செய்வதற்கு உத்தரவிடப் போகிறேன்; அந்த விசாரணைக் கமிஷனுக்கு உத்தரவிடுவதை முன்னிட்டு மாநகராட்சி மன்றத்தை இதே நிமிடத்திலே கலைக்கிறேன் என்று சொல்லி கலைத்த வரலாறு எல்லாம் உங்களுக்குத் தெரியும். அப்படிக் கலைக்கப்பட்ட மாநகராட்சி மன்றத்திலே இருந்தவர்கள் எல்லாம் சாதாரணமானவர்கள் அல்ல; ஜாம்பவான் கள். சென்னை மாநகராட்சி மன்றத்தை ஒருவிரலால் ஆட்டி வைக்கக்கூடிய அளவிற்கு செல்வாக்கு பெற்றவர்கள்.

நிர்வாகத்தில் புலிகளாக, சிங்கங்களாக இருந்தவர்கள்- அவர்களை விட்டால் சென்னை மாநகராட்சி மன்றத்தை நிர்வகிக்க ஆள் இல்லை என்று சொல்கின்ற அளவிற்கு இருந்தவர்கள். இன்னும் சொல்லப்போனால், அவர்கள் எல்லாம் இருந்தாலும்கூட, என்னுடைய ஆருயிர் நண்பராக இருந்த மைனர் மோசஸ் போன்றவர்கள்- அவர்களையெல்லாம் ஒரே நாளில்- மாநகராட்சி மன்றத்தைக் கலைத்ததன் மூலமாக வீட்டிற்கு அனுப்பி- அதன்மூலமாக எனக்கல்ல; கட்சிக்கு நான் சம்பாதித்துக் கொடுத்த அந்த மதிப்பு, மரியாதைதான் அடுத்த தேர்தலிலே தி.மு.க. வெற்றி பெறுவதற்குக் காரணமாக இருந்தது.

இந்தப் பழைய வரலாற்றை- வரலாறு தரும் பாடத்தை உணர்ந்து கொண்டால், கட்சிக்கு, கழகத்திற்கு - வருகிற சட்டமன்றத் தேர்தலிலே வெற்றி நிச்சயம். மாநகராட்சி மன்ற உறுப்பினர்களைக் கேட்டுக் கொள்கிறேன்; கழக உறுப்பினர்களைக் கேட்டுக் கொள்கிறேன்; வட்டச் செயலாளர்களைக் கேட்டுக் கொள்கிறேன்- பகுதிச் செயலாளர்களைக் கேட்டுக் கொள்கிறேன்; மாவட்டச் செயலாளரைக் கேட்டுக் கொள்கிறேன்- என்னவென்றால், சென்னையிலே நடைபெறுகின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கூட்டங்கள் என்று இல்லாமல், கழகம் சார்ந்த நிகழ்ச்சிகள் எதுவானாலும், அந்த நிகழ்ச்சிக்கு மாவட்டத்தினுடைய நிர்வாகிகள் அனைவரும் செல்லவேண்டும்.

எத்தனையோ நிகழ்ச்சிகள் - நானே கலந்து கொள்கின்ற கழக சார்புடைய அல்லது கழகச் சார்பில்லாத- கழகத் தோழர்கள் கலந்து கொள்கின்ற நிகழ்ச்சிகள்- அந்த நிகழ்ச்சிகளுக்கெல்லாம் யார் யார் வருகிறார்கள் என்று பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஒரு மாவட்டச் செயலாளர் என்றால், அடிக்கடி தலைமைக் கழகத்திற்கு வரவும், தலைவரோடு கலந்து பேசவும் தனது வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். நீல நாராயணன் உள்ளிட்ட மாவட்டக் கழகத்தினுடைய செயலாளர்கள் பணியாற்றியபோதும் சரி, எப்போதும் அவர்கள் தலைமைக் கழகத்திற்கு வருவார்கள்; எங்களோடு பேசுவார்கள்.

எங்களோடு கலந்து செயலாற்றுவார்கள். தலைமைக் கழகத்தோடு நாள்தோறும் தொடர்பு கொண்டு, தலைமைக் கழகத்திலே இருக்கிற எங்களோடு & நான் இல்லாவிட்டால் பேராசிரியர்- பேராசிரியர் இல்லாவிட்டால் மற்றவர்கள் அல்லது துணை முதல்- அமைச்சர் அல்லது துணைப் பொதுச் செயலாளர்- இவர்களோடு எல்லாம் தொடர்பு கொண்டு கழகப் பணிகளை ஆற்றிட வேண்டுமென்று கழக நிர்வாகிகளைக் கேட்டுக் கொள்கிறேன்.

இந்தக் கழகத்தைக் கட்டிக் காக்கின்ற பணியிலே- எல்லோருக்கும் வழிகாட்டியாக விளங்க வேண்டுமென்று மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிலே இருக்கின்ற தம்பிமார்கள் அனைவரையும் இந்தக் கூட்டத்தின் வாயிலாகக் கேட்டுக்கொண்டு; நான் சொன்ன வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப நடந்து கழகத்தைக் காப்பாற்றுங்கள். தேர்தல் வரட்டும்; போகட்டும். கழகத்தை என்றென்றும் காப்போம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்- அமைச்சர் கருணாநிதி பேசினார்.

கருத்துகள் இல்லை: