வெள்ளி, 29 அக்டோபர், 2010

வாஷிங்டன் மெட்ரோ ரயில் நிலையங்களை தகர்க்க அல் கொய்தாவுக்கு திட்டம் தீட்டிக் கொடுத்த பாக். அமெரிக்கர்!

வாஷிங்டன்: அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் மெட்ரோ ரயில் நிலையங்களைத் தகர்க்கும் முயற்சி முறியடிக்கப்பட்டது. இதற்காக அல் கொய்தாவுக்கு திட்டம் தீட்டிக் கொடுத்த நபரை எப்.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவில் ரயில் மற்றும் பேருந்து நிலையங்களை அல் கொய்தா தீவிரவாதிகள் தாக்கலாம் என்று உளவுத் துறை அன்மையில் எச்சரித்தது. இந்நிலையில் பாகிஸ்தானில் பிறந்து வெர்ஜீனியாவில் வாழும் அமெரிக்கரான பரூக் அகமது (34) என்பவரை மெட்ரோ ரயில் நிலையங்களைத் தகர்க்க திட்டம் தீட்டியதற்காக எப்பிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

அகமது மீது சந்தேகம் கொண்ட அதிகாரிகள் அவரை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அவரது நடவடிக்கைகள் வினோதமாக இருந்ததையடுத்து பிடித்து விசாரித்ததில் மெட்ரோ ரயில் நிலையங்களைத் தகர்க்கும் சதி தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அல் கொய்தா தீவிரவாதிகளுக்கு சதி திட்டம் தீட்டியது உள்பட அவர் மீது 3 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

அகமதை அலெக்சாண்டிரியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின் நீதிபதி ஒப்புதல் பெற்று அவரை முறைப்படி கைது செய்தனர். அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நிரூபனமானால், அகமதுவுக்கு அதிகபட்சமாக 50 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும்.

பரூக் அகமது கடந்த ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் 25-ம் தேதி வரை வாஷிங்டனில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களை கண்காணித்து தகவல் சேகரித்து வந்தார். ஆர்லிங்டன், சிமெட்ரி, கோர்ட்ஹவுஸ், கிறிஸ்டல் சிட்டி, பென்டகன் சிட்டி ஆகிய முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்களை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தார்.

அவற்றை வைத்து வரைபடம் தயாரித்து, எந்தெந்த இடத்தில் குண்டு வைக்கலாம் என்று தீவிரவாதிகளுக்கு ஆலோசனையும் கூறியுள்ளார். ஏராளமான பயணிகளைக் கொள்ள வேண்டும் என்றால் மாலை 4 மணி முதல் 5 மணிக்கு குண்டு வெடிக்கும்படி செய்யவேண்டும் என்று கூறியுள்ளார்.

நிதானமாகச் செயல்பட்டு அடுத்த ஆண்டு இந்த திட்டத்தை நிறைவேற்றி ஏராளமான பொது மக்களைக் கொள்வது தான் இவர்களின் திட்டம். ஆனால் அந்த திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் ராபர்ட் கிப்ஸ் உறுதிப்படுத்தினார்.

கருத்துகள் இல்லை: