கோவை: கோவையில் இரண்டு குழந்தைகளை தண்ணீரில் தள்ளி விட்டு கொடூரமாகக் கொலை செய்த அந்த பாதகனை உடனடியாக தூக்கில் போட வேண்டும் என்று நடிகர் விஜய் ஆவேசமாக கூறியுள்ளார்.
கோவையில் இரண்டு அப்பாவிக் குழந்தைகளைக் கடத்தி அநியாயமாக தண்ணீரில் தள்ளி விட்டுக் கொலை செய்த பாதகன் மோகன் என்கிற மோகன் ராஜை போலீஸார் கைது செய்துள்ளனர். அனைவரின் உள்ளத்தையும் பதறடித்துள்ளது இந்த சம்பவம்.
இந்தநிலையில் இச்சம்பவம் குறித்து வேதனையும், கோபமும் வெளியிட்டுள்ளார் நடிகர் விஜய்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கோவையில் பள்ளிக்கு சென்ற அக்கா, தம்பி, முஸ்கின், ரித்திக் என இரு குழந்தைகளை பணத்துக்காக கடத்தி கொலை செய்த சம்பவம் அறிந்ததும் இதயம் உறைந்து போனது.
துள்ளி திரிந்த இரு இளம் தளிர்களை ஈவு, இரக்கமில்லாமல் கொலை செய்ய எப்படித்தான் மனம் வந்ததோ தெரியவில்லை. பெற்ற குழந்தைகள் இவ்வளவு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அவர்களது பெற்றோர் மனதை என்ன பாடு படுத்தியிருக்கும் என நினைத்து பார்க்கவே அச்சமாக உள்ளது.
பணத்துக்காக குழந்தைகளை கடத்தும் கொடூர கும்பலை இனியும் விட்டு வைக்கக் கூடாது. இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.
குழந்தைகளை கடத்தி கொலை செய்வது தான் உலகிலேயே மிக கொடூரமான குற்றம். இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு உடனடியாக மரண தண்டனை விதிக்கும் வகையில் அவசர சட்டங்கள் ஏற்படுத்தவேண்டும்.
இதை ஒரு நடிகனாக சொல்லவில்லை. மனிதநேயமுள்ள கோடிக்கணக்கான மக்களின் மனக்குமுறலையும், வேதனையையும் வெளிப்படுத்தியுள்ளேன். குழந்தைகளை இழந்த பெற்றோருக்கு ஆறுதல் மட்டுமே மருந்தாகிவிடாது. கடவுளால் மட்டுமே அவர்களுக்கு ஆறுதல் வழங்கமுடியும் என்று கூறியுள்ளார் விஜய்.
தான் நடித்து வரும் வேலாயுதம் படத்தின் படப்பிடிப்புக்காக தற்போது உடுமலைப் பகுதியில் தங்கியுள்ளார் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக