பள்ளிப் படிப்பைப் பாதியிலே நிறுத்தியவர்கள், பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் தோல்வியுற்றவர்கள், குறைந்த மதிப்பெண் பெற்றதால் அடுத்த உயர்கல்விக்குப் போகாமல் வீட்டில் இருக்கிற மாணவ, மாணவியரைச் சந்திப்பதற்காக கிராமங்களுக்குச் சென்றேன். மாணவர்களுக்குத் தொழிற் பயிற்சிக் கற்றுத் தருகின்ற சமுதாயக் கல்லூரியில் சேருங்கள் என்று அவர்களிடம் சொன்னேன். உடனே, அவர்கள் கேட்ட கேள்வி, "எங்காவது இலவசமாகத் தொழிற் கல்வி கற்று தருவார்களா? அங்கே நாங்கப் போகத் தயார் என்று சொன்னார்கள்.
இன்னொரு முறை மகளிர் சுய உதவிக் ழுக்களில் செயல்படுகின்ற பெண்களிடம், தலைமைத்துவப் பயிற்சிக்கு வருவீர்களா? என்று கேட்டதற்கு ""அந்த பயிற்சிக்கு வந்தா ஏதாவது இலவசமா பணமோ, பொருளோ தருவீங்களா?'' என்று உடனே கேட்டார்கள். நான் ஒன்றும் பதில் பேச முடியவில்லை.
எல்லாம் இலவசமாகத் தரப்பட வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் பரவலாகக் காணப்படுகிறது. இலவசம் என்ற சிந்தனை எப்படி மக்களிடம் திணிக்கப்பட்டது?. இலவசம் என்ற கருத்து எங்கிருந்து முளைக்கிறது? இலவசம் கொடுப்பதால் ஆட்சியாளர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் கிடைக்கிற ஆதாயம் என்ன?. இலவசம் பெறுவதால் மக்களுக்கு ஏற்படுகின்ற உடனடி மற்றும் நீண்டகால பாதிப்புகள் என்ன? மிகுந்த கவலையோடும், சமூக அக்கறையோடும் அணுக வேண்டிய கேள்விகள்.
பள்ளிக் கூடங்களில் பயிலுகின்ற ஏழை மாணவ, மாணவியர் பசியோடு இருக்கக் கூடாது என்பதற்காகவும், பசியின் காரணமாக அவர்கள் கல்வியைப் புறக்கணிக்கக் கூடாது என்பதற்காகவும் காமராஜர் காலத்தில் இலவச மதிய உணவும், எம்.ஜி.ஆர். காலத்தில் சத்துணவும் தமிழகத்தில் ஆரம்பிக்கப்பட்டது. அது காலப்போக்கில், பள்ளிக்கூட வாசல்களைக் கடந்து, பொது மக்களுக்கு வேண்டிய எல்லா அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றித் தருகின்ற இலவசங்கள் ஒவ்வொன்றாகக் கொடுக்கப்பட்டன. இலவச சேலை, வேஷ்டி, இலவச சைக்கிள், இலவச சீருடை, இலவச பாடப்புத்தகம், எரிவாயு அடுப்பு, வண்ணத் தொலைக்காட்சி பெட்டி, ஒரு ரூபாய்க்கு அரிசி என்று இலவசத்தின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
இந்த இலவசத் திட்டங்களை ஏன் அரசு முனைப்புடன் செயல்படுத்த விரும்புகிறது என்று நாம் ஆழமாக சிந்தித்துப் பார்க்க வேண்டும். வறுமைக்கும், அறியாமைக்கும் காலங்காலமாக வாக்கப்பட்டுள்ள ஏழை எளிய மக்களின் தாற்காலிகத் தேவைகளை இந்த இலவசங்கள், மிக நேர்த்தியாக பூர்த்தி செய்து விடுகின்றன. பல நாட்கள் தண்ணீரே குடிக்காமல் நாக்கு வறண்டு கிடக்கிற ஒரு மனிதனுக்கு ஒரு செம்பு தண்ணீர் கொடுத்தால் எவ்வளவு மகிழ்ச்சியடைவானோ, அதே மகிழ்ச்சியை இலவசம் பெறுகிறவர்களும் அடைகிறார்கள். ஆனால், அந்த மகிழ்ச்சி தொடருமா? நீண்ட நாட்களுக்கு நீடிக்குமா? என்று யாருமே யோசிப்பதில்லை.
மக்களின் நீண்ட காலத் தேவைகளைப் பூர்த்தி செய்கிற வகையில் அரசு பல திட்டங்களைத் தீட்டுவதில்லையே ஏன்? மக்களை எப்போதும் விளிம்பு நிலையில் வைத்திருந்தால்தான் ஆட்சியாளர்கள் அதிகாரத்தைத் தக்க வைக்க முடியும். மக்களின் நீண்ட காலத் தேவைகளை அரசு நிறைவேற்றினால், அவர்கள் சுயசார்புள்ளவராக மாறி விடுவதற்கான வாய்ப்பு உள்ளது. மக்கள் சுயமாக சிந்தித்து செயல்பட ஆரம்பித்து விட்டால், அரசின் திட்டங்களைக் கேள்வி கேட்கும் நிலைக்கு வளர்ந்து விடுவார்கள் என்ற பயம் உள்ளது. அதன் பின்பு விழிப்படைந்த நிலையில், இலவசமே வேண்டாம் என்று சொல்லி விடுவார்கள். "எங்களுக்கு தன்மானம் உண்டு. நாங்கள் உழைத்து சாப்பிட விரும்புகிறோம்' என்று உறுதிப்பட சொல்லிவிடுவார்கள்.
மேலும், இலவசம் என்ற பெயரில் ஆளும் அரசியல் கட்சிகளுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் இடையில் எண்ணற்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பாதாள அறையில் யாருக்கும் தெரியாமல் கையெழுத்தாகின்றன. இதனால், குறைந்த விலையில் தரமற்ற பொருட்களைத் தனியார் நிறுவனங்கள் உற்பத்தி செய்து அள்ளி வீசுகின்றன.
இலவசமாக விநியோகம் செய்யப்படுகின்ற பொருட்களுக்கு தரம் இருந்தால் என்ன?, இல்லாவிட்டால் என்ன? என்ற மனநிலையோடு நிறுவனங்கள் செயல்படுகின்றன. இலவசமாக கொடுக்கப்பட்ட வேஷ்டி, சேலை, சைக்கிள், வண்ணத் தொலைக்காட்சி பெட்டியின் தரத்தை பற்றி மக்களிடம் கேட்டுப் பார்த்தால்தான் தெரியும்.
இலவசம் பெறுவதால் மக்களுக்கு ஏற்படுகின்ற உடனடி மற்றும் நீண்ட கால பிரச்சினைகள் என்ன? இலவசப் பொருட்கள் அடிப்படையில் மனித மாண்பை சீர்குலைக்கிறது. உடல் ஆரோக்கியத்தோடு இருக்கிற யாரும் தன்னுடைய உடல் உழைப்பால் சம்பாதித்து முன்னேறவும், சொந்தக் காலில் நிற்கவும் தான் விரும்புவர். அதன் மூலம் தான் அவருக்கு தன்மானம் தக்கவைக்கப்படும்.
மேலும் இலவசம் என்ற கருத்தானது மக்களுடைய ஆளுமையில் கண்ணுக்குப் புலப்படாத பல மாற்றங்களை ஏற்படுத்திச் செல்கிறது. இலவசமாகப் பெறுகின்ற எதுக்கும் மதிப்பில்லை என்பதை நம்முடைய அன்றாட வாழ்வில் நாமே உணர்ந்திருப்போம். காரணம், அந்தப் பொருட்களை என்னுடைய தேவையறிந்து, வாங்கும் சக்தியறித்து, அதை வாங்கவில்லை. என்னுடைய விருப்பத்திற்கு மாறாகக் கொடுக்கப்பட்ட பொருட்களை நான் எப்படி பயன்படுத்தினால் என்ன? என்ற மனப்பாங்கு, நாளடைவில் சொந்தமாகப் பணம் போட்டு வாங்கிய பொருட்களையும் பொறுப்பற்ற வகையிலே பயன்படுத்துகின்ற அவல நிலைக்கு ஆளாகி விடுகின்றனர்.
ஜனநாயக நாட்டில் வாழுகின்ற எல்லோருக்கும் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தருவது அரசின் கடமையாகும். மக்கள் சுய சார்புடன் வாழ்வதற்கு வேண்டிய வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருவது அரசின் கடமையாகும். கல்வி, மருத்துவம், போக்குவரத்து துறை, கட்டுமானப் பணிகள் ஆகிய துறைகளில் அரசே முன்னின்று மக்களுக்கு சேவைகளை வழங்குவதில் அக்கறை செலுத்த வேண்டும். தனியார் துறையின் ஆதிக்கத்தைக் குறைக்கும்போது, பொது மக்கள் எல்லோருக்கும் அவரவர் தகுதி மற்றும் திறமைக்கேற்ப வேலை வாய்ப்புகளை வழங்க முடியும். இதனால் தனிநபர் வருமானம் கூடுவதோடு, வாங்கும் சக்தியும் கூடும். அப்போது ஒவ்வொருவரும் அவரவர் தேவைக்கேற்ப, அவரவர் விருப்பப்படி பொருட்களையும், சேவைகளையும் வாங்கிக் கொள்ள முடியும். இதைச் செய்யாத அரசு, இலவசம் என்ற பெயரில் மக்களை ஒரு வகையில் பிச்சைக்காரர்களாக மாற்றிக்கொண்டிருக்கிறது.
இலவசங்களை முற்றிலும் ஒழிக்க வேண்டுமென்றால், அடித்தட்டு மக்கள் முதலில் விழிப்படைய வேண்டும். அறியாமை என்னும் சேற்றிலிருந்து எழுந்து, அறிவொளி வீசும் தெளிந்த நீரோடைக்கு வர வேண்டும். இலவசம் கொடுக்கிற அரசியல் தலைவர்களிடமிருந்து மாற்றம் ஒரு போதும் வராது. மாற்றம் கீழே இருந்து வரும்போதுதான் அது உண்மையானதாக இருக்கும். என்றைக்கும் நிலைத்து நிற்கும். இதை யார் முன்னெடுப்பது? எங்கிருந்து ஆரம்பிப்பது?
மனிதநேய ஆர்வலர்கள், மனித உரிமைப் போராளிகள், மக்களின் நலனில் அக்கறையுள்ள தொண்டு நிறுவனங்கள் எல்லாம் கூட்டாக சேர்ந்து திட்டம் தீட்ட வேண்டும். இலவசங்கள் மனித மாண்பை மழுங்கடிக்கிறது என்ற உண்மையை மக்களுக்கு புரிகின்ற மொழியில், பாணியில் எளிமையாக எடுத்துரைக்க வேண்டும். இலவசத்தால் அரசியல் தலைவர்களுக்கு கிடைக்கிற நீண்டகால ஆதாயங்களையும், மக்களுக்கு ஏற்படுகின்ற இழப்புகளையும் தெளிவாக விளக்கிச் சொல்ல வேண்டும்.
சிந்தித்து செயல்படுகின்ற மக்கள் கூட்டத்தை யாரும், எந்தக் கவர்ச்சி மிகு இலவசத்தாலும் ஈர்க்க முடியாது என்பது வரலாற்று உண்மை. இந்த வரலாற்று உண்மையைப் பயன்படுத்தி அறிவாயுதம் ஏந்துவோம். ஆற்றல்மிகு எதிர்காலம் படைப்போம்...................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக