வெள்ளி, 22 அக்டோபர், 2010

பென்டகனில் விருந்துக்கு அழைக்கப்பட்ட அல் காயிதா மதகுரு!

வாஷிங்டன் : அமெரிக்க நலனுக்கு அபாயகரமானவர் என்று அமெரிக்காவால் குற்றம் சாட்டப்பட்டவர் ஏமனை சார்ந்த மதகுரு அன்வர் அல் அவ்லாகி. ஒபாமா நிர்வாகம் அவரை கண்டால் சுடுவதற்கு ஏற்கனவே தன் காவல்துறைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இச்சூழலில் செப்டம்பர் 11 தாக்குதலில் ஈடுபட்டதாக அமெரிக்காவால் குற்றம் சாட்டப்பட்ட நபர்களோடு தொடர்புடையதாகவும் அமெரிக்காவுக்கு எதிரான மூன்று தாக்குதல்களில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்படும் ஏமனை சார்ந்த இஸ்லாமிய மதகுரு அன்வர் அல் அவ்லாகி செப்டம்பர் 11 தாக்குதல் நடந்த சில நாட்களில் பென்டகனில் விருந்துக்கு அழைக்கப்பட்டதாக வந்துள்ள செய்திகள் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இத்தகவலை முதலில் தெரிவித்த ஃபாக்ஸ் நியூஸ் செய்தி சேனல் செப்டம்பர் 11 தாக்குதலுக்கு பிறகு முஸ்லீம்கள் மேல் அமெரிக்க அரசாங்கம் காட்டிய தேவையற்ற கெடுபிடிகளால் அமெரிக்க அரசுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே இருந்த இடைவெளியை நிரப்ப அமெரிக்க அரசாங்கம் குறிப்பிட்ட சில முஸ்லீம்களை அழைத்து நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்ததாகவும் அதில் பேசுவதற்காக இமாம் அன்வர் அல் அவ்லாகி அழைக்கப்பட்டதாகவும் கூறியுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க ராணுவ செய்தி தொடர்பாளர் காலனல் டேவ் லபன் இது அமெரிக்க ராணுவம் ஏற்பாடு செய்த அதிகாரபூர்வ நிகழ்ச்சி இல்லை என்றும் அதிகாரபூர்வமுற்ற முறையில் சில அதிகாரிகள் நடத்திய நிகழ்ச்சி என்றும் கூறினர். ஆனால் அந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த பென்டகன் அதிகாரிகளுக்கு அன்வர் அல் அவ்லாகியை அமெரிக்க புலனாய்வு நிறுவனம் தேடுவது தெரியாததாலேயே அவ்லாகியை அழைத்துள்ளனர். அதை மறைக்கவே இப்படி சமாளிக்கின்றனர் என்று அமெரிக்க அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: