அயோத்தியில் ராமர் கோயில் ராம் ஜன்மபூமி நியாஸ் என்ற அமைப்பால் கட்டப்படும் என்ற சாந்த் உச்சதிகார் சமிதியின் அறிவிப்புக்கு நிர்மோகி அகாரா தலைவர் மஹந்த் பாஸ்கர் தாஸ் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ்.ஸும் அதன் மத அமைப்புமான விசுவ இந்து பரிஷத்தும் இந்தப் பிரச்சனையில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று தாஸ் எச்சரித்துள்ளார். சாந்த் உச்சதிகார் சமிதி என்ற விசுவ இந்து பரிஷத்தின் சாமியார்கள் பிரிவுதான் ராமர் கோயில் இயக்கதத்தை நடத்தி வருகிறது.
அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து நிர்மோகி அகாரா அமைப்பும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் என்று கூறிய தாஸ், பிரச்சனைக்குரிய இடத்தின் எந்த ஒரு நடவடிக்கைக்கும் நிர்மோகி அகாராவுக்கே உரிமை உண்டு என்று கோருவோம் என்றும் அவர் கூறினார். செப்டம்பர் 30ஆம் தேதியன்று அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், தற்போதைய கோயில் ராம் லாலா விராஜ்மான் அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம். அந்த அமைப்புக்காக நீதிமன்றத்தில் வாதாடியவர் ஆர்எஸ்எஸ்சைச் சார்ந்தவர் என்றும் தாஸ் கூறினார்.
பிரச்சனைக்குரிய இந்த இடத்தை உயர் நீதிமன்றம் எந்த தனி நபருக்கோ அல்லது ஆர்எஸ்எஸ்ஸிற்கோ வழங்கவில்லை என்பதை சங்பரிவாரத்திற்கு நான் நினைவூட்ட விரும்புகிறேன் என்றும் தாஸ் கூறினார். மத்திய டுமிற்குக் கீழே உள்ள பகுதிகள் ஹிந்துக்களுக்கு என்றுதான் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
பிரச்சனைக்குரிய நிலத்தின் உரிமை தங்களுக்குக் கிடைத்துவிட்டதாக எண்ணிக் கொள்ளும் இந்துக்களில் மிகச்சிலரை மட்டுமே பிரதிநிதித்துவப் படுத்தும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் விசுவ இந்து பரிஷத் ஆகியவை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மீண்டும் ஒரு முறை நன்றாக ஆய்ந்து கொள்ளட்டும் என்றும் தாஸ் கூறினார்.
ராம் சபுதரா மற்றும் சீதா ரஸோய் ஆகியவை நிர்மோகி அகாராவுக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்று நீதிமன்ற உத்தரவில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்றில் ஒரு பாகம் ராம் லாலாவுக்கும் பொதுவாக இந்துக்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே எங்களிடம் மூன்றில் ஒரு பாகம் உள்ளது. ராம் லாலா விராஜ்மானுக்கு நெருக்கமான இந்துக்கள் நாங்கள்தான் என்பதால், ராமர் கோயிலைக் கட்டும் உரிமை எங்களுக்கே உள்ளது என்றும் தாஸ் கூறியுள்ளார்.
சாந்த் உச்சதிகார் சமிதி மற்றும் ராம் ஜன்மபூமி நியாஸ் கோவா மற்றும் புது டில்லியில் விசுவ இந்து பரிஷத்தால் கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டவை. அவை இரண்டும் ஆர்எஸ்எஸ்ஸின் நிழல் அமைப்புகள் என்று குற்றம் சாட்டிய தாஸ், இத்தகைய குழுக்களை நாங்கள் அங்கீகரிப்பதில்லை. அயோத்தியில் உள்ள மக்களுக்கோ, பொதுவாக இந்துக்களுக்கோ அவர்களால் எந்த நன்மையும் விளையப் போவதில்லை என்றும் தாஸ் கூறினார்.
தன்னுடைய நிலையை அகில இந்திய அகாரா பரிஷத்தின் தலைவர் மஹந்த் கியான் தாஸும் ஆதரிப்பதாக பாஸ்கர தாஸ் கூறினார். இந்த வழக்குக்கு சம்பந்தமில்லாதவர்கள், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தவறாக விங்கிக் கொண்டு ராமர் கோயிலை கடத்திச் செல்ல முயல்கின்றனர். அத்தகையோர் தொடக்கம் முதலே இதற்காக முயன்று கொண்டுள்ளனர். தற்போது நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு புதிய வியாக்கியானங்களை அவர்கள் அளிக்கிறார்கள். அவர்கள் வெற்றி பெறமாட்டார்கள் என்றும் பாஸ்கர தாஸ் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக