புதன், 20 அக்டோபர், 2010

ஆறு ஆண்டுகளாக தேடப் பட்டு வந்த முன்னாள் திமுக எம்.எல்.ஏ கைது!

தமிழக அரசின் பொதுப் பணித் துறையில் என்ஜினீயராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் வெங்கட் ராமன். இவர் தனது குடும்பத்தினருடன் சென்னை மேற்கு மாம்பலத்தில் வசித்து வந்தார். நேற்று வெங்கட் ராமனின் வீட்டுக்கு 2 பேர் வந்து தங்களை வருமான வரித் துறை அதிகாரிகள் என்று அறிமுகம் செய்து கொண்டு அடையாள அட்டையை காட்டி உங்கள் வீட்டை சோதனை செய்ய வேண்டும் என்று கூறி சோதனை செய்துள்ளனர்.



சோதனை செய்த பின் 25 சவரன் தங்க நகை மற்றும் 20000 ரூபாய் ரொக்கப் பணத்தையும் எடுத்துக் கொண்டு இதற்க்கு முறையான கணக்கு காட்டி விட்டு வருமான வரி அலுவலகத்தில் வந்து பெற்று கொள்ளுங்கள் என்று கூறி விட்டு பைக்கில் ஏறி கிளம்பியுள்ளனர். அவர்களின் நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்ட வெங்கட் ராமனின் மருமகள் ராதா பைக்கை எடுத்து கிளம்பத் தயாரான நிலையில் பின்னால் இருந்தவரின் சட்டையை பிடித்து இழுத்து திருடன் என சத்தம் போட அங்கு வந்தவர்கள் அவனை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

பின்னர் நடைபெற்ற விசாரணையில் அவர் விளாத்தி குளம் முன்னாள் திமுக எம்.எல்.ஏ ரவி சங்கர் என்று தெரிய வந்தது. இவர் மீது இலங்கைக்கு போதைப் பொருள் கடத்திய வழக்கும், விளாத்திகுளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் மோசடி செய்த வழக்கும் நிலுவையில் உள்ளது. ஒரு வழக்கில் நெல்லை கோர்ட்டில் ஆஜர் படுத்துவதற்காக ரவி சங்கரை கடந்த 2004 ம் ஆண்டு நெல்லைக்கு கொண்டு வந்த நிலையில் உறவினர் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று கூறி வீட்டின் பின் புறமாக தப்பி சென்றவர் தற்போது வசமாக சிக்கியுள்ளார்.

1996 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் விளாத்தி குளம் தொகுதியில் போட்டியிட்ட வைகோவை எதிர்த்து 634 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் ரவி சங்கர் என்பது குறிப்பிடத் தக்கது.

கருத்துகள் இல்லை: