ஞாயிறு, 31 அக்டோபர், 2010

ஒபாமா வருகையை இடதுசாரிகள் எதிர்ப்பதா? வைகோ கண்டனம்!

 ஒபாமா வருகையை இடதுசாரிகள் எதிர்ப்பதா? 
 
 வைகோ கண்டனம்
                                                                           
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
அமெரிக்க குடியரசுத் தலைவர் பாரக் ஒபாமா இந்தியா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நவம்பர் 8-ந் தேதியன்று நாடு முழுவதும் இடதுசாரி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக செய்துள்ள அறிவிப்பு அதிர்ச்சியையும், மிக வேதனையையும் தருகிறது.
 
கருப்பர்கள் நடத்திய போராட்டப் பயணத்தில் உலகம் போற்றும் ஒரு கருப்பு இனத்து தந்தையின் மகனாக பிறந்த பாரக் ஒபாமா அமெரிக்க நாட்டின் குடியரசு தலைவர் ஆகி உள்ளார்.
 
இந்திய தேசப்பிதா என்று போற்றப்படும் அண்ணல் காந்தியாரை மனிதகுலத்தின் ஒளிவிளக்காக போற்றுகின்ற ஒபாமா, தன் அலுவலக அறையில் காந்தி படத்தையும் வைத்துள்ளார்.
 
ஒடுக்கப்பட்ட இனத்தில் இருந்து வந்துள்ள ஒபாமாவை, இந்திய மக்கள் வாழ்த்தி வரவேற்க கடமைப்பட்டு உள்ளனர். இந்நிலையில் இடதுசாரிக கட்சிகள், அமெரிக்காவின் கொள்கைகள் இந்திய மக்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை என்பதால், ஒபாமாவை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் எனக் கூறி உள்ளன.
 
ஒபாமா, தனது தேர்தல் பிசாரத்தில் கொடுத்த வாக்குறுதியின்படி, ஈராக்கில் இருந்து பெருமளவு அமெரிக்க படைகளை திரும்ப பெற ஆணை பிறப்பித்து உள்ளார். மீதம் உள்ள ஐம்பதாயிரம் பேரும், அடுத்த ஆண்டு இறுதிக்கு உள்ளாகத் திரும்ப அழைக்கப்படுவர் என்று உறுதி அளித்து உள்ளார்.
 
அமெரிக்க அதிபருக்கு ஆவேசமான எதிர்ப்பைக் காட்டும் இடதுசாரிகளுக்கு ஒரு கேள்வி.
 
இந்தியாவின் ஒரு பகுதியான அருணாசல பிரதேசத்தை இந்திய பகுதியாக ஏற்றுக் கொள்ளாமல் தங்கள் பகுதி என்று வரைபடம் வெளியிடுகின்ற சீன அரசை கண்டித்து போராட்டம் நடத்தியது உண்டா?
 
இலங்கையில் லட்சக் கணக்கான தமிழர்களை கொன்று குவிக்க சீன அரசும் ஆயுதங்கள் வழங்கியதே, அதை இடதுசாரிகள் கண்டித்தார்களா?
 
இலங்கையில் தமிழர்கள் படுகொலைக்கு ஆளான போது, தனது நாடு விடுதலைப்புலிகளை தடை செய்து இருந்தபோதிலும் ஒபாமா, போரை நிறுத்தச் சொல்லி மூன்று முறை குரல் கொடுத்தார்.
 
முள்ளிவாய்க்கால் கொடூரம் நிகழ இருந்த நேரத்தில் இலங்கையில் தமிழர்களுக்கு பெரும்அவலம் நேருகிறது என்று வேதனையோடு ஒபாமா அறிவித்ததையும் தமிழர்கள் மறந்துவிட மாட்டார்கள்.
 
கருப்பு இனத்தில் இருந்து வெள்ளை மாளிகை அதிபராகி உள்ள ஒபாமாவை இந்திய நாட்டின் கோடானு கோடி மக்களும் கட்சி, மத எல்லைகளை கடந்து வாழ்த்தி வரவேற்க வேண்டுகிறேன். இடதுசாரிகள், தங்கள் போராட்ட அறிவிப்பை திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டுகிறேன்.
 
இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: