கார்கில் போர் தியாகிகள் குடும்பத்துக்கு வீடுகள் கட்டுவதற்காக மும்பை கொலாபா கடற்படை தளம் அருகே நிலம் ஒதுக்கப்பட்டது. ஆதர்ஷ் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் மூலம் இந்த வீடுகள் கட்டப்பட்டன.
மொத்தம் 6 மாடிகள் கொண்ட குடியிருப்பாக வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டன. ஆனால் இந்த திட்டம் மாற்றப்பட்டு 31 மாடிகளை கொண்ட பிரமாண்டமான குடியிருப்பாக கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.
இந்த வீடுகளை கார்கில் தியாகிகளுக்கு கொடுக்காமல் அரசியல் வாதிகளும், ராணுவ தளபதிகளும் தங்க ளது பினாமி பெயரில் வீடுகளை ஒதுக்கி கொண்டது இப்போது தெரியவந்துள்ளது.
இதில் மிகப் பெரிய ஊழலே நடந்து உள்ளது. மராட்டிய முதல்-மந்திரி அசோக் சவான் நேரடியாக சம்பந்தப்பட்டு உள்ளார். அவருடைய மாமியார், மைத்துனர், மைத்துனி, ஆகியோர் பெயர்களில் 3 வீடுகளை அசோக் சவான் பெற்று உள்ளார்.
அதே போல முன்னாள் கடற்படை தளபதி மாத வேந்திரசிங், முன்னாள் ராணுவப்படை ஜெனரல் என்.சி.விஜ், ஜெனரல் தீபக் கபூர் ஆகியோரும் வீடுகளை பெற்றுள்ளனர்.
மொத்தம் 103 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. இவற்றில் பெரும் பாலானவை “பினாமி” பெயரிலேயே ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கின்றன. அவர்கள் யார்-யார்? பினாமி பெயரில் வீடுகளை பெற்றுள்ளனர் என்ற தகவல்கள் வெளியே கசிய தொடங்கி உள்ளது.
அசோக் சவான் மட்டும் அல்லாமல் அவருடைய மந்திரி சபையில் உள்ள பல மந்திரிகள் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் பலருக்கும் பினாமி பெயரில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
ஆதர்ஷ் வீட்டு வசதி கூட்டுறவு ஒன்றியத்தில் 1999-ம் ஆண்டு 30 உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர். 2010-ல் இது 103 ஆக உயர்ந்தது.
உயர்த்தப்பட்ட உறுப்பினர்களில் தான் மந்திரி மற்றும் அரசியல் தலைவர்களின் பினாமிகள் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
காங்கிரஸ் மந்திரிகளுடன் தேசியவாத காங்கிரசை சேர்ந்த 2 மந்திரிகளும் அந்த கட்சியின் சில தலைவர்களும் பினாமி பெயரில் வீடுகளை பெற்று உள்ளனர்.
முன்னாள் முதல்-மந்திரி நாராயண ரானேவின் நெருங்கிய நண்பர் ரூபாலி ராவ் என்பவரும் வீடு ஒதுக்கீட்டை பெற்றுள்ளார்.
கடற்படை தளம் அருகே இவ்வளவு பெரிய கட்டிடம் கட்ட அனுமதிப்பது இல்லை. ஆனால் மந்திரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கும் தொடர்பு இருந்ததால் உடனடியாக அனுமதிகள் கிடைத்து உள்ளன. நகர வடிவமைப்பு துறை, வருவாய்துறை, மாநகராட்சி என அனைத்து துறைகளும் அனுமதி வழங்கி உள்ளன.
ஆனால் சுற்றுச் சூழல் துறையிடம் அனுமதியை மட்டும் பெறாமலேயே கட்டிடத்தை கட்டி முடித்துள்ளனர்.
இந்த கட்டிட அனுமதி பெறப்படும் போது தற்போதைய முதல்-மந்திரி அசோக் சவான் மாநில மந்திரியாக இருந்தார். அவர் துறை சார்பிலும் கட்டிடத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.
கட்டிடம் அனுமதி வழங்கியதில் தற்போதைய மத்திய மந்திரிகள் விலாசராவ் தேஷ்முக், சுஷில்குமார் ஷிண்டே ஆகியோருக்கும் தொடர்பு உள்ளது. இவர்கள் இருவரும் முன்பு மராட்டிய முதல்-மந்திரியாக இருந்த போது இந்த கட்டிடத்துக்கு பல்வேறு அனுமதிகளை வழங்கி இருக்கிறார்கள்.
நாராயண ரானே முதல்- மந்திரியாக இருந்த போது கட்டிடம் கட்ட முதல் அனு மதி வழங்கப்பட்டது. அடுத்து விலாசராவ் தேஷ்முக் முதல்-மந்திரியாக இருந்த போதும் சில அனுமதிகள் பெறப்பட்டன. சுஷில் குமார் ஷிண்டே முதல்-மந்திரியாக இருந்த போது இறுதி அனுமதியை வழங்கியுள்ளார்.
எனவே விலாசராவ் தேஷ் முக், சுஷில்குமார் ஷிண்டே ஆகியோரும் ஊழலில் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் பினாமி பெயரில் வீடு பெற்று இருக்கிறார்களா? என்பது இதுவரை தெரியவில்லை. விசாரணைக்கு பிறகே இது பற்றி முழுமையாக தெரிய வரும்.
முதல்-மந்திரி அசோக் சவானுக்கு தொடர்பு இருப்பது தெரிந்ததுமே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவரை டெல்லிக்கு அழைத்து விசாரணை நடத்தினார். அப்போது அசோக்சவான், சோனியாவிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
ஆனால் ராஜினாமா கடிதத்தை சோனியா ஏற்க வில்லை. இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை தரும்படி மத்திய மந்திரிகள் பிரணாப் முகர்ஜி, ஏ.கே.அந்தோணி ஆகியோருக்கு உத்தரவிட்டு உள்ளார்.
அவர்கள் இன்று மாலை அசோக் சவானிடம் விசாரணை நடத்த உள்ளனர். அதன் பிறகு அறிக்கையை சோனியாவிடம் தாக்கல் செய்வார்கள். அசோக் சவான் மீது தவறு இருப்பதாக தெரிந்தால் அவரது ராஜினாமா ஏற்கப்படும்.
அமெரிக்க அதிபர் ஒபாமா வருகிற 6-ந் தேதி மும்பை வருகிறார். அவர் பயணம் முடிந்ததும் அசோக் சவான் ராஜினாமா ஏற்கப்பட்டு புதிய முதல்-மந்திரி தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மராட்டிய மந்திரிகள் சிலரும், காங்கிரஸ் தலைவர்களும் வீடு ஒதுக்கீட்டை பெற்று உள்ளனர். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படலாம்.
மத்திய மந்திரிகள் விலாசராவ் தேஷ்முக், சுஷில்குமார் ஷிண்டே ஆகியோருக்கும் இதில் பங்கு இருக்கிறது. எனவே அவர்கள் மீதும் நடவடிக்கைகள் பாயலாம். அவர்களும் தவறு செய்தது உறுதிப்படுத்தப்பட்டால் மத்திய மந்திரி பதவியையே இழக்க வேண்டியது வரும்.
அசோக் சவான் மீது பாரதீய ஜனதா இன்னொரு ஊழல் குற்றச்சாட்டை கூறியுள்ளது. மும்பை குடிசை மறுவாழ்வு திட்டத்தில் கட்டிடம் கட்டுவதில் ரூ.50 ஆயிரம் கோடி ஊழல் செய்து விட்டதாக பாரதீய ஜனதா தலைவர் ஏக்நாத் கத்சே கூறியுள்ளார்.
பாரதீய ஜனதா அகில இந்திய செய்தி தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் வீடு ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியை கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக