மத்திய அரசின் தவறான ஏற்றுமதி கொள்கைளை கண்டித்தும், பருத்தி ஏற்றுமதியை தடை செய்யக்கோரியும், மத்திய-மாநில அரசுகளை கண்டித்தும் தே.மு.தி.க. சார்பில் திருப்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது
தே.மு.திக. தலைவர் விஜயகாந்த் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி பேசியதாவது:-
மத்திய அரசு கடைபிடித்து வரும் பருத்தி ஏற்றுமதி கொள்கையால் அனைத்து ஜவுளித் தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. பஞ்சு, நூல் விலையேற்றத்தால் விவசாயிகளுக்கும் நல்லவிலை கிடைக்கவில்லை. சிறு, குறு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து திருப்பூரை விட்டு வெளியேறுகின்றனர்.
வேலை வாய்ப்பின்றி உள்ள திருப்பூர் மக்களிடம் தற்போது பசிதான் நிறைந்துள்ளது. ஆனால் டாலர் சிட்டி என்று உண்மைக்கு மாறான தகவல்களை வெளிப்படுத்திக்கொண்டுள்ளனர். பெருகி வரும் வேலையிழப்புக்கு காரணமான பருத்தி ஏற்றுமதிக்கு தடை விதித்து கொப்பரைத் தேங்காய்களை கொள்முதல் செய்வது போல் பருத்தியையும் அரசே கொள்முதல் செய்ய வேண்டும். அதன் மூவம் விவசாயிகளுக்கும் நல்ல விலையை கொடுக்க வேண்டும்.
சீனா, பாகிஸ்தான், வங்கதேசம் என இந்திய ஜவுளித்தொழில்களுக்கு போட்டியாக உள்ள நாடுகளுக்கே பருத்தி ஏற்றுமதி செய்வது கத்தியால் குத்துபவன் கையிலேயே கத்தியை கொடுப்பது போல் உள்ளது.
சுயமரியாதை இயக்கமான தி.மு.க.வை உருவாக்கிய அண்ணா, மக்களை காங்கிரஸ் ஏமாற்றுகிறது என்றார். ஆனால் தற்போது தி.மு.க.வை வழி நடத்தும் கருணாநிதி காங்கிரசுடன் கூட்டணி வைத்து அண்ணா உருவாக்கிய தி.மு.க.வை மாற்றிவிட்டார்.
கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் கூறுவதுபோல் தி.மு.க.வினர் சொத்துக்கணக்குகளை காட்ட வேண்டும். பா.ஜ.க. ஆட்சி புரியும் இடங்களில் ஊழல் இல்லை என்கிறார் அத்வானி. ஆனால் கர்நாடகத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ. 25 கோடி லஞ்சம் கொடுக்கின்றனர். அந்த வகையில் பா.ஜ.க.வும் ஊழல்தான் புரிகிறது.
தற்போது தே.மு.தி.க. எந்த கட்சியுடன் கூட்டணி என்று பேசப்படுகிறது. நான் என்னை நம்பி வந்த மக்களை மட்டுமே நம்பிக்கொண்டு இருக்கிறேன். கூட்டணிக்காக தே.மு.தி.க. அலையவில்லை.
உங்களைப் பார்த்ததும் நான் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளேன். அப்படி நான் நடத்தும் மாநாட்டில் குடும்பம் குடும்பமாக பிள்ளை, குட்டிகளுடன் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும். நமக்கு நாமே பாதுகாப்பு என்பதைபோல் அந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் உங்கள் அனைவருக்கும் நான்பாதுகாப்பு கொடுக்கிறேன்.
மேற்கண்டவாறு விஜயகாந்த் பேசினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக