சனி, 23 அக்டோபர், 2010

அமெரிக்காவால் கொல்லப்பட்ட பல்லாயிரம் ஜப்பானியர்களின் உடல்கள் கண்டுபிடிப்பு!

ஜப்பான் நாட்டில் இவோ ஜிமா என்ற தீவில் இரண்டு பெரிய பிணக்குவியல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றிலும் குறைந்தது 2000 ஜப்பான் போர் வீரர்கள் புதைக்கப்படிருக்கின்றனர் என்றும், இரண்டாம் உலகப் போரில் சண்டை நடந்த இடங்களில் இதுவே மிகக் கொடூரமானது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரண்டாம் உலகபோரின் முடிவில் அமெரிக்கா தனது படைகளால் கொல்லப்பட்ட 51 ஜப்பானிய படைவீரர்களின் உடலை இந்த தீவில் இரு இடங்களில் புதைத்துள்ளதாக தெரிவித்ததை அடுத்து, இம்மாத தொடக்கத்தில் ஜப்பானிய ஆய்வாளர்கள் அந்த வீரர்களின் சடலங்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது குறிப்பிட்ட இந்த பிணக்குவியல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த மீட்புக்குழு வெள்ளிகிழமை தனது அறிக்கையை ஜப்பான் பிரதமருக்கு தெரிவிக்கவிருந்தது.

இந்த தேடுதல் பணிகளை மேற்பார்வையிட்ட ஜப்பான் சுகாதார அமைச்சக அதிகாரிகள் 51 வீரர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப் பட்டதாகவும், அந்த இரு இடங்களிலும் மேலும் ஆயிரக்கணக்கான வீரர்களின் உடல்கள் உள்ளதாகவும் இத்தகவலை உறுதிப்படுத்தினார்கள். ஆனால் அங்கு புதைந்திருக்கும் வீரர்களின் எண்ணிகையை இப்போது உறுதிப்படுத்திக் கூறவோ அல்லது, இந்த தேடுதல் குழுவின் அறிக்கை பற்றிய வேறு விசயங்களைப் பற்றியோ இப்போது தெரிவிக்க முடியாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

1945 ஆம் ஆண்டு நடந்த போருக்குப் பின், இந்தத் தீவில் இருந்து போரிட்டுக் கொண்டிருந்த 12,000 ஜப்பானிய வீரர்களைப் பற்றி எவ்விதத் தகவலும் கிடைக்கவில்லை. அவர்கள் இறந்திருக்கலாம் என்று கருதிய ஜப்பானிய அரசு அவர்களின் சடலங்களைத் தேடும் பணியில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வந்தது. இந்த மீட்புக்குழுவின் கண்டுபிடிப்பு பல ஆண்டுகளாக நடைபெறும் ஜப்பானின் தேடுதலுக்கு ஒரு விடையைக் கொடுத்துள்ளது.

ஜப்பான் அரசால் இவோடோ என்று பெயரிடப்பட்ட இந்த தீவு அன்றைய அதிநவீன ரேடார் நிலையம், மூன்று விமான ஓடுதளம் ஆகியவற்றைக் கொண்டு இரண்டாம் உலகப் போரில் ஜப்பானின் மிக முக்கிய தளமாக இருந்தது. இந்தத் தீவை கைப்பற்றுவது போரில் அமெரிக்காவிற்கு முக்கிய இலக்காக இருந்தது. இதன் மூலம் மட்டுமே ஜப்பானின் மீது அணு குண்டை போடும் தனது திட்டம் சாத்தியம் என்று அமெரிக்கா கருதியது. கிட்டத்தட்ட 22,000 ஜப்பானிய வீரர்களைக் கொன்று இந்த தீவைக் கைப்பற்றி பசிபிக் கடலில் தனது ஆதிக்கத்தின் அடையாளமாக இந்த தீவின் உயர்ந்த சிகரமான மவுண்ட் சுரிபசியில் தனது கொடியை அமெரிக்கா ஏற்றியது.

இப்போரில் 6,821 அமெரிக்கர்களும், 21,570 ஜப்பானியர்களும் கொல்லப்பட்டனர். ஒவ்வொரு வருடமும் டஜன் கணக்கில் பிணங்கள் தோண்டியெடுக்கப் பட்டுவந்தன. ஆனால் 12,000 ஜப்பான் மற்றும் 218 அமெரிக்க வீரர்களின் கதி என்னவென்றே தெரியவில்லை.

தற்போதைய அறிக்கையின் படி ஜப்பானின் ஓடுதளத்திற்கு அருகில் 2000 உடல்களும் சுராபிச்சி சிகரத்தின் அடிவாரத்தில் 70 முதல் 200 உடல்களும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன என்றும் இவற்றை மொத்தமாக மீட்டெடுக்க பல மாதங்கள் ஆகலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: