சகோதர யுத்தமே ஈழப் போராட்டத்துக்கும் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்கும் காரணம் என்று முதல்வர் கருணாநிதி கடந்த சில அறிக்கையில் தொடர்ந்து கூறி வருகிறார். இத்தனை நாளும் இதற்கு பதில் தராமலிருந்த, ஈழத் தமிழ் ஆதரவாளர்கள், இப்போது ஈழப் போராளிகள் விஷயத்தில் கருணாநிதி எப்படி நடந்துகொண்டார் என்பதை மேடைகளில் வெளியிட்டு வருகிறார்கள்.
ஈழப் போராளி குட்டிமணியை இலங்கை ராணுவத்திடம் காட்டிக் கொடுத்தவரே கருணாநிதிதான் என்றும், தன்னை விட பிரபாகரனையே ஈழத் தமிழர்கள் மதித்ததால், கருணாநிதி எந்த உதவியும் செய்ய மறுத்துவிட்டார் என்றும் பழ நெடுமாறன் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.சமீபத்தில் சென்னை ராணி சீதை மன்றத்தில் நடந்த கவிஞர் காசி ஆனந்தனின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பழ.நெடுமாறன் இப்படிப் பேசினார்:
“கருணாநிதி ஈழப்போராட்டத்திற்குச் செய்த துரோகங்கள் குறித்து இதுவரை நான் பேசாத பல விஷயங்களை இன்று பேசப்போகிறேன்.1985-ம் ஆண்டு கருணாநிதியின் பிறந்தநாளுக்குக் கிடைத்த ஒரு லட்ச ரூபாய் பணத்தை போராளி இயக்கங்களுக்குப் பங்கு போட்டுக் கொடுப்பதாக கருணாநிதி அறிவித்தார். இந்தப் பணத்தைக் கொடுத்துவிட்டு விளம்பரம் தேடிக் கொள்வார் என்பதால் புலிகள் பணம் வாங்கச் செல்லவில்லை. உடனே எரிச்சலடைந்த கருணாநிதி, “என் பணத்தை அவர்கள் வாங்க மாட்டார்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்” எனக் கூறினார்.
ஆனால் அதே நேரத்தில்தான் எந்த விளம்பரமும் இல்லாமல் கோடிக்கணக்கான ரூபாய்களை எம்.ஜி.ஆர் புலிகளுக்கு வாரிக் கொடுத்துக் கொண்டிருந்தார். தன் சொந்தப் பணத்தையே அள்ளிக் கொடுத்தார் அவர்.இருந்தாலும் புலிகளில் சில தம்பிகளுக்கு கருணாநிதி மேல் நம்பிக்கை இருந்ததால் அவரைச் சந்தித்து பணம் கேட்கலாம் என்று பிரபாகரனிடம் வற்புறுத்தினர். சரி, அவரைப் பற்றி தெரிந்து கொள்ளவாவது, போய் கேட்டுப் பாருங்கள் என நான் சொன்ன ஏற்பாட்டின்படி, 26.1.85 அன்று கருணாநிதியைச் சந்தித்தனர்.
அவரிடம் டஎங்களுக்குப் பத்து கோடி ரூபாய் வேண்டும்’ என்று கேட்டுள்ளனர். அவர்களை அனுப்பிவிட்டு என்னைத் தொடர்பு கொண்ட கருணாநிதி, ‘என்ன இவ்வளவு பணம் கேட்கிறார்கள்’ என்றார் பெரும் அதிர்ச்சியுடன். பின்னர் புலிகள் அமைப்பினரைச் சந்திக்கும்போது ‘உங்களுக்கு கருணாநிதியைப் பற்றித் தெரியவேண்டும் என்பதற்காகத்தான் அவரிடம் அனுப்பினேன்’ என்று கூறினேன்.
5.6.86-ம் ஆண்டு தி.மு.க கூட்டம் சென்னை கடற்கரையில் நடந்தது. கடற்கரை மணலில் யாரோ குண்டை செருகி வைத்திருந்தார்கள். அந்தப் பழியை தி.மு.க தலைமை புலிகள் மீது போட்டது. நான் பாலசிங்கத்தையும்,பேபியையும் அனுப்பி உண்மையைச் சொல்ல வைத்தேன். பிறகு குண்டு வைத்தது ‘டெலோ’ அமைப்புதான் எனக் கண்டுபிடித்தனர்.
மீண்டும் கருணாநிதியை நாங்கள் சந்தித்தபோது, ‘பிரபாகரன் என்னை மதிக்கவில்லை. பிரபாகரனா? மக்களா? என்றால் இரண்டும் ஒன்றுதான். அந்த மக்கள் பிரபாகரனைத்தான் தலைவனாக நினைக்கிறார்கள்.அவர்களுக்காக நான் எதுவும் செய்ய மாட்டேன்,’ என்றார்.
இந்தியா,-இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தான சமயத்தில் தமிழர் விடுதலை முன்னணியின் அமிர்தலிங்கம் உடன்பாட்டை ஆதரித்துப் பேசினார். நான் இதுகுறித்து அவரிடம் கேட்டபோது,’மத்திய உளவுப்பிரிவின் நெருக்குதலில்தான் நான் இந்த அறிக்கையைக் கொடுத்தேன். அப்போது ‘என் அறிக்கையைக் கண்டித்து கருணாநிதி பதில் அறிக்கை கொடுத்தால் என்ன செய்வது?’ என்று உளவுத் துறையினரிடம் கேட்டேன். ‘அவர் அப்படியெல்லாம் அறிக்கை கொடுக்க மாட்டார்’ என்று உளவுப்பிரிவினர் என்னிடம் சொன்னார்கள். அவர்கள் சொன்னபடியேதான் கருணாநிதியும் நடந்து கொண்டார்’ என்று என்னிடம் குறிப்பிட்டார்.
அதற்கு பின் கருணாநிதியை அமிர்தலிங்கம் சந்தித்தபோது, ‘நேற்று பிறந்த பயல் (பிரபாகரன்) அவன். இரண்டே நாளில் இந்திய ராணுவம் அவனது கொட்டத்தை அடக்கும்’ என்று சொல்லியிருக்கிறார். இது உண்மையா? இல்லையா? இதை கருணாநிதி மறுப்பாரா?
1987-ம் ஆண்டு ஜூலை மாதம் போடப்பட்ட ராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தம் பற்றி ஒரு வார்த்தை கூட இன்றுவரை கருணாநிதி பேசியதில்லை. உடன்பாட்டைத் தொடர்ந்து குமரப்பா உள்பட 12 பேர் உயிர்த்தியாகம் செய்தார்கள். இதைக் கண்டித்து அனைத்துக் கட்சித்தலைவர்களும் அறிக்கை வெளியிட்டார்கள்.
ஆனால் நியூயார்க் மருத்துவமனையில், உடல் நலம் குன்றிய நிலையிலும் எம்.ஜி.ஆர். அறிக்கை வெளியிட்டார். நாங்கள் நடத்திய பந்திற்கு அன்றைய அமைச்சர் பொன்னையனையே அனுப்பி வைத்தார். ஆனால் கருணாநிதி வாயே திறக்கவில்லை.
இவற்றையெல்லாம் விட மிக மோசம், கருணாநிதி செய்த இன்னொரு செயல்.
கருணாநிதி முதல்வராக இருந்தபோது, அதாவது 1973-ம் வருடம் தமிழ்நாட்டில் இருந்து ஜெலட்டின் குச்சிகளை எடுத்துச் செல்லும்போது குட்டிமணியை போலீஸார் பிடித்தார்கள். அவரை சிங்களப் படையிடம் கருணாநிதிதான் ஒப்படைத்தார்.
குட்டிமணி உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று உணர்ந்து 1983-ம் ஆண்டு சட்டசபையில் தீர்மானம் கொண்டுவர முயற்சித்தபோது, எதிர்க் கட்சித் தலைவராக இருந்த கருணாநிதி ஒப்புக்கொண்டார். அப்போது எம்.ஜி.ஆர். முதல்வர். மகிழ்ச்சியடைந்த நாங்கள் இதுகுறித்து பேச எம்.ஜி.ஆரைச் சந்தித்தபோது அவர், ‘உங்களுக்கு கருணாநிதியைப் பற்றித் தெரியாது. அவர் இந்த விவகாரம் பற்றி ஏதாவது பேசினால் நான் இந்தக் கோப்பை வாசிப்பேன்’, என்று கூறி அந்த ரகசியங்களை எங்களிடம் காட்டினார்.
அந்தத் தாள்களில் குட்டிமணியை ஒப்படைக்கக் கோரிய இலங்கை ராணுவத்தின் ஃபேக்ஸ், டெல்லிக்கு இவர் அனுப்பிய பதில், ‘ஒப்படைக்கிறேன்’ என கருணாநிதி கைப்பட எழுதிக்கொடுத்த கடிதம் என அனைத்து ஆதாரங்களும் இருந்தன. சொன்னபடியே சட்டசபையில் எம்.ஜி.ஆர்.அந்த ஆதாரங்களை முழுமையாக வாசித்தார். இது சட்டமன்றக் கோப்புகளிலும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
‘என் மரணத்திற்குப் பிறகு என்னுடைய கண்களை பார்வையில்லாத ஒரு தமிழனுக்குக் கொடுங்கள். மலரப்போகும் தமிழீழத்தை அந்தக் கண்களின் வழியாக நான் பார்க்க விரும்புகிறேன்’, இலங்கை வெளிக்கடைச் சிறையில் கொடூரமாகக் கொல்லப்பட்ட மாவீரன் குட்டிமணி மரணத்தின் வாயிலில் நின்று உகுத்த வார்த்தைகள் இவை. இந்த வார்த்தைகளுக்காகவே சிங்கள ராணுவம் குட்டிமணியின் கண்களைத் தோண்டி பூட்ஸ் காலால் நசுக்கிய வரலாறை உலகமெங்கும் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்கள் மறந்து விடவில்லை. ராஜீவ் காந்தி படுகொலை வழக்கை விசாரித்து வந்த தடா சிறப்பு நீதிமன்றம், அந்த வழக்கில் இருந்து பிரபாகரன், பொட்டு அம்மான் பெயர்களை நீக்குவதாக அறிவித்துள்ளது. ஆனால் அவர்களது மரணச் சான்றிதழ்கள் இன்னமும் இலங்கை அரசால் வழங்கப்படவில்லை.
இதற்காக பலமுறை இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் இலங்கைக்குப் படையெடுத்தும் பலனில்லை. ‘கொழும்புவில் உள்ள இந்திய துணைத் தூதர் மற்றும் இலங்கை அரசு கொடுத்துள்ள தகவல்களின் அடிப்படையில் இவர்கள் பெயர்களை வழக்கில் இருந்து நீக்க வேண்டும்’ என்ற சி.பி.ஐ. தலைமை விசாரணை அதிகாரியின் அறிக்கையின் பேரில் பிரபாகரன்,பொட்டு அம்மான் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன…”, என்றார்.
வைகோ பேசுகையில், “என்னை வெளிநாடுகளில் பேச அழைக்கிறார்கல் தமிழ்ச் சகோதரர்கள். ஆனால் நான் போகப் போவதில்லை. அந்த வேலையை தமிழகத்திலேயே செய்யப்போகிறேன்…” என்று ஆரம்பித்தவர், கருணாநிதியின் துரோகங்களைப் பட்டியலிட்டார்.
இறுதியில் “நிறைவாக இருக்கும் வரை மறைவாக இரு’ என காசி ஆனந்தனின் வரிகள், பிரபாகரனுக்கும் பொருந்தும்!” என்று அவர் தனது பேச்சை முடித்த போது கூட்டம் மிகுந்த உணர்ச்சிவசப்பட்டிருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக