திங்கள், 1 நவம்பர், 2010

சாலையில் பறந்த 1,000 ரூபாய் நோட்டுகள்!

போக்குவரத்து நிறைந்த சென்னையின் சாலை ஒன்றில் திடீரென பறந்த 1,000 ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் போட்டி போட்டு எடுக்க குவிந்ததால்  அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சென்னையை அடுத்த ஆவடி காமராஜர் சிலை அருகே உள்ள ரெயில்வே மேம்பாலம் ஆவடியில் இருந்து பூந்தமல்லி செல்லும் முக்கியமான நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த சாலையில் ஞாயிற்றுக் கிழமை மதியம் 1 மணியளவில் வாகனங்கள் `சர்', `சர்' என்று பறந்து கொண்டிருந்தன.

அப்போது, திடீரென ஏதோ ஒரு வாகனத்தில் இருந்து 1,000 ரூபாய் நோட்டுகள் காற்றில் பறந்து வந்து சாலையில் விழுந்தன. இதைப்பார்த்ததும் அந்த வழியாக சென்ற பொதுமக்களும், சாலையின் இருபக்கம் நின்று கொண்டிருந்தவர்களும் ஓடி வந்து ரூபாய் நோட்டுகளை எடுக்க ஆரம்பித்தனர். வாகனங்களில் சென்று கொண்டிருந்தவர்களும் சாலையின் ஓரமாக தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு, ஓடி வந்து ரூபாய் நோட்டுகளை எடுத்தனர்.

மக்கள் போட்டி, போட்டுக்கொண்டு ரூபாய் நோட்டுகளை எடுக்க குவிந்ததால், சாலையில் சென்ற வாகனங்கள் நடுரோட்டில் நிறுத்தப்பட்டது. இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. அந்தப்பகுதியில் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. அப்போது அந்த சாலையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி கொண்டிருந்த ஏட்டு கல்யாணி, திடீரென போக்குவரத்து ஸ்தம்பித்ததை பார்த்து, ஏதோ விபரீதம் நடந்து விட்டதோ என்று அங்கு விரைந்து வந்தார்.

ஆனால், பொதுமக்கள் போட்டி, போட்டுக் கொண்டு நடுரோட்டில் ரூபாய் நோட்டுகளை எடுத்துக் கொண்டிருந்ததை பார்த்து வியப்படைந்தார். அவர், ரூபாய் நோட்டுகளை எடுத்துக் கொண்டிருந்தவர்களிடம் இருந்து அவற்றை பறிமுதல் செய்தார்.

பறிமுதல் செய்யப்பட்ட தொகை ரூ.33 ஆயிரம் ஆகும். அவர், அந்த பணத்தை போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் பெரியகருப்பனிடம் ஒப்படைத்தார். பெரியகருப்பன் இதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விட்டு, ரூ.33 ஆயிரத்தையும் சட்டம், ஒழுங்கு பிரிவு போலீஸ் அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

நடுரோட்டில் பறந்த இந்த பணம் யாருடையது? வாகனத்தில் சென்ற யாரேனும் இந்த பணத்தை தவற விட்டனரா? அல்லது கொள்ளையடித்தவர்கள் பணத்தை பங்கு போட்டபோது தகராறு ஏற்பட்டு, அவர்கள் கையில் இருந்து வெளியே வீசப்பட்டதா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: