புதன், 3 நவம்பர், 2010

சென்னையில் சுற்றி வளைப்பு சிறுவனை கடத்திய 2 பேர் சிக்கினர்; ரூ.1 1/2 கோடி பணத்தை மீட்க நடவடிக்கை

சென்னையில் சுற்றி வளைப்பு
 
 சிறுவனை கடத்திய 2 பேர் சிக்கினர்;
 
 ரூ.1 1/2 கோடி பணத்தை மீட்க நடவடிக்கை
சென்னை அண்ணா நகர் இசட் பிளாக் 7-வது தெருவில் வசித்து வருபவர் ரமேஷ். கிரானைட் தொழில் அதிபர்.
 
இவரது மூத்த மகன் கீர்த்தி வாசன். இவன் முகப்பேரில் உள்ள டி.ஏ.வி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறான்.
 
கீர்த்திவாசன் தினமும் பள்ளிக்கு காரில் சென்று வருவான். அவனை தினமும் காலையில், பள்ளியில் விட்டு விட்டு மாலை மீண்டும் வீட்டுக்கு அழைத்து வரும் வேலையை கோவிந்தராஜ் என்ற டிரைவர் செய்து வந்தார். வழக்கம் போல நேற்று முன்தினம் பிற்பகல் அவர் காரில் கீர்த்திவாசனை பள்ளியில் இருந்து வீட்டுக்கு அழைத்து வந்து கொண்டிருந்தார்.
 
கார் புறப்பட்ட சிறிது தூரத்திலேயே சிலர் காரை வழி மறித்து ஏறிக் கொண்டனர். அவர்கள் டிரைவர் கோவிந்தராஜை மிரட்டி அடித்து கீழே தள்ளி விட்டு கீர்த்திவாசனுடன் காரை கடத்திச் சென்றனர். இது குறித்து டிரைவர் கோவிந்தராஜ் உடனடியாக ரமேசுக்கு தகவல் கொடுத்தார்.
 
ரமேஷ் போலீசாரிடம் இது பற்றி புகார் தெரிவித்தார். அதன் பேரில் சென்னையில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டன. தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது.
 
ஆனால் மர்ம மனிதர்கள், காரை மாற்றி தப்பியதால், தேடுதல் வேட்டைக்கு பலன் கிடைக்கவில்லை. இந்த நிலையில் கீர்த்தி வாசனுடன் கடத்தப்பட்ட கார் பாடி திருவல்லி சுவரர் சிவாலயம் அருகில் கேட்பாரற்று நிற்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதன் மூலம் மர்ம மனிதர்கள் கீர்த்திவாசனை அங்கிருந்து வேறொரு காரில் கடத்தி சென்றிருப்பது உறுதியானது.
 
மர்ம மனிதர்களிடம் இருந்து நீண்ட நேரத்துக்கு எந்த தகவலும் வராததால் அவர்கள் யார்? எதற்காக கீர்த்திவாசனை கடத்தினார் கள்? என்பது போன்ற விபரங்கள் தெரியாமல் இருந்தது. இரவு 11.30 மணிக்கு மர்ம மனிதர்கள் ரமேசுக்கு போன் செய்து பேசினார்கள். முதலில் அவர்கள், கீர்த்திவாசனை விடுவிக்க ரூ.4 கோடி கேட்டு மிரட்டினார்கள்.
 
ரமேஷ், கைவசம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறியதும் கடத்தல்காரர்கள் பேரம் பேசத்தொடங்கினார்கள். மீண்டும் 12.15 மணிக்கு பேசிய கடத்தல் காரர்கள் ரூ.3 கோடி கேட்டனர். அந்த தொகையை மேலும்குறைக்கு மாறு ரமேஷ் கேட்டுக் கொண்டதால் கடத்தல் காரர்கள் கோபத்தில் பேசுவதை நிறுத்தி விட்டனர். நேற்று (செவ்வாய்) காலை மீண்டும் கடத்தல்காரர்கள் ரமேசிடம் பேசினார்கள்.
 
போலீசுக்கு தகவல் கொடுத்து எங்களை பிடிக்க முயன்றால் கீர்த்திவாசனை உயிருடன் பார்க்க முடியாது என்று கடத்தல்காரர்கள் மிகக்கடுமையாக எச்சரித்தனர். இதனால் பயந்து போன ரமேஷ், போலீசாரை தவிர்த்து விட்டு, மகனை மீட்கும் முயற்சிகளில் தன்னந்தனியாக ஈடுபட்டதாக தெரிகிறது. போலீசாரிடம் தகவல் தெரிவிக்காமலே கடத்தல் காரர்களுடன் பேரம் பேசினார்.
 
நீண்ட நேரத்துக்குப்பிறகு ரூ.1 1/2 கோடி பணம் கொடுக்க ரமேஷ் ஒத்துக்கொண்டார். இதையடுத்து அண்ணா நகர் எச் பிளாக்கில் 5-வது தெருவில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் ரூ.1 1/2 கோடியை சூட்கே சில் வைக்குமாறு கடத்தல்காரர்கள் கூறினார்கள். அதை ஏற்று ரமேஷ் நேற்று மதியம் 1 மணி அளவில் குறிப்பிட்ட இடத்தில் பணத்தை கொண்டு போய் வைத்தார்.
 
சுமார் 10 நிமிடம் கழித்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் ரூ.1 1/2  கோடி பணத்தை எடுத்துச் சென்றனர். அதன் பிறகு சுமார் 1 மணி நேரம் கழித்து கடத்தல்காரர்கள் கீர்த்திவாசனை ஒரு காரில் அழைத்து வந்தனர். ரமேஷ் வீட்டுக்கு அருகில் அந்த காரை நிறுத்தி விட்டு, டிரைவர் இறங்கி ஓடி விட்டார்.
 
தெரு முனையில் தயாராக நின்றிருந்த ஒருவர் அந்த டிரைவரை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றி அழைத்து சென்று விட்டார். கடத்தல்காரர்கள் மிக, மிக திட்ட மிட்டு தாங்கள் நினைத்ததை சாதித்துக் கொண்டனர். இதனால் 24 மணி நேரத்துக்குள் இந்த கடத்தல் சம்பவம் முடிவுக்கு வந்து விட்டது.
 
கீர்த்திவாசன் கடத்தப்பட்ட தகவல் அறிந்ததும் போலீசார் சென்னை நகரை சீல் வைத்து 30 தனிப்படை அமைத்து அதிரடி வேட்டை நடத்தினார்கள். அதன் மூலம் மர்ம மனிதர்கள் இருக்கும் இடத்தை கூட நெருங்கினார்களாம். ஆனால் கீர்த்தி வாசன் உயிருக்கு ஏதாவது ஆபத்தாகி விடக்கூடாது என்பதற்காகவே அதிரடி நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்கிறார்கள்.
 
தனிப்படை போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் 2 பேர் மட்டுமே கடத்தில் ஈடுபட்டதாக தெரிய வந்தது. ஆனால் 6 பேர் கொண்ட கும்பல் மாணவன் கீர்த்திவாசனை கடத்தி பணம் பறித்துள்ளது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த 6 கடத்தல்காரர்களும் தலா 2 பேர் வீதம் பிரிந்து புத்திசாலித்தனமாக செயல்பட்டுள்ளனர்.
 
கீர்த்திவாசனை முதலில் கடத்தியது 2 பேர் தான். அதன் பிறகு பாடி சிவன்கோவில் பகுதியில் வேறொரு காரில் தயாராக நின்ற மேலும் 2 பேர் கீர்த்திவாசனை புறநகருக்கு கொண்டு சென்றுள்ளனர்.
 
கீர்த்திவாசனை கடத்திய போது 3 தடவை அவர்கள் காரையும், இருப்பிடத்தையும் மாற்றி உள்ளனர். இதற்கிடையே ரமேஷ் “எச்” பிளாக் 5-வது தெருவில் வைத்த ரூ.1 1/2 கோடி பணத்தை மோட்டார் சைக்கிளில் வந்து எடுத்து சென்றது கடத்தல் கும்பலைச் சேர்ந்த வேறு 2 நபர்கள் என்று தெரியவந்துள்ளது. இதன் மூலம் கடத்தல்காரர்கள் சிறு, சிறு குழுக்களாகப் பிரிந்து திட்டமிட்டு, மிக சாதுர்யமாக பணத்தை பறித்துள்ளது தெரிய வந்துள்ளது.
 
இதற்கிடையே கடத்தல் காரர்களை அவர்களது செல்போன் உரையாடல் மூலம் தனிப்படை போலீசார், பின் தொடர்ந்தபடி இருந்தனர். உளவுத்துறையினரும் சில பயனுள்ள தகவல்களைக் கொடுத்தனர். இதனால் கடத்தல் கும்பலில் ஒரு குழுவை தனிப்படை போலீசார் நேற்றிரவு சுற்றி வளைத்தனர்.
 
கடத்தல்காரர்களில் 2 பேர் மட்டும் பிடிபட்டனர். மற்றவர்கள் தப்பி விட்டனர். பிடிபட்ட 2 பேரும் மாணவன் கீர்த்திவாசனை காரில் கடத்தி சென்றவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
 
பிடிபட்ட 2 பேரிடம் ரூ.1 1/2 கோடி பணம் இல்லை என்று கூறப்படுகிறது. கடத்தல் கும்பலை சேர்ந்த மற்றவர்களிடம் பணம் உள்ளது. அவர்களையும், ரூ.1 1/2  கோடி பணத்தையும் மீட்க தனிப்படை போலீசார் அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். விரைவில் கடத்தல் கும்பலை பிடித்து விடுவோம் என்று போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
 
இதற்கிடையே கடத்தல்காரர்கள் யார்? அவர்களை பின்னணியில் இருந்து இயக்கியது யார்? போன்ற தகவல்களை கண்டு பிடிக்க தனிப்படை போலீசாரின் ஒரு பிரிவு நடவடிக்கையில் ஈடுபட்டது. முதல் கட்டமாக ரமேசுக்கு எதிரிகள் யார்- யார் உள்ளனர்? தொழில் போட்டியாளர்கள் யார்- யார்? என்பது பற்றிய பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதில் சில பயன் உள்ள தகவல்கள் கிடைத்தன.
 
ரமேஷ், தனக்கு நெருக்கமான தொழில் அதிபர் ஒருவரிடம் ரூ.4 கோடி வாங்கி இருந்தாராம். அந்த பணத்தை அவர் நீண்ட நாட்களாக திருப்பி கொடுக்க வில்லையாம். அந்த தொழில் அதிபர் பல தடவை கேட்டும் ரமேஷ் ரூ.4 கோடி பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தாராம்.
 
ஒரு கட்டத்தில் பணம் கொடுத்த நபர் ரூ.4 கோடியை உடனே தர வேண்டும் என்று மிரட்டினாராம். அப்போது ரமேஷ் கோபத்தில், “உன்னால் என்னை எதுவும் செய்ய முடியாது. உன்னை விட நான் பெரிய ஆள். நான் நினைத்தால் உன்னையே தூக்கி விடுவேன்” என்று சவால் விட்டாராம்.
 
இதையடுத்து கோபம் அடைந்த அந்த நபர், “ரூ.4 கோடியை திருப்பித்தரா விட்டால் உன் மகனை கடத்து வேன்” என்று பதிலுக்கு சவால் விட்டாராம். எனவே அவருக்கும் கீர்த்திவாசன் கடத்தலுக்கும் தொடர்பு உண்டா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது தவிர ரமேஷ் உறவினர் ஒருவர் மீதும் தனிப்படை போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது குறித்த தகவல்கள் ரமேஷ் சொல்ல மறுப்பதாக கூறப்படுகிறது. இதனால் தான் கீர்த்திவாசன் கடத்தல் சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மையான தகவல்கள் வெளிவருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: