சனி, 6 நவம்பர், 2010

4 நாள் சுற்றுப்பயணம் ஒபாமா மும்பை வந்தார்; பலத்த பாதுகாப்பு ஏற்பாடு

4 நாள் சுற்றுப்பயணம்
 
 ஒபாமா மும்பை வந்தார்;
 
 பலத்த பாதுகாப்பு ஏற்பாடு
மும்பை, நவ.6-
 
அமெரிக்க அதிபர் ஒபாமா 4 நாள் பயணமாக இன்று இந்தியா வந்தார்.
 
அமெரிக்காவில் இருந்து அவர் நேற்று சுமார் 3 ஆயிரம் பேருடன் இந்தியாவுக்கு புறப்பட்டார்.
 
அமெரிக்க அதிபர் பயணம் செய்வதற்கு என்றே “ஏர்போர்ஸ்ஒன்” என்ற அதிநவீன விமானம் உள்ளது. அந்த விமானத்தில் அவர் ஜெர்மனி, பாகிஸ்தான் வழியாக பகல் 12.50 மணியளவில் மும்பை வந்தார். அவருடன் அவரது மனைவி மிச்செல், வந்தார்.
 
மும்பை விமான நிலையத்தில் தரை இறங்கியபிறகு ஒபாமா அவரது மனைவியும், அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் மூலம் தெற்கு மும்பையில் உள்ள கொலாபா இந்திய கடற்படை தளத்துக்கு சென்றனர். அங்கிருந்து லிமோசின் காரில் தாஜ் ஓட்டலுக்கு சென்றனர்.
 
ஒபாமா வருகையை முன்னிட்டு மும்பையில் வரலாறு காணாத அளவுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தாஜ் ஓட்டல் முழுவதும் அமெரிக்க கமாண்டோ வீரர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. தாஜ் ஓட்டலுக்கு வந்ததும் ஒபாமா தனது அறைக்கு சென்று சிறிது நேரம் ஓய்வு எடுத்தார்.
 
இன்று பிற்பகல் தாஜ் ஓட்டலில் சிறப்புக் கூட்டம் ஒன்று நடக்கிறது. அதில் ஒபாமா கலந்து கொண்டு தீவிரவாதத்துக்கு எதிராக போராட வேண்டியதின் அவசியம் பற்றி பேசுகிறார். பிறகு தாஜ் ஓட்டலில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான சிலரின் குடும்பத்தினரை சந்தித்து பேசுகிறார்.
 
மும்பை மணிபவனில் மகாத்மா காந்தி மியூசியம் உள்ளது. இன்று மாலை ஒபாமா அங்கு சென்று பார்வையிட்டு அஞ்சலி செலுத்துகிறார்.
 
இன்றிரவு மும்பையில் அமெரிக்கா - இந்தியா தொழில் முனைவோர்களின் கூட்டுக்கூட்டம் நடக்கிறது. அதில் ஒபாமா கலந்து கொண்டு பேசுகிறார். அப்போது இந்தியா-அமெரிக்கா இடையே பல்வேறு தொழில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
தாஜ் ஓட்டலில் இன்றிரவு தங்கும் ஒபாமா நாளை (7-ந் தேதி) மும்பையில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்துக்கு சென்று தீபாவளியை கொண்டாடுகிறார். இதை யடுத்து மும்பை புனித சேவியர் கல்லூரியில் நடக்கும் விழாவிலும் ஒபாமா பங்கேற்கிறார்.
 
நாளை மாலை ஒபாமா மும்பை யில் இருந்து டெல்லி புறப்பட்டுச் செல்வார். டெல்லி விமான நிலையத்தில் ஒபாமாவுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்படும். அந்த நிகழ்ச்சி முடிந்ததும் டெல்லி மவுரியா ஓட்டலில் ஒபாமா தங்குகிறார்.
 
திங்கட்கிழமை (8-ந்தேதி) காலை ஒபாமா டெல்லியில் உள்ள முகலாய மன்னர் ஹூமாயூன் சமாதிக்கு சென்று பார்வையிடுகிறார். அதன் பிறகு ஒபாமாவும் அவரது மனைவியும் பிரதமர் மன்மோகன்சிங் வீட்டுக்கு செல்கிறார்கள். அங்கு அவர்களுக்கு பிரதமர் மன்மோகன்சிங் தனிப்பட்ட முறையில் விருந்து கொடுக்கிறார்.
 
அதன்பிறகு மகாத்மா காந்தி சமாதிக்கு சென்று மலர் வளையம் வைத்து ஒபாமா அஞ்சலி செலுத்துகிறார். இதையடுத்து ஒபாமா ஜனாதிபதி மாளிகைக்கு செல்கிறார். அங்கு அவருக்கு உற்சாக ராணுவ அணிவகுப்பு அளிக்கப்படும்.
 
அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட பிறகு ஒபாமாவும் பிரதமர் மன்மோகன்சிங்கும் சந்தித்துப்பேசுவார்கள். பின்னர் இருவரும் அமெரிக்க, இந்திய நிருபர்களுக்கு கூட்டாக பேட்டி கொடுப்பார்கள்.
 
திங்கட்கிழமை பிற்பகல் பாராளுமன்றக்கூட்டுக்கூட்டம் நடைபெறுகிறது. அதில் ஒபாமா கலந்து கொண்டு உரையாற்றுகிறார். அந்த கூட்டம் முடிந்ததும் ஒபாமா தன் குடும்பத்தினருடன் மீண்டும் ஜனாதிபதி மாளிகைக்கு செல்கிறார்.
 
ஜனாதிபதி பிரதீபா பட்டீலுடன் ஒபாமா பேச்சு நடத்துவார். அதன் பிறகு ஒபாமாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அரசு சார்பில் விருந்து கொடுக்கப்படுகிறது. விருந்து நிகழ்ச்சி முடிந்ததும் மவுரியா ஓட்டலுக்கு திரும்பி வந்து ஒபாமா ஓய்வு எடுப்பார்.
 
8-ந் தேதி ஒபாமாவும், பிரதமர் மன்மோகன்சிங்கும் கூட்டறிக்கை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தங்கள் இரு நாட்டு பொருளாதார வளர்ச்சிக்கு வேகத்தை கொடுக்கும் என்று கூறப்படுகிறது.
ஒபாமா தனது இந்திய பயணயத்தின் 4-வது நாள் (9-ந் தேதி) காலை ஏதேனும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா என்பது அறிவிக்கப்படவில்லை. அன்று காலை ஒபாமா 4 நாள் இந்திய பயணத்தை முடித்துக்கொண்டு இந்தோனேசியா நாட்டுக்கு புறப்பட்டுச்செல்கிறார்.

கருத்துகள் இல்லை: