திங்கள், 1 நவம்பர், 2010

நேரில் செல்லத் தேவையில்லை: 6400 தனியார் பள்ளிகளுக்கு 3 மாதத்தில் கட்டணம் நிர்ணயம்; புதிய தலைவர் ரவிராஜபாண்டியன் பேட்டி

நேரில் செல்லத் தேவையில்லை: 6400 தனியார் பள்ளிகளுக்கு 3 மாதத்தில் கட்டணம் நிர்ணயம்; புதிய தலைவர் ரவிராஜபாண்டியன் பேட்டி
தனியார் பள்ளிகளுக்கு கல்வி கட்டணம் நிர்ணயிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்து அறிவித்தது. கமிட்டி நிர்ணயித்த கட்டணத்தை கொண்டு பள்ளியை நடத்த இயலாது எனமேல் முறையீடு செய்தன. 6,400 தனியார் பள்ளிகள் கமிட்டியிடம் முறையீட்டு மனுக்களை அளித்தன.
 
இதற்கிடையில் தனியார் பள்ளிகள் சார்பில் சென்னை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. 4 மாதத்தில் 6,400 தனியார் பள்ளிக்கும் கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். பள்ளிகள் சார்பில் சமர்பிக்கப்படும் ஆவணங்களை முழுமையாக ஆய்வு செய்து நிர்ணயம் செய்ய வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
 
இந்த நிலையில் கமிட்டி தலைவர் நீதிபதி கோவிந்தராஜன் தனது பதவியை ராஜினாமா செய்தார். அந்த பதவிக்கு ஓய்வு பெற்ற நீதிபதி ரவி ராஜபாண்டியனை அரசு நியமித்தது.
 
புதிய தலைவராக அவர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை கல்லூரி சாலை டி.பி.ஐ. வளாகம் பெற்றோர் ஆசிரியர் சங்க கட்டிடத்தில் உள்ள கமிட்டி அலுவலகத்தில் பொறுப்பேற்றார்.
 
அவருக்கு உயர் கல்வி துறை செயலாளர் கணேசன், அனைவருக்கும் திட்ட இயக்குனர் வெங்கடேசன், பள்ளி கல்வி இயக்குனர் பெருமாள்சாமி, இணை இயக்குனர்கள் தர்மராஜேந் திரன், ராமேஸ்வர முருகன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
 
பின்னர் நீதிபதி ரவிராஜபாண்டியன் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
 
கேள்வி:- 6,400 தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் எப்போதும் நிர்ணயிக்கப்படும்.
 
பதில்:- ஐகோர்ட்டு உத்தரவின்படி 6,400 பள்ளிகளுக்கும் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் கட்டணம் நிர்ணயிக்கப்படும்.
 
கேள்வி:- ஐகோர்ட்டு உத்தரவிட்டு ஒருமாதம் ஆகிவிட்டது. 3 மாதத்தில் கட்டணம் நிர்ணயிக்கப்படுமா?
 
பதில்:- ஐகோர்ட்டு உத்தரவு கடைபிடிக்கப்படும். அதை பின்பற்றி அதில் கூறப்பட்டுள்ளபடி அந்த காலக்கட்டத்திற்குள் நிர்ணயம் செய்து அறிவிப்போம்.
 
கேள்வி:- தனியார் பள்ளிகளுக்கு நேரில் செல்வீர்களா?
 
பதில்:- நேரில் செல்லத்தேவையில்லை. நேரில் போக வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவில் கூறப்படவும் இல்லை. பள்ளிகள் வழங்கும் ஆவணங்களை வைத்து கட்டணம் முடிவு செய்யப்படும்.
 
கேள்வி:- தகவல் தராத 534 பள்ளிகள் பற்றி?
 
பதில்:- இணையதளத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. இதனால் அதை பற்றி இப்போது பதில் சொல்ல முடியாது.
 
கே:- கூடுதல் கட்டணம் வசூலித்த பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
 
பதில்:- அது என்னுடைய பணியல்ல. கல்வித்துறை அதிகாரிகள் எடுக்க வேண்டும்.
 
கேள்வி:- பள்ளிகளுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்.
 
பதில்:- பள்ளிகள் நல்ல முறையில் கல்வியை போதிக்க வேண்டும்.
 
இவ்வாறு நீதிபதி ரவிராஜ பாண்டியன் கூறினார்.

கருத்துகள் இல்லை: