மும்பை: மும்பையில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா செல்லும் இடங்களை `போர்ஸ் ஒன்' கமாண்டோ படையினர் ஆய்வு செய்தனர்.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நான்கு நாள் அரசு முறைப் பயணமாக நாளை மறுதினம் (6ம் தேதி) இந்தியா வருகிறார். முதலில் அவர் மும்பை வந்திறங்கவுள்ளார்.
இதையொட்டி மும்பை நகரில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்திய உளவுப் பிரிவினர், மத்திய பாதுகாப்புப் படையினர், மாநில போலீசாருடன் அமெரிக்க அதிபரின் சிறப்புப் பாதுகாப்பு படையினர், அந் நாட்டு உளவுப் பிரிவினரும் மும்பையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
அதிபர் ஒபாமா செல்வார் என எதிர்பார்க்கப்படும் இடங்களில் மகாராஷ்டிர போலீஸ் கமாண்டோக்களான `போர்ஸ் ஒன்' படையினர் முகாமிட ஆரம்பித்துள்ளனர்.
ஒபாமா மற்றும் அவருடன் வரும் குழுவினர் தங்கும் தாஜ் ஹோட்டல், டிரைடன்ட் ஹோட்டல், தாஜ் பிரசிடெண்ட், கிராண்ட் ஹயாத் ஹோட்டல்களை இந்தப் படையினர் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டனர்.
மேலும் சேவியர்ஸ் கல்லூரி, ஹோலி நேம் பள்ளி, மும்பை பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் ஏதோ ஒன்றுக்கு ஒபாம செல்வார் என்று தெரியவந்துள்ளது. இந்த இடங்களும் பாதுகாப்புப் படையினர் வசம் வந்துவிட்டன.
ஆனால் இது தொடர்பான தகவல்களை பாதுகாப்பு
ஒபாமா வருகையையொட்டி `கேட்வே ஆப் இந்தியா' பகுதியில் 3 நாட்கள் படகுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தாஜ் ஹோட்டல் அருகேயுள்ள சாலைகளும் இரண்டு நாட்கள் மூடப்படவுள்ளன.
மேலும் ஒபாமா செல்லும் பாதைகளிலும் வெடி குண்டு நிபுணர்கள் சோதனைகளை நடத்த ஆரம்பித்துவிட்டனர்.
தென்னை மரங்களில் தேங்காய்கள் அகற்றம்:
மகாத்மா காந்தி மும்பை வரும் போது தங்கும் மணி பவனை ஒபாமா பார்வையிட ஆர்வமாக உள்ளார். இதன் வளாகத்தில் ஏராளமான தென்னை மரங்கள் உள்ளன.
இந்த இடத்தைப் பார்வையிட்ட ஒபாமாவின் பாதுகாப்பு அதிகாரிகள், அங்கிருந்த மரங்களில் இருந்த தேங்காய்களை அகற்றுமாறு கூறியதையடுத்து மாநகராட்சி ஊழியர்கள் அவற்றை அகற்றினர்.
மும்பை தாக்குதல்-பாகிஸ்தானுக்கு ஒபாமா கண்டிப்பு:
இதற்கிடையே தனது இந்தியப் பயணத்தையொட்டி இந்திய தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு ஒபாமா அளித்துள்ள சிறப்புப் பேட்டியில் கூறியிருப்பதாவது:
பாகிஸ்தானிடம் நாங்கள் மென்மையாக நடந்துகொள்வதாக கூற முடியாது. மும்பை தாக்குதல் நடந்ததில் இருந்தே, அத்தாக்குதலில் ஈடுபட்டவர்களை நீதியின் முன் நிறுத்துவதில் பாகிஸ்தானுக்கு சர்வதேச பொறுப்பு உள்ளது என்றும், இதை ஒளிவுமறைவின்றியும், முழுமையாகவும், விரைவாகவும் செய்து முடிக்க வேண்டும் என்றும் நாங்கள் பாகிஸ்தான் அரசை வலியுறுத்தி வருகிறோம்.
இதுதொடர்பாக, ஏற்கனவே அளித்த உறுதிமொழியை பாகிஸ்தான் நிறைவேற்ற வேண்டும். தீவிரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது, பாகிஸ்தானுக்கு மட்டுமின்றி, ஆசிய பிராந்தியத்துக்கே நல்லது. தீவிரவாதிகளின் புகலிடங்களை அழிக்க, கூடுதல் நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானை தொடர்ந்து வலியுறுத்துவோம்.
எனது ஆசிய பயணத்தின் முதல்கட்டமாக இந்தியாவுக்கு செல்கிறேன். ஏனென்றால், ஆசிய தொடர்புக்கு இந்தியாவைத்தான் அடித்தளமாக நான் கருதுகிறேன். மேலும், ஜி-20 போன்ற பன்னாட்டு அமைப்புகளுடனான தொடர்புக்கும் இந்தியாவையே அடித்தளமாக கருதுகிறேன். என்னைப் பொறுத்தவரை, இந்தியாவும், அமெரிக்காவும் பிரிக்க இயலாக நட்புறவை கடைபிடிக்கின்றன.
நான் சந்தித்த தலைவர்களிலேயே அசாதாரண தலைவர், பிரதமர் மன்மோகன் சிங்தான். அந்த நல்ல நண்பருடன் இருதரப்பு உறவுகள் மட்டுமின்றி பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்க நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்தியாவின் எழுச்சி இரு நாடுகளுக்கு மட்டுமின்றி, ஆசியாவுக்கும் உலகத்துக்குமே நன்மை பயக்கும்.
அமெரிக்க நிறுவனங்கள், இந்திய கம்பெனிகளிடம் `அவுட்சோர்சிங்' பணிகளை ஒப்படைப்பதற்கு எதிராக நான் நடவடிக்கை எடுத்தது, சரியானதுதான். அமெரிக்க அதிபர் என்ற முறையில், அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுப்பது எனது கடமை.
அமெரிக்க சந்தைகளில் இந்திய நிறுவனங்கள் நுழைய நாங்கள் வாய்ப்பு அளிப்பது போல, இந்திய சந்தையில் அமெரிக்க நிறுவனங்கள் நுழைய இந்தியாவும் வாய்ப்பளிக்க வேண்டும்.
அணு விபத்து இழப்பீடு மசோதாவில் உள்ள சில அம்சங்கள் குறித்து அமெரிக்க நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன. இதுபற்றி இந்தியாவும், அமெரிக்காவும் பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
இந்தியாவின் மின்தேவையை பூர்த்தி செய்து கொள்ள, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அணு சக்தி நிறுவனங்களுக்கு இந்தியா வாய்ப்பு அளிக்கும் என்று நம்புகிறேன்.
காந்தியின் போதனைகள்-ஒபாமா புகழாரம்:
மகாத்மா காந்தி, தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை இந்தியாவில் கழித்தார். இந்தியாவுக்காக பாடுபட்டார். ஆனால், அவரது போதனைகள் உலகம் முழுவதற்கும் இப்போதும் பொருத்தமானவையாக உள்ளன.
அவரது பணிகள், அமெரிக்காவில் கறுப்பின உரிமைக்காக போராடிய மார்ட்டின் லூதர்கிங் மீது தாக்கத்தை ஏற்படுத்தின. அதன்மூலம், அமெரிக்காவில் நல்ல மாற்றம் ஏற்பட காந்தி உந்து சக்தியாக திகழ்ந்தார்.
இந்தியாவுக்கு செல்வதன் மூலம் அவரது நினைவுகளை கெளரவிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக