திங்கள், 29 நவம்பர், 2010

கருணாநிதியின் நிலை என்ன?

திராவிடம் - அரசியலில் ஆரியத்தோடு சமரசமாகி வருகிறது. திராவிட அரசியல் - ஆரிய
அரசியலுக்கு அடிபணிந்து கிடப்பது  எல்லோருக்குமே தெரியும். இப்போது கலை -
பண்பாட்டுத் துறைகளிலும், திராவிடர் அடையாளத்தை ஆரியத்தோடு சமரசம் செய்யத்
தொடங்கிவிட்டார்கள். ‘திராவிடன்’ என்பது ஆரிய எதிர்ப்பு உணர்ச்சிச் சொல்
என்றார் பெரியார். ‘ஆரிய மாயை’ எனும் ஆய்வு நூலில் அண்ணாவும் அதையே வழி
மொழிந்தார். ஆனால், பெரியார் - அண்ணாவின் அடையாளம் அரசியலில் தன்னிடம் மட்டுமே
இருக்கிறது என்று மார்தட்டும் கலைஞர் கருணாநிதியின் நிலை என்ன?
ஜெயலலிதா தன்னை பச்சைப் பார்ப்பனராகவே அடையாளம் காட்டிக் கொள்கிறவர்.
‘இந்து’த்துவா, கெள்கையில் ஊறிப்   போய் நிற்பவர். அதில் எந்தக் கருத்து
மாறுபாடுகளுக்கும் கிஞ்சித்தும் இடம் கிடையாது. அவரது ஆட்சிக் காலத்தில்
பார்ப்பனியத்தின் பரப்புரையாளரான நாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியத்துக்கு
அரசுக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை முதல்வராக இருந்த ஜெயலலிதா வழங்கினார்.
எதற்காக?
‘பரதமுனி நாட்டியாலயம்’ என்ற நிறுவனத்தை பத்மா சுப்பிரமணியம் தொடங்கி,
நாட்டியப் பயிற்சி மற்றும் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக! ‘பரதம்’ என்ற நாட்டியக்
கலை உருவானது காஷ்மீரத்தில்! ‘பரதர்’ என்ற பார்ப்பன முனிவரே அந்தக் கலையை
உருவாக்கியவர் என்பதே பத்மா சுப்பிரமணியத்தின் கருத்து. இதை வலியுறுத்தியே அவர்
ஆய்வு நடத்தி, முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார். ஆனால், பரதநாட்டியக் கலை,
தமிழர்களுக்கு சொந்த மானது. நாட்டியக் கலைகளின் நுட்பங்களையும், நாட்டியக் கலை
அரங்கேற்ற முறைகளையும் துல்லியமாக விளக்கிடும் நூல் சிலப்பதிகாரம். எனவே,
தமிழரின் கலைக்கு ஆரிய முலாம் பூசக் கூடாது என்ற வாதங்கள் தமிழர் தரப்பில் முன்
வைக்கப்பட்டன.
கலைஞர் கருணாநிதி சிலப்பதிகாரத்தில் ஆழ்ந்து திளைத்தவர். ‘பூம்புகார்’
திரைப்படத்தை உருவாக்கியவர். எனவே பத்மா சுப்ரமணியத்தின் பரத மாமுனி நாட்டிய
ஆராய்ச்சிக்கு அரசு நிலம் வழங்கிய பார்ப்பன ஜெயலலிதா வின் உத்தரவை, கலைஞர்
கருணாநிதி, பதவிக்கு வந்ததும் ரத்து செய்தார். தமிழின உணர்வாளர்கள் வரவேற்றனர்.
உடனே, பத்மா சுப்ரமணியம், அரசின் நடவடிக்கையை எதிர்த்து உயர்நீதி மன்றம்
போனார். நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது.
அண்மையில் தஞ்சை பெரிய கோயிலின் ஆயிரம் ஆண்டு விழாவை கலைஞர் கருணாநிதி அரசு
சார்பில் நடத்தினார். அங்கே பத்மா சுப்ரமணியம், ஆயிரம் பெண்களை இணைத்து,
கோயிலுக்குள் நாட்டிய நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். அதிலும், ஆதி சங்கரர் புகழ்
பரப்பும் பாடல்களும் இடம் பெற்றன. முதலமைச்சர், சோழ மன்னர் என்ற உணர்வோடு
பட்டாடைத் தரித்து, விழாவிலே பங்கேற்று நாட்டியத்தைக் கண்டு மகிழ்ந்தார். இந்த
‘ஆரூர் சோழர்’ பத்மா சுப்ரமணியத்தின் நாட்டியத் திறமையைப் புகழ்ந்தார். அடுத்த
இரண்டு வாரங்களிலேயே திராவிடமும், ஆரியமும் சமரசத்துக்கு வந்துவிட்டது.
எந்தக் கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா நிலம் ஒதுக்கித் தந்த ஆணையை ரத்து செய்தாரோ,
அதே கலைஞர் கருணாநிதி, ‘ஜெயலலிதாவின்’ முடிவை நியாயப்படுத்தி விட்டார்.
மீண்டும் பத்மாசுப்ரமணியத்திடம் நிலத்தை வழங்க முன்வந்து, அதற்கான விழாவும்
மாமல்லபுரம் அருகே உள்ள பட்டிபுலம் எனும் ஊரில் கடந்த அக்.17 ஆம் தேதி நடந்து
முடிந்துவிட்டது. ‘பரதமாமுனிவர் நாட்டியாலயம்’ என்ற பெயரோடு சிலப்பதிகாரத்தை
எழுதிய இளங்கோவின் பெயரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே பத்மா
சுப்ரமணியத்துக்கு முதல்வர் கலைஞர் கருணாநிதி விதித்த ஒரே நிபந்தனை. பெயரில்
என்ன இருக்கிறது என்ற அளவில் பத்மா சுப்ரமணியமும் ஒப்புக் கொள்ள, 5 ஏக்கர்
நிலம் மீண்டும் பதமாசுப்ரமணியத்திடம் பத்திரமாக வந்து சேர்ந்து விட்டது.
விழாவிலே பேசிய முதல்வர் கலைஞர் கருணாநிதி, நடனக் கலை மொழிகளுக்கு எல்லாம்
அப்பாற்பட்டது என்றும், யார் யாருக்கு அபிநயங்கள் அழகாகப் பிடிக்கத் தெரிகிறதோ,
அதுதான் மொழி என்றும் கூறிவிட்டார். நடனத்தில் ஆரியம், திராவிடம் என்றெல்லாம்
ஏதுமில்லை என்பதே கலைஞர் கருணாநிதி உரையின் மய்யக் கருத்து. இப்படி,
பண்பாட்டில் ஆரியமும் திராவிடமும் ஒன்று தான் என்ற முடிவுக்கு வந்து விட்டவர்,
அரசியலில் மட்டும் ஜெயலலிதா எதிர்ப்புக்காக ‘திராவிடர் - ஆரியர்’ என்ற
துருப்புச் சீட்டைப் பயன்படுத்தி வருகிறார்.
அக்டோர் 17 ஆம் தேதி மாமல்லபுரத்தில் பத்மா சுப்ரமணியத்தோடு சமரசம் பேசியவர் 22
ஆம் தேதி அறிவாலயத்தில் நடந்த கோவை மாவட்ட தி.மு.கழக நிர்வாகிகள் கூட்டத்தில்
இவ்வாறு பேசியிருக்கிறார்:
“ஆண்டாண்டுதோறும் விஜயதசமி கொண்டாடுகிற அம்மையாருடைய ஆட்சியிலேயே அண்ணா திராவிட
முன்னேற்றக் கழகம் என்று பெயர் வைத்துக் கொள்ள என்ன அருகதை இருக்கிறது? ....
ஒரு ஆரிய அம்மையார் ஆட்சியில் அண்ணாவுக்கு என்ன வேலை இருக்கிறது?” (‘முரசொலி’
அக்.23) என்று கேட்கிறார்.
ஆக, கலைஞர் கருணாநிதி பேசும் - திராவிடமும் ஆரிய எதிர்ப்பும் அரசியல்
அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான ஒரு துருப்புச் சீட்டு என்பதைத் தவிர வேறு
கொள்கைப் பார்வை ஏதும் அதில் இருப்பதாகத் தெரியவில்லை. இருந்திருந்தால்,
பரதக்கலை தமிழருக்கு மட்டுமே உரியது அல்ல; பரதர் முனிவர் உருவாக்கினார் என்பதை
தாம் மறுக்கவில்லை என்றெல்லாம் பேசியிருக்க மாட்டார்.
பார்ப்பன ஜெயலலிதா ஆயுத பூசைக்கு வாழ்த்துச் சொல்கிறார் என்றால், ‘திராவிடர்’
கலைஞர் ஆட்சியில் காவல் நிலையங்களில் அரசு ஆணைகளுக்கு எதிராக ‘தடபுடலாக’ ஆயுத
பூசை நடக்கத் தான் செய்கிறது. சுட்டிக்காட்டிய பெரியார் திராவிடர் கழகத்
தோழர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.
இராஜ இராஜ சோழனுக்கு புகழாரம் சூட்டிய ‘ஆரூர் சோழன்’, அந்த மாமன்னர் காட்டிய
வழியிலேயே செயல்பட விரும்புகிறார் போலும். பார்ப்பனனுக்கு நிலங்களை தானமாக
வழங்கி, அதற்கு ‘பிரம்மதேயம்’ என்று பெயரிட்டான். இராஜ இராஜன் தனிப்பட்ட
பார்ப்பனர் களுக்கு நிலம் வழங்கி, அதற்கு ‘ஏகபோக பிரமதேயம்’ என்று பெயரிட்டான்.
இவை கல்வெட்டுகள் கூறுகிற சேதி.
தமிழகத்தை ஆளும் ‘ஆரூர் சோழனோ’ ‘ஏகபோக பிரதம தேயங்களை’ பார்ப்பன
பத்மாசுப்ரமணியங்களுக்கு தானம் செய்து, ‘சோழன் ஆட்சிப் பெருமை’யை மீண்டும்
நிலைநாட்டியிருக்கிறார். பார்ப்பனருக்கு நிலம் தந்ததை தி.மு.க. ஆட்சி ரத்து
செய்தபோது, பாராட்டி புகழாரம் சூட்டிய ‘வீரமணிகள்’ மீண்டும் ‘தானம்’
வழங்கப்பட்டபோது வாயை இறுக மூடிக் கொண்டுவிட்டார்கள் - வழக்கம் போலவே!
வெட்கம்!
*(பெரியார் முழக்கம் அக்டோபர் 2010 இதழில் வெளியானது)*

கருத்துகள் இல்லை: