சென்னை: ஸ்பெக்ட்ரம் ஏலம் மூலம் மிகப் பெரிய அளவில் நாட்டுக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ள தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராஜாவை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கு அனைத்து இந்தியர்களும் தந்தி அனுப்ப வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் ஒரு லட்சத்து 76,379 கோடி ரூபாய் சுரண்டப்பட்டுள்ளது. இந்த ஊழலை செய்த ராசாவின் ராஜினாமாவை கோரும் துணிச்சல் காங்கிரஸ் கட்சிக்கு இல்லை.
காரணம் என்னவென்றால், ராசாவை விலக்கினால் கருணாநிதி
விலகி விடுவார். கருணாநிதி விலகிவிட்டால் மத்திய அரசு வீழ்ச்சி அடைந்துவிடும் என்று காங்கிரஸ் அஞ்சுகிறது.
ராசாவை நீக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. நன்னடத்தையின் அடிப்படையில் ராசா பதவி விலகுவார் என்று எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை.
எனவே ராசாவை பதவி நீக்க செய்யக்கோரி குடியரசுத்தலைவருக்கு
இந்தியர்கள் தந்தி அனுப்ப வேண்டும். இந்திய நாடு காப்பாற்றப்பட வேண்டுமானால் மக்கள் இதை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் பெரும் அமளி:
இதற்கிடையே, ஸ்பெக்ட்ரம் ஊழல் நாடாளுமன்றத்திலும் புயலைக் கிளப்பியுள்ளது.
நாடாளுமன்றம் கூடியதும், ஸ்பெக்ட்ரம் 2ஜி அலைவரிசை ஒதுக்கீடு, காமன்வெல்த் விளையாட்டு போட்டி, மும்பையில் கார்கில் வீரர்களுக்கான வீடு ஒதுக்கீடு திட்டம் போன்ற ஊழல்கள் குறித்து விசாரிக்க பாராளுமன்ற கூட்டு குழு அமைக்கக்கோரி பா.ஜ.க மற்றும் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இதே ஊழல் பிரச்சனை மாநிலங்களவையிலும் எதிரொலித்தது. இதன் காரணமாக மாநிலங்களவையும் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக