சென்னை: ஹஜ் செல்லும் பயணிகளை ஏமாற்றிய தனியார் ஹஜ் பயண ஏற்பாட்டாளக்ள் மீது முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தென்னிந்திய ஹஜ், உம்ரா பயணிகள் நலச்சங்கத் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து தென்னிந்திய ஹஜ், உம்ரா பயணிகள் நலச்சங்கத் தலைவர் காயல்பட்டினம் ஆர்.எஸ்.இளவரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தனியார் ஹஜ் பயண ஏற்பாட்டாளர்கள் சில கூடுதல் வசதிகள் ஏற்பாடு செய்து தருவதாக கூறுகின்றனர். இதனால் ஹஜ் செல்ல விரும்புபவர்கள் தனியார் ஏற்பாட்டாளர்களை நாடிச் செல்கின்றனர். இந்தியா முழுதும் தனியார் ஏற்பாட்டாளர்களின் மூலம் 48 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்த ஆண்டு புனித ஹஜ் பயணம் செல்கின்றனர்.
தனியார் ஹஜ் பயண ஏற்பாட்டாளர்களுக்கான ஒதுக்கீட்டை மத்திய அரசு கடந்த ஜூன் மாதம் அறிவித்தது. இதற்கு மேல் ஒதுக்கீடு அளிக்க முடியாது என்றும் தெளிவாகக் கூறியது. இதையும் மீறி சிலர் தாங்களும் ஏற்பாட்டாளர்கள் என்றும், தங்களுக்கு ஒதுக்கீடு உண்டு என்றும் கூறி ஹஜ் பயணிகளிடம் பணம் வசூலித்துள்ளனர்.
மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஹஜ் பயணிகளை ஏமாற்றியவர்கள் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் இது போன்ற ஏமாற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது முதல்வர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக