டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கியுள்ள தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராஜாவை நீக்கி விட்டு அவரது இடத்தில் கனிமொழியை அமர வைக்கத் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பாக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி , நேற்று கனிமொழியுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ராஜாவை நீக்கியாக வேண்டும் என்று வலியுறுத்தி, நாடாளுமன்றத்தை நேற்று பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முடக்கி விட்டன. ராஜா விலகும் வரை நாடாளுமன்றத்தை நடத்த விட மாட்டோம் என்றும் அறிவித்துள்ளன.
இன்னொரு பக்கம், ராஜாவை நீக்குங்கள். திமுக ஆதரவை வாபஸ் பெற்றால் நான் 18 எம்.பிக்களின் ஆதரவைத் திரட்டித் தருகிறேன் என்று அதிரடியாக கூறியுள்ளார் ஜெயலலிதா.
இப்படி பல முனைகளிலும் ராஜாவுக்கும், கட்சிக்கும் நெருக்கடி அதிகரித்திருப்பதால், திமுகவும், தற்போது ராஜா விவகாரத்தில் தனது கடும் பிடிவாதத்தை தளர்த்திக் கொள்ள முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.
ராஜாவை நீக்கி விட்டு அவருக்குப் பதில் கனிமொழியை தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக்க திமுக இறங்கி வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
நேற்று பிரணாப் முகர்ஜியை, கனிமொழி சந்தித்துப் பேசியதைத் தொடர்ந்து இந்த எதிர்பார்ப்பு வலுத்துள்ளது. ஆனால் கனிமொழி சந்திப்பு குறித்து திமுக தரப்பில் கூறுகையில், டிராய் வகுத்துள்ள விதிமுறைகளின்படிதான் ராஜா செயல்பட்டார். எனவே அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கக் கூடாது என்று கனிமொழி பிரணாபிடம் விளக்கியதாக கூறப்பட்டுள்ளது.
அதேசமயம், கனிமொழி அமைச்சராக வாய்ப்புள்ளது என்று காங்கிரஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நவம்பர் 18ம் தேதி மு.க.அழகிரியின் மகன் திருமணம் நடைபெறவுள்ளது. எனவே திருமணத்திற்குப் பிறகு ராஜா விவகாரம் குறித்து முடிவெடுக்க முதல்வர் கருணாநிதி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
அதேசமயம், தென்கொரியா சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங் டெல்லி திரும்புகிறார். அவர் வந்தவுடன் நாளை இந்த விவகாரம் குறித்து முதல்வர் கருணாநிதியுடன் தொலைபேசியில் ஆலோசனை செய்யவுள்ளார்.
இதற்கிடையே, ராஜாவை நீக்குவது தொடர்பாக திமுக தரப்பில் இரண்டு கோரிக்கைகள் காங்கிரஸ் வசம் தெரிவிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ராஜாவை இப்போதைக்கு நீக்கக் கூடாது. அப்படியே நீக்குவதாக இருந்தாலும் தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவடைந்த பின்னரே நீக்க வேண்டும் என்று கூறியிருப்பதாகவும் ஒரு தகவல் தெரிவிக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக