சென்னை: கோவையில் அக்காள், தம்பியான சிறுவன், சிறுமி கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவத்தின் சுவடு மறைவதற்குள் சென்னையில் பட்டப் பகலில் கத்தி முனையில் மாணவன் ஒருவன் கடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அண்ணா நகரைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் கிரானைட் பிசினஸ் செய்து வருகிறார். இவரது மகன் 14 வயதான கீர்த்திவாசன். டிஏவி பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறான் கீர்த்தி வாசன்.
நேற்று மாலை வழக்கம் போல பள்ளிக்கூடம் முடிந்ததும் காரில் ஏறுவதற்காக கீர்த்திவாசன் வெளியில் வந்துள்ளான். கார் கிளம்பி கலெக்டர் நகர் சிக்னலில், சிக்னலுக்காக நின்றது. அப்போது திடீரென 2 பேர் காரை மறித்தனர். கார் டிரைவர் கோவிந்தராஜ் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி கீழே தள்ளி விட்டனர். பின்னர் காரை எடுத்துக் கொண்டு மின்னல் வேகத்தில் கிளம்பினர்.
பொதுமக்கள் நிறைந்திருந்த அந்தப் பகுதியில், மிகவும் துணிகரமாக சிறுவனைக் கடத்திய சம்பவத்தைப் பார்த்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் யாருமே அந்த கடத்தலைத் தடுக்க முன்வரவில்லை. கோவிந்தராஜ் பலமுறை காப்பாற்றுமாறு அலறியும் யாரும் எந்த உதவிக்கும் வரவில்லை. இதைப் பயன்படுத்திக் கொண்டு கடத்தல்காரர்கள் தப்பி விட்டனர்.
பதறி அடித்துப் போன கோவிந்தராஜ், ரமேஷுக்குத் தகவல் தந்தார். இதையடுத்து ரமேஷ் தனது மனைவியுடன் பள்ளிக்கு விரைந்து வந்தார். பின்னர் போலீஸில் புகார் கொடுத்தார்.
கோவைச் சம்பவத்தின் விளைவு போலீஸாரைத் தொற்றிக் கொண்டது. போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் காரை மடக்கிப் பிடிக்க உத்தரவுகள் பிறப்பித்தார். சென்னை நகர எல்லைகள் அனைத்தும் உஷார்படுத்தப்பட்டன.
இந்த நிலையில், சிறுவனை 2 பேர் கொண்ட கும்பல் கடத்திய கார் பாடி பகுதியில் அனாதரவாக நிறுத்தப்பட்டிருந்தது. அந்தக் காரை போலீஸார் கைப்பற்றினர். அதில் சிறுவனின் பள்ளிக்கூடப் பை இருந்தது. அந்தக் காரை விட்டு விட்டு வேறு ஒரு காரில் கடத்தல் கும்பல் தப்பியுள்ளது.
கடத்தல் கும்பலில் மேலும் பலர் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கடத்தல்காரர்கள் ஆவடி வழியாக தப்பியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
கடத்தல்காரர்கள் கீர்த்திவாசனின் பெற்றோரைத் தொடர்பு கொண்டு ரூ. 50 லட்சம் தருமாறு மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
கடத்தல் தொடர்பான எந்தத் தகவலையும் போலீஸார் வெளியிடவில்லை. கீர்த்திவாசனின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினரும் எதுவும் தெரிவிக்க மறுத்து விட்டனர். தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டிருப்பதாக காவல்துறை கூறியுள்ளது.
சொத்துப் பிரச்சினை தொடர்பாக கடத்தல் நடந்திருக்கலாம் என்ற சந்தேகமும் காவல்துறைக்கு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக