கோவை, நவ. 10-
கோவையில் சிறுவன்- சிறுமியை கடத்தி கொலை செய்த கொலையாளி மோகன்ராஜ் நேற்று அதி காலை நடந்த என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான். மோகன்ராஜிக்கு பிரியா ஆரோக்கிய மேரி என்ற மனைவியும், ஒரு வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். மோகன்ராஜின் நடத்தை சரியில்லாததால் ஏற்கனவே பிரியா ஆரோக்கியமேரி கணவரை பிரிந்து குழந்தையுடன் சொந்த ஊரான திருச்சிக்கு சென்று விட்டார். தற்போது கர்ப்பிணியாக இருக்கும் அவர் தாயுடன் வசித்து வந்தார்.
மோகன்ராஜ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டதும் போலீசார் ஆரோக்கியமேரியை அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் விசாரணைக்கு தேவைப்படும் போது அழைத்தால் வர வேண்டும் என்ற நிபந்தனையுடன் அனுப்பி வைக்கப்பட்டார்.
ஒரு கொலை குற்றவாளியின் மனைவி என்பதால் ஆரோக்கியமேரி கோவை மக்களின் கண்ணில் படாமல் ரகசிய இடத்தில் குழந்தையுடன் தங்கி இருந்தார்.
நேற்று கணவர் என்கவுண்டரில் கொல்லப்பட்டதை ஆரோக்கியமேரி டெலிவிஷனில் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து ஆரோக்கியமேரி தனது தாயுடன் கோவை திரும்பினார்.
ஆரோக்கியமேரி கண்ணீர் மல்க கூறியதாவது:-
என் கணவர் மிகப்பெரிய குற்றம் செய்து விட்டார். அவர் மன்னிக்க முடியாத குற்றவாளி. கொலை செய்யப்பட்ட 2 குழந்தைகளும் என் கண் முன்னே நிற்கின்றன. அந்த பிஞ்சு குழந்தைகள் ஒரு பாவமும் அறியாதவர்கள்.
என் கணவருக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்பது தெரியும். அவர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்படாவிட்டால் கோர்ட்டு மூலம் தண்டனை கிடைத்து இருக்கும்.
இப்போது நானும், என் குழந்தையும் அனாதையாக தவிக்கிறோம். என்னையும் என் குழந்தையையும் இந்த சமுதாயம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த சமுதாயம் நாங்கள் வாழ உதவ வேண்டும்.
இவ்வாறு கண்ணீர் மல்க ஆரோக்கிய மேரி கூறினார்.
ஆரோக்கியமேரியின் தாய் அந்தோணியம்மாள் கூறியதாவது:-
மோகன்ராஜ் என் கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதை ஆரோக்கிய மேரி டெலிவிஷனில் பார்த்ததும் மூர்ச்சையாகி விட்டாள். உடனே ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போனோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மோகன்ராஜின் தாய் சாவித்திரியும் கோவை வந்துள்ளார். அவர் மகன் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்.
கொலை செய்யப்பட்ட சிறுமி முஸ்கின், சிறுவன் ரித்திக்கின் பெற்றோர் தொடர்ந்து அதிர்ச்சியில் இருந்து மீளாதவர்களாக உள்ளனர். பிள்ளைகள் இறந்த துக்கத்தில் அவர்களால் சரியாக சாப்பிட கூட முடியவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக