புதன், 10 நவம்பர், 2010

ஹஜ் நிறுவனங்களின் குளறுபடிகளால் தமிழகத்தில் கொந்தளிப்பு அதிர்ச்சி தகவல்கள்...

ஹஜ் நிறுவனங்களின் குளறுபடிகளால் தமிழகத்தில் கொந்தளிப்பு அதிர்ச்சி தகவல்கள்...

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஹஜ் கடமையை நிறைவேற்ற வருடந்தோறும் சுமார் 25 லட்சம் பேர் உலகின் பல்வேறு பாகங்களிலிருந்தும் உலகின் முதல்  ஆலயம் அமைந்திருக்கும் மக்கா நோக்கி புறப்படுகின்றனர்.

இந்தியாவிலிருந்து மத்திய அரசின் மானியத்துடன் ஹஜ் கமிட்டி சார்பில் இவ்வருடம் 1,25,000 பேர் மக்கா சென்றுள்ளனர். தனியார் ஹஜ் ஏஜென்ஸிகளின் மூலம் 48,487 பேர் வரை சென்றுள்ளனர்.

இவ்வருடம் தமிழகத்தில் தனியார் ஹஜ் ஏஜென்ஸிகள் சார்பில் விண்ணப்பித்த சுமார் மூவாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கடந்த வாரம் மக்கா செல்ல முடியாமல் அவர்களின் பயணம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

உறவினர்களிடமும், நண்பர்களி டமும் பயணம் சொல்லி, பெட்டி, படுக்கைகளுடன் சென்னைக்கு புறப்படத் தயாரான நிலையில் விசா கிடைக்கவில்லை என்ற செய்தி அவர்களை அதிர்ச்சிக்குள் ளாக்கி விட்டது! பலர் உடல்நிலை பாதிக்கப்பட்டும் உள்ளனர்.

இதற்கு என்ன காரணம்? யார் காரணம்? என விசாரணையில் இறங்கினோம். எல்லோரும் ஒரு மித்த நிலையில் குற்றம்சாட்டுவது தனியார் ஏஜென்ஸிகளைத்தான்! தமிழகத்தில் சமீபகாலமாக நூற்றுக்கும் மேற்பட்ட ஹஜ் ஏஜென்ஸிகள் ஆங்காங்கே உருவாகியிருக்கின்றன. இதில் 40 நிறுவனங்கள் மட்டுமே கோட்டா பெற்றவை என நஸீர் என்பவர் நம்மிடம் கூறினார். இவரும் ஒரு ஹஜ் ஏஜென்ஸி நடத்துகிறார்.

மற்ற நிறுவனங்கள் வெளி மாநில ஹாஜிகளின் இடஒதுக்கீடு களிலிருந்து உள்ஒதுக்கீடு பெற்று, அந்த விசாக்களை கூடுதல் விலைக்கு விற்று வருகிறார்கள் என்றும் பாதிக்கப்பட்ட ஹஜ் பயணிகள் நம்மிடம் குற்றம் சாட்டு கிறார்கள்.

“மும்பையில் தான் இது தொடர்பான பேரங்கள் நடக்கின்றன. ஹஜ் விசாக்களை வியாபாரமாக்கும் கள்ளச் சந்தை யாக மும்பை விளங்குகிறது” என்கிறார்கள்.

தனியார் ஹஜ் சர்வீஸ் நிறுவனங்களுக்கு மொத்த இடங்கள் 48,487 ஆகும். இதில் மொத்த இந்தியாவிலும் ஹஜ் கோட்டாக்கள் பெறும் முறையான நிறுவனங்களின் எண்ணிக்கை 599 ஆகும்.

இதில் தமிழகத்தில் 40 நிறு வனங்களுக்கு 4050 கோட்டா. கேரளாவில் 58 நிறுவனங்களுக்கு 7399 கோட்டா. மஹாராஷ்டிராவில் 236 நிறுவனங்களுக்கு 18419 கோட்டா என ஒதுக்கப்படுகிறது.

அதாவது மூன்றில் ஒரு பங்கு இடங்கள் மஹாராஷ்டிராவுக்கு மட்டுமே ஒதுக்கப்படுகின்றன. இதுதான் மும்பையை மையமாக வைத்து குதிரை பேரம் நடப்பதற்கு காரணம்.

இது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. புனிதமான ஹஜ் பயணத்தை மையமாக வைத்து கோடிக்கணக்கில் வியா பாரம் நடைபெறுகிறது என்ற உண்மை இப்போது தான் வெளிஉலகிற்கு தெரிய வந்திருக் கிறது என நம்மிடம் பொருமினார் சென்னையைச் சேர்ந்த சம்சுதீன். இவரும் இந்த வருடம் ஹஜ் பயண வாய்ப்பை கடைசி நேரத்தில் இழந்தவர்.

அரசின் ஹஜ் கமிட்டி மூலமாக செல்லும்போது மொத்த செலவு 1,25,000 ரூபாய் மட்டுமே. அதில் விமான நிலையத்திலேயே 2500 சவூதி ரியால் (சுமார் 30 ஆயிரம் இந்திய ரூபாய்) ஹாஜிகளுக்கு உணவு, குர்பானி, வகைகளுக்காக கொடுக்கப்படுகிறதாம்.

ஆனால், தமிழகத்தில் தனியார் ஏஜென்ஸிகள் குறைந்தது 1,75,000 தொடங்கி 3,00,000 வரை கட்டணம் வசூலிக்கிறார்கள். அவரவர் நிறுவ னத்தின் புகழுக்கேற்ப தொகை மாறுபடுகிறது.

இது அநியாயம் என பலரும் குறை கூறுகிறார்கள். காரணம், சவூதி அரசு ஹஜ் விசாவை இலவசமாக தருகிறது. மும்பை வழியாகத் தொடங்கும் பேரங்கள் மூலம் ‘விசா’ கள்ளச்சந்தையில் விற்கப்படுகிறது என்பது தான் உண்மை. இதை நம்மிடம் சமுதாய சேவகர்கள் சுட்டிக்காட்டினர்.

இந்த விபரங்கள் எதுவும் தெரியாத ஹஜ் பயணிகள் “ட்ராவல்ஸ் நிறுவனங்கள் எல்லாம் சேவைக் கட்டணத்துடன் பணிபுரிவதாக நம்புகின்றனர்” என்று வேதனைப்படுகிறார் பாதிக்கப் பட்ட ஒரு ஹஜ் பயணி!
தனியார் ட்ராவல்ஸ்கள் அனைத்தும் சேவை ஒரு பங்கு என்றால், வணிகம் இரண்டு பங்காக கருதி செயல்படுவதாக பாதிக்கப் பட்டவர்கள் கூறுகிறார்கள். எல்லா நிறுவனங்களையும் அப்படிக் கூறிவிட முடியாது, என எதிர் குரல்களும் கேட்கின்றன. சுவையான உணவு, கட்டணம் அதிகமுள்ள ஹோட்டல் இவற்றையெல்லாம் பொறுத்து கட்டணங்கள் மாறுபடுகின்றன என்று சில தனியார் ட்ராவல் ஏஜென்ஸிகள் கூறுகின்றன.  இந்த வருடம் தமிழகத்திலிருந்து ஹஜ் கமிட்டி மூலம் 4027 பேர் மக்கா சென்றுள்ளனர். ஆனால், விண் ணப்பித்தவர்கள் 12 ஆயிரம் பேர்களுக்கு அதிகமாம்!

இதுதான் பிரச்சனைகளுக்கு முக்கியக் காரணம் எனக் கூறப் படுகிறது. ஹஜ் கமிட்டியின் மூலம் மக்கா செல்ல வாய்ப்பில்லாத மீதி இரண்டு பங்கு எண்ணிக்கையிலானவர்கள் தனியார் ட்ராவல்ஸ்களை நாடுகின்றனர்.

அது பதிவு பெற்ற நிறுவனமா? இல்லையா? என்பது குறித்தெல்லாம் அவர்கள் கவலைப்படுவதில்லை. எப்படி யாவது ஹஜ் பயணத்தை நிறை வேற்ற வேண்டும் என்ற ஆர்வம் அவர்களது கண்ணை மறைத்து விடுகிறது.
அதன் விளைவுதான் இது போன்றச் சிக்கல்கள். இனியாவது இதுகுறித்து கவனமுடன் இருப் பது மக்களின் கடமை என்று தமுமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஜெ.எஸ்.ரிபாயி நம் மிடம் கூறினார்.

இதற்கு ஒரே தீர்வு மத்திய அரசு இந்தியாவில் இருக்கும் 20 கோடி முஸ்லிம்களின் உண்மையான எண்ணிக்கையை சவூதி அரசுக்கு தெரிவித்து அதற்கேற்ப குறைந்தது 2 லட்சம் இடங்களையாவது கேட்டுப் பெற வேண்டும். இதன் மூலம் இந்திய ஹாஜிகளின் இடப்பற்றாக்குறை பிரச்சனை ஓரளவாவது தீரும் என்று சமுதாயத் தலைவர்கள் கருத்து கூறுகின்றனர்.

அதுவரை தற்காலிகமாக தனி யார் ஹஜ் ட்ராவல்ஸ்களை அந்தந்த மாநில வக்பு வாரியம் அல்லது ஹஜ் கமிட்டி மூலமாக ஒழுங்குபடுத்தும் பணிகளையாவது செய்ய வேண்டும் என்பது தான் பலரின் வேண்டுகோளாகும். இவ்விஷயத்தில் நல்ல பெயர் எடுத்த பல ட்ராவல் ஏஜென்ஸிகளும், பல பிரபலங்களும்  சங்கடங்களுக்கு உள்ளாகியுள்ளனர். எங்கள் நோக்கம் யாரையும் ஏமாற்றுவது அல்ல என்று விளக்கமளித் துள்ளனர். அது உண்மைதான்.

ஆனால், ஹஜ் பயணத்தை வைத்து மும்பையில் நடக்கும் குதிரை பேரங்களிலிருந்து அவர்கள் இனி தங்களைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். காரணம் புனிதப் பயணத்தை வணிகமயமாக்கும் கும்பலுக்கு துணைபோவது நியாயமில்லையே!


வி.ஐ.பிகள் மீது குற்றச்சாட்டு


ஹஜ் பயணிகளுக்கான விசாக்கள் கள்ளச்சந்தையில் விற்பது குறித்து நீண்டகாலமாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. கேரளாவில் தனது உறவினர் ஒருவரின் ஹஜ் ஏஜென்ஸிக்கு கூடுதல் இடங்களை ஒதுக்கி, அதன் மூலம் சம்பாதிக்கிறார் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அகில இந்திய தலைவரும், ரயில்வே இணை அமைச்சருமான ஈ.அஹ்மது மீது எழும்பிய குற்றச்சாட்டுகள் பலருக்கும் நினைவிருக்கும்.

அரசியல் செல்வாக்கும், அதிகாரப் பின்புலமும் கொண்ட பல முஸ்லிம் வி.ஜ.பி.களின் மீது இவ்வாறு தொடர்ந்து குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால் இது குறித்து மத்திய&மாநில அரசுகள் ஏனோ தொடர்ந்து மவுனம் காக்கின்றன.

இதுகுறித்து விபரம் கேட்க, தமிழக ஹஜ் கமிட்டியின் தலைவரும், அகில இந்திய ஹஜ் கமிட்டியின் துணைத் தலைவருமான அபூபக்கர் அவர்களைத் தொடர்பு கொண்டோம். அவர் ஹஜ்ஜுக்குப் புறப்படும் பரபரப்பில் இருந்ததால், ஹஜ் பயணம் போய் வந்த பிறகு மக்கள் உரிமைக்குப் பேட்டி தருகிறேன் என்றார்.

கருத்துகள் இல்லை: