ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், இந்தியா நிரந்தர இடம் பெற, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆதரவு தருவாரா என்ற எதிர்பார்ப்பு இந்திய எம்.பி.,க்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஒபாமாவின் உரையில் இது தொடர்பான அறிவிப்பு இடம் பெற வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றனர்.
அமெரிக்க அதிபர் ஒபாமா, வரும் 6ம் தேதி இந்தியா வருகிறார். 8ம் தேதி டில்லியில் பார்லி., கூட்டுக் கூட்டத்தில், எம்.பி.,க்கள் மத்தியில் உரை நிகழ்த்துகிறார். அப்போது, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர இடம் பெற ஒபாமா ஆதரவு தெரிவிப்பார் என, எம்.பி.,க்கள் எதிர்பார்க்கின்றனர். அப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டால், அது மிகுந்த மகிழ்ச்சியளிக்கும் என்றும் கூறுகின்றனர்.
அ.தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி., மைத்ரேயன் கூறுகையில், "ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர இடம் பெற அமெரிக்கா ஆதரவு அளிக்கும் என, அதிபர் ஒபாமா உறுதி அளித்தால், அது மிகவும் வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில், எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கும் ஒபாமா கடும் எதிர்ப்புத் தெரிவிப்பார் என, எதிர்பார்க்கிறோம்' என்றார்.
இந்தக் கருத்தை, முன்னாள் மத்திய அமைச்சர்கள் சிலரும், காங்., தலைவர் ஷகீல் அகமதுவும் தெரிவித்தனர்.
முன்னாள் அமைச்சர் ஷகீல் அகமது இதுபற்றி கூறுகையில், "இந்தியா - அமெரிக்கா இடையேயான பரஸ்பர புரிந்துணர்வும், பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவது என்ற உறுதிப்பாடும், ஒபாமாவின் இந்திய விஜயம் மற்றும் பார்லிமென்டில் அவர் ஆற்றும் உரை மூலம் மேலும் வலுப்படும். ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர இடம் பெறவும் ஒபாமா ஆதரவு தெரிவிப்பார் என, எதிர்பார்க்கிறோம்' என்றார்.
சமாஜ்வாடி பொதுச் செயலர் மோகன் சிங் கூறுகையில், "பாகிஸ்தான் மற்றும் சீனாவால் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை ஒபாமா கவனத்தில் கொண்டு, கவலை தெரிவிக்க வேண்டும். மேலும், அமெரிக்காவில் விதிக்கப்படும் கடுமையான வரி விதிப்பால், இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் தொழில் பிரச்னையைச் சந்திக்கிறது. இவற்றை தீர்ப்பதற்கான அறிவிப்பையும் ஒபாமா வெளியிட வேண்டும்' என்றார்.
பரஸ்பர நட்புணர்வு வளர ஒபாமா பயணம் உதவிடும் என்று பா.ஜ.,வின் ஜாவேட்கர் தெரிவித்தார். இதேபோல வேறு பல எம்.பி.,க்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக