சென்னை: அதிமுக, மதிமுகவிலிருந்து திமுகவில் இணைந்த முத்துசாமி, கரூர் சின்னசாமி, மு.கண்ணப்பன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோருக்கு புதிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
சமீபகாலமாக அதிமுக, மதிமுக உள்ளிட்ட பிற கட்சிகளிலிருந்து திமுகவில் இணைந்த முக்கிய புள்ளிகளுக்கு பதவிகள் ஏதும் வழங்கப்படவில்லை என்ற புகார்கள் எழுந்தன.
இந் நிலையில் அதிமுகவிலிருந்து வந்த முன்னாள் அமைச்சர் முத்துசாமி, கரூர் சின்னசாமி ஆகியோருக்கும், மதிமுகவிலிருந்து திமுகவுக்கு வந்த மு.கண்ணப்பன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோருக்கும் புதிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
கோவை மு. கண்ணப்பன், ஈரோடு எஸ். முத்துசாமி ஆகியோர் திமுக உயர் நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்படுகின்றனர்.
செஞ்சி ந.இராமச்சந்திரன், திமுக விவசாயத் தொழிலாளர் அணிச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
திமுக விவசாய அணிச் செயலாளராக கரூர் ம.சின்னசாமி நியமிக்கப்படுகிறார். இதே பொறுப்பில் உள்ள கே.பி.ராமலிங்கத்துடன் இவர் இணைந்து செயல்படுவார் என்று கூறப்பட்டுள்ளது.
தேர்தல்-மாவட்டந்தோறும் திமுக பணிக் குழுக்கள் நியமனம்:
இதற்கிடேயே வரும் சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு மாவட்டந்தோறும் தேர்தல் பணிக் குழுக்களை திமுக நியமித்துள்ளது.
தேர்தல் தொடர்பாக மாவட்ட வாரியாக திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் கருணாநிதி கலந்துரையாடல் கூட்டம் நடத்தி வருகிறார். இந் நிலையில், தேர்தல் பணிக் குழுக்களை அந்தக் கட்சி அறிவித்துள்ளது.
தேர்தல் பணியாற்றவும், மேற்பார்வையிடவும் திமுக முன்னணியினரைக் கொண்டு இந்தக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக