அமெரிக்க அதிபர் ஒபாமா 4 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார்.
அமெரிக்காவில் இருந்து நேற்று மும்பை வந்த அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இன்றும் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
தாஜ் ஓட்டல் அருகே உள்ள ஹேலி நேம் பள்ளியில் மாணவர்-மாணவிகளுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இன்று மாலை அவர் மும்பையில் இருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
டெல்லி விமான நிலையத்தில் அவரை பிரதமர் மன்மோகன்சிங் அவருடைய மனைவி குர்ஷரன் கவுர் மற்றும் மந்திரிகள், அதிகாரிகள் வரவேற்கின்றனர்.
வெளிநாட்டு தலைவர்களை பிரதமர் விமான நிலையத்துக்கு சென்று வரவேற்பது மரபு அல்ல. ஆனால் ஒபாமா மீதுள்ள அன்பால் பிரதமர் மன்மோகன்சிங் மரபை மீறி விமான நிலையத்துக்கு சென்று வரவேற்கிறார்.
இன்று இரவு மன்மோகன் சிங், ஒபாமாவுக்கு தனது வீட்டில் தனிப்பட்ட முறையில் விருந்து அளிக்கிறார்.
மன்மோகன்சிங் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது மன்மோகன்சிங்குக்கு ஒபாமா விருந்து அளித்தார். ஒபாமா அதிபர் ஆன பிறகு அவர் வெளிநாட்டு தலைவருக்கு அளிக்கப்பட்ட முதல் விருந்தாக அமைந்தது. இது மன்மோகன் சிங்குக்கு அளிக்கப்பட்ட பெரிய கவுரவமாகவும் கருதப்பட்டது.
அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பிரதமர் மன்மோகன்சிங் தனது வீட்டில் ஒபாமாவுக்கு விருந்து அளிக்கிறார்.
ஒபாமா நாளை பாராளுமன்ற கூட்டு கூட்டத்தில் உரை நிகழ்த்துகிறார். பின்னர் ஜனாதிபதி பிரதீபா பட்டீல், பிரதமருடன் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அப்போது பல்வேறு ஒப்பந்தங்களிலும் கையெழுத்து இடுகின்றனர்.
செவ்வாய்க்கிழமை காலை ஒபாமா இந்தோனேசியா புறப்பட்டு செல்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக