டெல்லி: அயோத்தி நிலம் தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, பாபர் மசூதி இடிப்பை நியாயப்படுத்தவில்லை. எனவே மசூதியை இடித்தவர்களை தண்டித்தேயாக வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
டெல்லியில் இன்று ஒரு நாள் காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு சோனியா பேசினார்.
அவரது பேச்சிலிருந்து சில பகுதிகள்...
2010ம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி காங்கிஸ் கட்சியின் நிலைக்குழு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதில், அயோத்தி பிரச்சினை தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட செயலை எந்த வகையிலும் நியாயப்படுத்தவில்லை என்று ஆணித்தரமாக கூறியிருந்தோம். பாபர் மசூதி இடிப்பை உயர்நீதிமன்றத் தீர்ப்பு நியாயப்படுத்தவில்லை, அதை சரி என்று கூறவில்லை. இது ஒரு அவமானகரமான, குற்றவியல் நடவடிக்கை. இதில் சம்பந்தப்பட்டவகர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது.
தீர்ப்புக்கு முன்பு நாடு எந்த அளவுக்கு பதட்டமாக இருந்ததை அனைவரும் அறிவோம். ஆனால் மக்கள் அமைதியையும், நல்லிணக்கத்தையும் பேணிக் காத்தனர்.
அனைத்து வகையான மதவாதங்களையும் எதிர்த்து நாம் போராட வேண்டிய நிலையில் உள்ளோம். இனவாதம், மதவாதம் எந்த ரூபத்தில் வந்தாலும் நாம் அதை அனுமதிக்கக் கூடாது. மதச்சார்பற்ற இந்தியாவைக் கட்டிக் காக்க அரசியல் போராட்டத்தை நடத்த வேண்டிய நிலையில் நாம் உள்ளோம்.
மும்பையில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்று 2 ஆண்டுகளாகி விட்டன. அதற்குக் காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். தீவிரவாத அச்சுறுத்தல் தொடர்ந்துகொண்டேதான் உள்ளது. எனவே எந்த நிலையிலும் நாம் அஜாக்கிரதையாக இருந்து விடக் கூடாது. தொடர்ந்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த ஆறு மாதங்களாக நடந்து வரும் அசாதாரண சம்பவங்கள் வேதனையைத் தருகிறது. பல அப்பாவி உயிர்கள் பலி போனது குறித்து என்னிடம் பேசியவர்களிடம் நான் வேதனையைப் பகிர்ந்து கொண்டுள்ளேன். மிகவும் கடினமான சூழ்நிலையில் நமது பாதுகாப்புப் படையினர் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு நமது முழு ஆதரவும் உண்டு.
ஜம்மு காஷ்மீரின் அனைத்து தரப்பினருடனும் அர்த்தப்பூர்வமான பேச்சுக்களை நாம் நடத்த வேண்டிய நிலையில் உள்ளோம். ஜம்மு காஷ்மீர் அரசு மீது அனைவரும் நம்பிக்கை வைக்க வேண்டும்.மத்திய அரசு அனைவரும் நம்பிக்கை வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அமைதி ஏற்பட ஒரு வழி ஏற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். நமக்கு ஒரு எதிர்காலத்தை ஏற்படுத்தித் தரத்தான் அனைவரும் பாடுபடுகின்றனர் என்பதை அவர்கள் உணர வேண்டும்.
ஒரு ஒட்டுமொத்த தலைமுறையே வன்முறைக்கும், மரணத்திற்கும் இடையே வாழ்ந்து கொண்டிருக்கிறது. இது நிச்சயம் அவர்களது எதிர்காலம் அல்ல. அமைதியான எதிர்காலத்தை அவர்கள் அடைய நாங்கள் பாடுபட்டு வருகிறோம்.
நக்சலிசம் அல்லது இடதுசாரி தீவிரவாதம் நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. போலீஸ் நடவடிக்கை தேவை என்பதை நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அதேசமயம், பொருளாதார முன்னேற்ற நடவடிக்கைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறோம்.
பழங்குடியின மக்களின் தினசரிப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டியது அவசியம். அவர்கள் முன்னேற்றப்பட வேண்டும். அவர்களது பகுதிகள் வளம் பெற வேண்டும். வளர்ச்சியின் மூலம் மட்டுமே நக்சலிசத்தை ஒழிக்க முடியும் என்றார் சோனியா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக