செவ்வாய், 2 நவம்பர், 2010

ரூ.40 லட்சம் மோசடி-மாஜி அமைச்சர் அம்மமுத்துப் பிள்ளை சரணடைய உத்தரவு

நெல்லை: போலி ஆவணங்களை கொடுத்து வங்கியில் கடன் வாங்கிய வழக்கில் கோர்ட்டில் சரண் அடையுமாறு முன்னாள் அமைச்சர் அம்மமுத்துபிள்ளைக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

பாளையங்கோட்டை ஐஓபி வங்கியில் 2007ல் போலி ஆவணங்களை கொடுத்து ரூ.2.42 கோடி மோசடி செய்ததாக வங்கி தலைமை மேலாளர் பாலசுப்பிரமணி, அதிமுக முன்னாள் அமைச்சர் அம்மமுத்து பிள்ளை, கல்யாணசுந்தரம், மகாலிங்கம் உள்பட 9 பேர் மீது சிபிஐ போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதில் முன்னாள் அமைச்சர் அம்மமுத்துபிள்ளை, தனது மருத்துவமனைக்கு டாப்ளர் ஸ்கேன் வாங்குவதற்காக போலி ஆவணங்களை வழங்கி ரூ.40 லட்சம் கடன் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் கைதாகாமல் இருக்க முன்ஜாமீன் கேட்டு அம்மமுத்துபிள்ளை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ராஜ்சூர்யா மனுதார் கடன் வாங்கி விட்டு டாப்ளர் ஸ்கேன் வாங்கவில்லை. அதை வாங்கியதற்கான ஆவணங்களையும் தாக்கல் செய்யவில்லை.

இந்த வழக்கு மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்க தகுதியான வழக்கு அல்ல. எனவே அவர் கோர்ட்டில் சரண் அடைந்து ஜாமீன் மனுதாக்கல் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

இதையடுத்து கோர்ட்டில் சரணடையுமாறு உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை நவ 12க்கு ஓத்தி வைத்தார்.

கருத்துகள் இல்லை: