திருவாரூர்: முதல்வர் கருணாநிதிக்கு யாராலும் ஆபத்து இல்லை. அவரது சொந்தப் பிள்ளைகளால்தான் ஆபத்து என்று கூறியுள்ளார் தமிழக சிபிஐ செயலாளர் தா.பாண்டியன்.
கோட்டூரில் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், தமிழகத்தில் எது நடந்தாலும் கம்யூனிஸ்ட் கட்சியை விமர்சித்து வருகிறார் முதல்வர் கருணாநிதி. தமிழக முதல்வர் கருணாநிதிக்கு கம்யூனிஸ்டுகளால் ஆபத்தில்லை. அவர் பெற்ற பிள்ளைகள், பிள்ளைகளின் பிள்ளைகளால்தான் ஆபத்து.
தற்போதுள்ள சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் நீடித்திருக்குமா என்பது சந்தேகமே. காங்கிரஸ் கட்சி அதிமுக கூட்டணிக்கு வந்தால், அங்கு கம்யூனிஸ்ட்டுகளுக்கு இடமில்லை என்பதற்காகத்தான் கருணாநிதி கம்யூனிஸ்ட் கட்சிகளைப் பார்த்து ஏமாறப் போகிறீர்கள் என்கிறார்.
அர்ச்சகர்கள் தொடங்கி பல தரப்பினரும் அரசு கடைபிடிக்கும் தவறான கொள்கை காரணமாக அரசுக்கு எதிராக திரண்டுள்ளனர். இந்நிலையில், பாமக மற்றும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் அதிமுகவுடன் இணைந்தால் வரவுள்ள தேர்தலில் திமுகவுக்கு எதிர்க்கட்சி என்ற அந்தஸ்து கூட கிடைக்காது.
தேர்தலில் சரிவு ஏற்பட்டதால் சோர்ந்து விடும் இயக்கமல்ல கம்யூனிஸ்ட் இயக்கம். அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவையும், உழைக்கும் மக்களையும் மோசடி அரசியலிலிருந்து விடுவிப்போம் என தேதி குறித்துக் கொண்டு கம்யூனிஸ்ட்டுகள் பணியாற்ற வேண்டும் என்றார் அவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக