ரியோடிஜெனிரோ: முன்னாள் மார்க்சிஸ்ட் கொரில்லா தலைவியான தில்மா ரூசப், பிரேசில் நாட்டின் புதிய அதிபராக தேர்வாகியுள்ளார்.
நீண்ட காலம் சிறைவாசம் அனுபவித்து, சிறையில் பல சித்திரவதைகளை சந்தித்தவர் தில்மா என்பது குறிப்பிடத்தக்கது. லத்தீன் அமெரிக்காவின் மிகப் பெரிய நாடான பிரேசிலின் அதிபர் பதவியை அவர் தற்போது அலங்கரிக்கப் போகிறார்.
பொருளாதார ரீதியிலும், அரசியல் ரீதியிலும் மிகப் பலம் வாய்ந்த நாடாக பிரேசில் உருவாகி வரும் நிலையில் அந்த நாட்டின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையையும் தில்மா பெறுகிறார்.
அதிபர் பதவிக்கு நடந்த தேர்தல் முடிவுகளை பிரேசில் தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. அதன்படி ஆளும் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட தில்மா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவர் 2011ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் அதிபர் பொறுப்பை வகிப்பார்.
மொத்தம் பதிவான 95 சதவீத வாக்குகளில் 55.6 சதவீத வாக்குகளை தில்மா பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜோஸ் செர்ராவுக்கு 44.4 சதவீத வாக்குகள் கிடைத்தன.
தற்போதைய அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா ட சில்வாவால் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தில்மா. இனாசியோவின் கொள்கைகளை தான் தொடர்ந்து கடைப்பிடிக்கப் போவதாக தில்மா அறிவித்துள்ளார்.
2014ம் ஆண்டு பிரேசிலில் உலகக் கோப்பைக் கால்ந்துப் போட்டி நடைபெறவுள்ளது. பிரேசிலின் தேசிய விளையாட்டாக கால்பந்து திகழ்ந்து வருகிறது. அதேபோல உலக அளவில் 5வது பலம் வாய்ந்த பொருளாதார சக்தியாகவும் தற்போது பிரேசில் திகழ்கிறது. 2016ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளையும் பிரேசில் நடத்தவுள்ளது. இவற்றையெல்லாம் எதிர்கொள்ளவுள்ளார் தில்மா.
62 வயதாகும் தில்மா, தேர்தலின்போது வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜனநாயகத்தின் புதிய கட்டத்தைத் தொடங்குவோம். பிரேசிலியர்கள் அனைவரையும் ஒரே மாதிரியாக மதித்து நடப்பேன் என்று கூறியிருந்தார்.
2 முறை அதிபர் பதவியை இனாசியோ வகித்து விட்டதால் சட்டப்படி 3 வது முறை அவரால் போட்டியிட முடியாமல் போனது. இதையடுத்தே தில்மாவை அவர் வேட்பாளராக அறிவித்து பிரசாரம் செய்து வந்தார்.
அதேசமயம், இனாசியோவை விட தில்மாவுக்கே பிரேசில் வாக்காளர்களிடையே அமோக ஆதரவு காணப்படுகிறது. தில்மா ஒரு போராளி. போராட்ட குணம் நிறைந்த மங்கை. இதனால்தான் அவருக்கு வாக்களித்தேன் என்று வாக்காளர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.
மார்க்சிஸ்ட் கொரில்லா படையில் முன்பு இடம் பெற்றிருந்தவர் தில்மா. கொரில்லா போர் முறையில் நிபுணத்துவம் பெற்றவர். சிறைவாசம் அனுபவித்தவர். சிறையில் பல சித்திரவதைகளையும் சந்தித்தவர். தற்போது அவர் பிரேசில் அதிபராக வலம் வரப் போகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக