டெல்லி: லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி டேவிட் கோல்மேன் ஹெட்லி குறித்த விவரங்களை அமெரிக்கா முன்கூட்டியே தரவில்லை என்று மத்திய உள்துறைச் செயலாளர் ஜி.கே.பிள்ளை கூறியிருந்த நிலையில், ஹெட்லி குறித்த தகவல்களை அமெரிக்கா தந்ததாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த ஜி.கே.பிள்ளை, ஹெட்லி குறித்த தகவல்களை முன்கூட்டியே அமெரிக்கா தரவில்லை. தந்திருந்தால் அவன் இந்தியா வந்திருந்தபோதே மடக்கிப் பிடித்திருக்கலாம், மும்பை தாக்குதல் சம்பவத்தையும் தவிர்த்திருக்கலாம் என்று கூறியிருந்தார்.
ஆனால் இன்று முற்றிலும்நேர் மாறாக பேசியுள்ளார் ப.சிதம்பரம். ஹெட்லி குறித்த தகவல்களை அமெரிக்கா ஏற்கனவே கொடுத்ததாக அவர் கூறினார்.
இதுகுறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜி.கே.பிள்ளை கூறிய தகவல்களை மீடியாக்கள் தேவையில்லாமல் ஊதிப் பெரிதாக்கியுள்ளன. உண்மைக்கு மாறாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா அனைத்துத் தகவல்களையும் இந்தியாவிடம் தெரிவித்திருந்தது. மும்பைத் தாக்குதலுக்கு முன்பாகவே அனைத்துத் தகவல்களையும் நமக்கு அவர்கள் தெரிவித்திருந்தனர். மும்பைத் தாக்குதலுக்கு முன்பாகவே உளவுத் தகவல்கள் தரப்பட்டிருந்தன.
தற்போது ஹெட்லி குறித்த பல விவரங்களை அமெரிக்கா பரிசீலனை செய்து வருகிறது. அவை முடிந்தவுடன் அவற்றை நம்மிடம் பகிர்ந்து கொள்வார்கள்.
ஹெட்லி விவகாரத்தைப் பெரிதுபடுத்தத் தேவையில்லை என்பது எனது கருத்து. ஹெட்லியின் பெயரை அமெரிக்கா குறிப்பிட்டிருக்காவிட்டாலும் கூட மும்பைத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக அவர்கள் கொடுத்த பல தகவல்கள் நமக்கு உதவிகரமாகவே இருந்தது.
ஹெட்லியின் பெயரை 2009ம் ஆண்டு அக்டோபர் மாதம்தான் அமெரிக்கா நம்மிடம் தெரிவித்தது.
ஹெட்லியை நாடு கடத்துவது என்பது ஒரு சாத்தியக் கூறாகவே உள்ளது. ஹெட்லி மீது குற்றப்பத்திரிக்கை பதிவு செய்வது என்பது குறித்து தேசிய புலனாய்வு ஏஜென்சிதான் முடிவெடுக்க வேண்டும் என்றார் ப.சிதம்பரம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக