சென்னை: சட்டசபை காங்கிரஸ் தலைவர் பதவிக்கு கடும் போட்டி நிலவியதால், யாரையும் தேர்வு செய்யாமல் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் முடிவடைந்தது.
தமிழக சட்டப் பேரவையின் குளிர்காலக் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இதையொட்டி காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நடந்தது.
சட்டமன்ற காங்கிரஸ் தலைவராக இருந்த சுதர்சனத்தின் மறைவையடுத்து அந்தப் பதவி காலியாக உள்ளது. இந்தப் பதவிக்கு நபரை தேர்வு செய்ய இக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இந்தப் பதவியைப் பிடிக்க யசோதா, பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட பலரிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனால் இந்தக் கூட்டத்தில் அடுத்த தலைவரை தேர்வு செய்வது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
சுதர்சனம், குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ. ஜெயபால், பாபநாசம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. சௌந்தரராஜ மூப்பனார் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு இக் கூட்டம் முடிவடைந்தது.
முன்னதாகக் கூட்டத்தில் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, சட்டப் பேரவை சுமுகமாக நடைபெற ஒத்துழைக்க வேண்டும். சட்டப் பேரவை காங்கிரஸ் தலைவர் தேர்வு குறித்து கட்சித் தலைமையுடன் பேசி முடிவு செய்யப்படும் என்றார்.
அழையா விருந்தாளியான காங்கிரஸ்:
இதற்கிடையே தமிழக சட்டசபைக் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில் அழையா விருந்தாளியாக காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்றனர்.
வழக்கமாக சட்டசபைக் கூட்டம் தொடர்பாக நடைபெறும் அலுவல் ஆய்வு குழுக் கூட்டங்களில் கட்சிகளின் பேரவைக் குழுத் தலைவர்கள் பங்கேற்பார்கள்.
ஆனால், சுதர்சனம் மறைவையடுத்து துணைத் தலைவர் பொறுப்பில் இருக்கும் டி.யசோதா, அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்றார். கொறடா பீட்டர் அல்போன்ஸ் எம்.எல்.ஏவும் உடன் சென்றார்.
ஆனால் கட்சியின் தலைமையிடமிருந்து அதிகாரப்பூர்வக் கடிதம் வந்தால் மட்டுமே அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியும் என்று அவர்களிடம் சட்டசபைச் செயலக அதிகாரிகள் கூறினர்.
இருப்பினும் இரு தலைவர்களும் கூட்டத்தில் பங்கேற்கலாம் என்றும் பதிவேட்டில் கையெழுத்து போட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டனர்.
அதன்படி இருவரும் கூட்டத்தில் பங்கேற்றாலும் பதிவேட்டில் கையெழுத்திடவில்லை. சட்டசபை காங்கிரஸ் தலைவரை நியமிப்பதில் கட்சியில் பெரும் கோஷ்டி மோதல் நடப்பதால், அந்தக் கட்சி்க்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் தான் அடுத்து ஆட்சியைப் பிடிக்கப் போவதாக இளங்கோவனும் கார்த்திக் சிதம்பரமும் 'கொட்டாவி' விட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக