குடும்ப அட்டையில் பெயர் மாற்றம் செய்வதற்காக ரூ.700 லஞ்சம் வாங்கியதாக வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் இரண்டு பெண் ஊழியர்களை இலஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர்.
கோவை காந்திபூங்கா மானாக்கா வீதியை சேர்ந்த பால்ராஜ் மகன் காசிலாபாண்டி(28) என்பவரது பெயர் குடிமைப்பொருள் வழங்கல் அட்டையில் பெயர் கலைபாண்டியன் என தவறாக அச்சிடப்பட்டிருந்தது.
இதனால், தன் பெயர் மாற்றத்துக்காக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலக இளநிலை உதவியாளர் வனிதா பிரபாவை காசிலாபாண்டி அணுகினார். அப்போது, அட்டையில் பெயர் மாற்றித்தரச் செய்வதற்கு வனிதாபிரபா 700 ரூபாய் இலஞ்சம் கேட்டுள்ளார்.இது குறித்து, காசிலாபாண்டி கோவை இலஞ்ச ஒழிப்புத் துறையில் முறையீடு செய்தார்.
இலஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் திட்டத்தின்படி நேற்று மாலை வேதிப்பொருள் தடவிய ரூபாய் தாள்களை காசிலாபாண்டியன் வனிதா பிரபாவிடம் அளித்தார். இதை பெற்றுக் கொண்ட வனிதா பிரபா, அதில் 200 ரூபாயை எடுத்துக் கொண்டு, 500 ரூபாயை உதவி பங்கீட்டு அலுவலர் (சரகம்-2) ராஜேஸ்வரிக்கு கொடுத்துள்ளார். இதையெல்லாம் அலுவலகத்தின் வெளியில் நின்று பார்வையிட்ட இலஞ்ச ஒழிப்பு துணை கண்காணிப்பாளர் (DSP) சண்முகப்ரியா தலைமையிலான அதிகாரிகள், விரைந்து சென்று வனிதா பிரபா, ராஜேஸ்வரியை கைது செய்தனர். அவர்களிடமிருந்த இலஞ்ச பணத்தை பறிமுதல் செய்து,வழக்கும் பதிவு செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக