சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் அச்சரப்பாக்கத்தில் உள்ள டோல்கேட்டில் கட்டணம் செலுத்த மறுத்தது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் டோல்கேட் ஊழியர்கள், முன்னாள் அதிமுக எம்.பி. கோகுல இந்திராவின் கார் மீது கல்வீசித் தாக்கினர். இதையடுத்து 3 பேரை போலீஸார் பிடித்துச் சென்றனர்.
செஞ்சியில் நடைபெறும் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கோகுல இந்திரா நேற்று சென்னையில் இருந்து காரில் சென்றார்.
காஞ்சீபுரம் மாவட்ட எல்லையான அச்சரப்பாக்கம் தொழுப்பேடு டோல்கேட்டில் அவர்களது கார் சென்றதும் அங்குள்ள டோல்கேட் ஊழியர்கள் கட்டணம் கேட்டனர். அதற்கு அவர்கள் முன்னாள் எம்.பி. என்று கூறி, பணம் கட்டமறுத்ததாக தெரிகிறது. இதையடுத்து அங்கிருந்த ஊழியர்கள் மாஜி எம்.பி. என்றால் அதற்கான அடையாள அட்டையை கேட்டனர். இதுதொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் திடீரென கோகுல இந்திராவின் கார் மீது சரமாரியாக கல்வீசித் தாக்கினர் டோல்கேட் ஊழியர்கள். இதற்கிடையே, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுகவினர் விரைந்து வந்தனர். டோல்கேட் ஊழியர்களுக்கும், அவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது.
பெருமளவில் அதிமுகவினர் திரண்டதாலும், சாலை மறியலில் ஈடுபட்டதாலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி அதிமுகவினரை சமரசப்படுத்தினர்.
பின்னர் கோகுல இந்திரா சார்பில் போலீஸில் புகார் தரப்பட்டது. அதன் பேரில் ஊழியர்களை போலீஸார் பிடித்துச் சென்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக