சனி, 6 நவம்பர், 2010

சிறுபான்மையினர் இடஒதுக்கீட்டுக்காக கமிஷன் அமைத்தது நானே: ஜெ!


"சிறுபான்மையினர் இடஒதுக்கீட்டுக்கான கமிஷன் அமைக்கப்பட்டது அ.தி.மு.க. ஆட்சியில்தான் '' என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறி உள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து நான் வெளியிட்ட அறிக்கைக்கு பதில் அளிக்கும் விதமாக "காலம்தான் பதில் சொல்லும்'' என்ற தலைப்பிலே முதல்-அமைச்சர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டு இருப்பது "பட்டுக்கோட்டைக்கு வழி எங்கே என்றால், கொட்டைப் பாக்கு பத்துப்பணம்'' என்பது போல அமைந்துள்ளது.

கோடநாடு எஸ்டேட் வழக்குகளைப் பொறுத்தவரையில், அதில் ஒன்றும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சிறுதாவூரை பொறுத்த வரையில், எனக்கும், அந்த இடத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கருணாநிதியால் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணையமே தெரிவித்துள்ளது.

கட்டாய மதமாற்ற சட்டத்தைப் பொறுத்தவரையில், அது எனது ஆட்சிக் காலத்திலேயே ரத்து செய்யப்பட்டுவிட்டது என்பதைத் தெரிவித்துக் கொள்வதோடு, இந்தச் சட்டத்தின் கீழ் சிறுபான்மையினருக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீட்டைப் பொறுத்த வரையில், இதற்காக ஒரு கமிஷன் அமைக்கப்பட்டதே எனது ஆட்சிக் காலத்தில் தான் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

இப்போது, தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை. ரவுடிகளின் ஆட்சி தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

கடந்த நான்கரை ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் நீதி, நேர்மை, நாணயம், ஜனநாயகம் எல்லாம் குழிதோண்டி புதைக்கப்பட்டுவிட்டன. கொலை, கொள்ளை, வழிப்பறி, கடத்தல், பதுக்கல் ஆகியவை கொடிகட்டி பறக்கின்றன.

சென்னை அண்ணா நகரை சேர்ந்த தொழிலதிபர் மகன் கீர்த்திவாசன் இரண்டு நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் கடத்தப்பட்டு இருக்கிறான். கடத்தப்பட்ட சிறுவனை மீட்க காவல் துறை மூலம் கடத்தல்காரர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக காவல் துறை ஆணையரே பேட்டி அளித்து இருக்கிறார். எனக்குத் தெரிந்த வரையில் பணம் கொடுத்து கடத்தப்பட்டவரை காவல் துறை மீட்டது இதுவே முதல் முறை. இதைவிட ஒரு வெட்கக்கேடு எதுவும் இருக்க முடியாது.

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் தேவையில்லை. தமிழகம் இருளில் மூழ்கடிக்கப்பட்டுவிட்டது. அனைத்துத் துறைகளிலும் தமிழகம் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. அனைத்துத் தரப்பினரும் மிரட்டப்படுகிறார்கள். அமைதிப் பூங்காவாக விளங்கிய தமிழ்நாடு அமளிக்காடாக மாறிவிட்டது. இது தான் தி.மு.க. அரசின் நான்கரை ஆண்டு கால சாதனை.

இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: