சனி, 6 நவம்பர், 2010

பலத்த மழை எச்சரிக்கை சென்னை அருகே “ஜல்” புயல் புதுவை அருகே நாளை கரையை கடக்கும்

பலத்த மழை எச்சரிக்கை
 
 சென்னை அருகே “ஜல்” புயல்
 
 புதுவை அருகே நாளை கரையை கடக்கும்சென்னை, நவ. 6-
 
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது.
 
இந்த நிலையில் சென்னைக்கு கிழக்கே வங்கக்கடலில் கடந்த வாரம் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. அது அந்தமான் அருகே மையம் கொண்டு இருந்தது.
 
இந்த காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று முன்தினம் தீவிர புயலாக மாறியது. இதற்கு ஜல் புயல் என்று பெயரிடப்பட்டு உள்ளது.
 
இந்த புயலானது நேற்று சென்னைக்கு கிழக்கே வங்க கடலில் 900 கி.மீ. தொலைவில் மையம் கொண்டு இருந்தது. அது மேற்கு மற்றும் வட மேற்கு திசையில் தமிழ் நாடு மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை நோக்கி மெதுவாக நகர்ந்து வந்தது. இன்று காலை சென்னையில் இருந்து 700 கி.மீ. தொலைவில் மையம் கொண்டு இருந்தது. அது மேலும் நகர்ந்து வருகிறது.
 
நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை அல்லது இரவில் புதுச்சேரிக்கும், ஆந்திர மாநிலம் நெல்லூருக் கும் இடையே புயல் கரையை கடக்கும். அப்போது மணிக்கு 50 முதல் 75 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
கடல் சீற்றத்துடன் இருக்கும் கடல் அலைகள் 1 மீ. முதல் 2 மீ. உயரத்துக்கு எழும்பும். எனவே மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.
 
நாகையில் 1-ம் நம்பர் புயல் எச்சரிக்கை கூண்டும், பாம்பனில் 2-ம் நம்பர் கூண்டும் ஏற்றப்பட்டு உள்ளது.
 
புயல் காரணமாக புதுச்சேரி மற்றும் வடதமிழ் நாட்டின் கடலோர மாவட் டங்களிலும் ஆந்திராவின் தெற்கு கடலோர பகுதியிலும் அடுத்த 24 மணி நேரத்துக்கு மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
புயலின் வேகம் நாளை முதல் அதிகரிக்கும். நாளை யும், நாளை மறுநாளும் புயலின் தாக்கம் இருக்கும். இந்தப் புயல் சென்னையை தாக்கும் அபாயம் உள்ளது.
 
இதற்கிடையே ஆந்திராவில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்களான கிழக்கு கோதாவரி, கிருஷ்ணா, மேற்கு கோதாவரி, பிரகாசம், நெல்லூர் ஆகிய மாவட்டங்களில் மழை கொட்டுகிறது. அங்கு மழைக்கு 7 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். 10 ஆயிரம் வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளது.
 
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது.
நுங்கம்பாக்கத்தில் 3.8 மி.மீ. மழையும், மீனம்பாக்கத்தில் 5 மி.மீ. மழையும் பெய்துள்ளது.

கருத்துகள் இல்லை: