அகமதாபாத்: பீகாரில் கிடைத்த படுதோல்வி, மற்ற மாநிலங்களிலும் எதிரொலிக்காமல் இருக்க காங்கிரஸ் நிர்வாகிகளை மாற்றத் திட்டமிட்டுள்ளார் ராகுல் காந்தி.
கட்சியின் முக்கியப் பதவிகளுக்கு நியமன முறையை ஒழித்துவிட்டு தேர்தல் மூலம் மட்டுமே நிர்வாகிகளை தேர்வு செய்ய அவர் திட்டமிட்டுள்ளார்.
முதல் கட்டமாக இளைஞர் காங்கிரஸ், இந்திய தேசிய மாணவர் கூட்டமைப்பில் இப்போது நடைமுறையில் உள்ள நியமனப் பதவிகளை முற்றிலுமாக நீக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
குஜராத் மாநிலம் ஆமதாபாதில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் வெள்ளிக்கிழமை கலந்துரையாடிய ராகுல் காந்தி, கட்சியில் புதிய மாற்றங்களைக் கொண்டு வருவது குறித்து ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் செய்தியாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.
கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய தேசிய மாணவர் கூட்டமைப்பின் (என்.எஸ்.யு.ஐ.) தலைவர் வினய் தோமர் கூறும்போது, என்.எஸ்.யு.ஐ., இளைஞர் காங்கிரஸ் அமைப்பில் பல்வேறு நியமன பதவிகள் உள்ளன, அதில் மாற்றங்கள் கொண்டு வர ராகுல் விரும்புகிறார் என்றார்.
"அரசியல் குடும்ப பின்னணி கொண்டவர்களே அரசியலில் நுழைய முடியும் என்ற நிலை இப்போது உள்ளது. நானே இதற்கு சிறந்த உதாரணம். ஆனால், இந்த நடைமுறையை மாற்ற வேண்டும். சாமானிய மக்களும் அரசியலில் பங்கேற்க வேண்டும் என்பதே என் விருப்பம்," என்று ராகுல் காந்தி பேசியதாக வினய் தோமர் தெரிவித்தார்.
குறிப்பாக உத்தரப் பிரதேசம், பீகார், மகாராஷ்டிரம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் புதிய நிர்வாகிகள் நியமனம் உடனடியாக இருக்கும் என்றார் அவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக